எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய படம் ‘இடம் பொருள் ஏவல்’. திருப்பதி பிரதர்ஸ் இயக்குநர் என்.லிங்குசாமி, என்.சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பில் வைரமுத்து பாடல் வரிகளுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
2015ஆம் ஆண்டே திரைக்கு வந்திருக்கவேண்டிய இந்தப் படம், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ‘வாரியர்’ படத்தின் மூலம் ஏற்பட்ட நிதி சிக்கலில் மாட்டிக்கொண்டு தள்ளிப்போனது. அடுத்து கொரோனா பொதுமுடக்க காலத்தில் இரண்டு வருடங்கள் தள்ளிப்போனது. பின் தயாரித்து ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் படம் சிறப்பாக வந்துள்ளதால் நேரடியாக தியேட்டரில் வெளியிட முடிவு செய்யப்பட்டது.
கடந்த சில தினங்களாக ‘இடம் பெருள் ஏவல்’ படத்தின் அப்டேட்களை இயக்குநர் சீனு ராமசாமி இணையத்தில் கொடுத்து வந்தார். அது வைரலானது. சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான ‘மாமனிதன்’ திரைப்படம் தியேட்டரைவிட ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து வெளிவரவுள்ள ‘இடம் பொருள் ஏவல்’ நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ரஜேஷ் ஆகியோர் நடித்துள்ளர்.
திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் மலை விவசாயக் கிராமங்களில் படம் பிடிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்து அப்பகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பாலபாரதி படம் பற்றி சிறப்பான கருத்து தெரிவித்துள்ளார்.
“இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கக் கூடிய இந்தப் படம் சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக திண்டுக்கல், மதுரை மாவட்ட மலைக் கிராமத்தில் உள்ள மக்களினுடைய மிக முக்கியமான வாழ்க்கைப் பிரச்சினைகளையும் பேசுகிறது இப்படம். சமீபத்தில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இந்த ‘இடம் பொருள் ஏவல்’ முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.
திரைப்படக் கலைஞர் விஜய் சேதுபதி அவர்களும் மற்ற திரைக் கலைஞர்களும் மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தினுடைய சில மண்ணின் மைந்தர்கள் இந்தப் படத்தில் இயல்பான கதாபாத்திரத்தோடும் வருகிறார்கள். இந்தத் திரைப்படம் அனைவரும் கண்டு ரசிப்பதற்கு மிக உகந்த படம் என்கிற முறையிலே இது தமிழகதில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தைச் சிறப்பாக இயக்கிய திரைக் கலைஞர் சீனு ராமசாமியைப் பாராட்டுகிறேன்” என்றார்.