‘குழலி’ திரைப்படம் உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டது. அது சிறந்த திரைப்படம், விமர்சனரீதியான திரைப்பட விருது, பின்னணி இசைக்கான விருது, சிறந்த நடிகைக்கான விருது என 16 சர்வதேச விருதுகளைப் பெற்ற ‘குழலி’ திரைப்படம் செப்டம்பர் 23ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இத்திரைப்படத்தினை ‘மொழி திரைக்களம்’ நிறுவனம் வெளியிடுகிறது.
நடிப்பிற்கான தேசிய விருதையும், தமிழக அரசு விருதையும், பெற்ற ‘காக்கா முட்டை’ விக்னேஷ் கதை நாயகனாகவும், ஆரா கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் ‘குழலி’ திரைப்படம் முற்றிலும் கிராமத்து எதார்த்த முகங் களோடு சிறந்த திரைப்படமாக உருவாகி உள்ளது.
இப்படத்திற்கு D.M. உதயகுமார் இசையமைக்க, கார்த்திக் நேத்தா, தனிக்கொடி, ராஜாகுருசாமி மற்றும் ஆக்னஸ் தமிழ்செல்வன் ஆகியோர் பாடல்கள் எழுத, செந்தில் – ராஜலட்சுமி இணையர் பாடல் பாடியுள்ளனர். ஷமீர் இன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
சிறந்த திரைக்கதை, வசனத்துடன் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் செரா. கலையரசன்.
“ஒரு சமூகத்தின் நீதி கல்விக் கூடங்களில்தான் பிறக்கிறது. அங்கே இருந்துதான் ஒவ்வொரு சமூகமும் முதல் ஒளியை வாங்கிக்கொள்ள முடியும்.” என சில வார்த்தைகளில் கதையின் மண் மணத்தின் ஆழம் பற்றிப் பேசுகிறார், நீண்ட கால சினிமா அனுபவங்களேடு களம் காணும், புதுமுக இயக்குநர் செரா. கலையரசன்.
‘இன்றைய சினிமாவில் மிகவும் துணிச்சாகப் பேச வேண்டிய விஷயம் இது. அதனால்தான் ஒரு கை பார்ப்போம் என இறங்கி வந்துவிட்டேன். ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்துக்குக் பொறுப்பாகி விடுகிறோம். வறுமை, ஆதிக்கச் சக்திகளின் பணபலம் என நிறைய விஷயங்கள் இதன் பின்னணியில் உண்டு.
இந்தியாவின் வல்லரசு கனவு… சந்திரனுக்கு விண்கலம் என பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கிற நாம், இன்னொரு பக்கம் ரணங்களை உள்நோக்கிப் பார்ப்பதில்லை. அப்படி ஒரு பார்வை குழலி முன்வைக்கிறது. தீர்க்கமான அரசியல் பார்வையும் இதில் இருக்கிறது. இது சமூகத்தோடு பேசும் கதை” என்றார் இயக்குநர் செரா. கலையரசன்.
இப்படத்தை K.P.வேலு, S.ஜெயராமன் மற்றும் M.S.ராமசந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.
இப்படத்திற்கான வெளியீட்டுப் பணிகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது.