“தனுஷுடன் நடிக்க பயந்தேன்” || ‘வாத்தி’ நாயகி சம்யுக்தா OpenTalk

1 0
Spread the love
Read Time:10 Minute, 2 Second

சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் & பார்ச்சூன் போர் சினிமாஸ் சார்பில்  நாகவம்சி S – சாய் சௌஜன்யா தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழி படமாக உருவாகியுள்ளது ‘வாத்தி’. தெலுங்கு திரையுலகின் இளம் இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் நாயகி சம்யுக்தா மேன்ன வாத்தி படத்தில் நடிகர் தனுஷுடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

“தயவுசெய்து சம்யுக்தா மேனன் என்று என்னை அழைக்க வேண்டாம். எந்த ஒரு ஜாதி பெயரையும் சேர்த்துக்கொள்ள நான் விரும்பவில்லை. சம்யுக்தா என்றுதான் இந்த ‘வாத்தி’ பட டைட்டில் கார்டில் கூட குறிப்பிட்டு இருக்கிறார்கள். பள்ளியில் பேர் சேர்க்கும்போது பெரியவர்கள் அப்படிச் சேர்த்துவிட்டதை நாம் அப்போது ஒன்றும் செய்ய முடியாது. இப்போது மாற்றிக் கொள்வது என்பது நம் விருப்பம்தானே. வேறு சில நட்சத்திரங்கள் இப்படி தங்கள் பெயருடன் ஜாதிப்பெயரை சேர்த்துக் கொண்டிருப்பதைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல முடியாது

தமிழ் எனது இளமைக் காலத்தில் இருந்தே எனக்கு மிகவும் பிடித்த மொழி. குறிப்பாக சின்ன வயதில் ‘முஸ்தபா முஸ்தபா’ பாடல் மூலம் தமிழ் மீது ரொம்பவே ஆர்வமானேன். அதன்பிறகு தமிழ்ப் பாடல்களை அதிகமாகக் கேட்க ஆரம்பித்தேன். இதுவரை நான் கேட்ட பாடல்களில் தமிழ் மொழியைப் போல வேறு எந்த மொழியிலும் இனிமையான பாடல் வரிகளைக் கேட்டதில்லை. சினிமா பாடல்களிலேயே அதிகம் இனிமையான பாடல் வரிகளைக் கொண்டது தமிழ் மட்டும்தான்.

இந்தப் படத்திற்குக்கூட நானே தமிழில் டப்பிங் பேச விரும்பினேன். அதற்காக முயற்சி செய்தாலும், படப்பிடிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் என்னால் டப்பிங் பேச முடியாமல் போனது. மலையாளத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு இரண்டு மொழியும் எனக்குத் தெரியும். படப்பிடிப்பின்போது எனது கதாபாத்திரத்திற்காக முதலில் தமிழ் வசனங்களைப் பேசுவதற்காகத் தயாராகி, அந்தக் காட்சி படமாக்கி முடிந்ததும் தெலுங்கு வசனங்களுக்காக மீண்டும் என்னைத் தயார்ப்படுத்திக் கொள்வேன்.

தனுஷ் போன்ற மிகச் சிறந்த நடிகருடன் நடிக்கும்போது கொஞ்சம் டென்ஷன் இருக்கவே செய்தது. காரணம் அவர் சிங்கிள் டேக்கில் ஓ.கே. செய்பவர். என்னால் அவருக்கு எதுவும் தொந்தரவு வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அப்படியே மீறி சில தவறுகள் வந்தாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார் தனுஷ். தமிழில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு சில படங்களில் நடித்தேன். அப்போது அந்தப் படங்களில் நடிப்பது குறித்து நான் எடுத்தது குழந்தைத்தனமான முடிவு. மீண்டும் ஒரு நல்ல கதாபாத்திரம் மூலமாகத்தான் தமிழுக்குத் திரும்ப வேண்டும் என்று நினைத்தேன். அது வாத்தி படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.

இந்தப் படத்தில் மாணவர்களுடன் ரொம்பவே ஜாலியாகப் பழகும் மீனாட்சி என்கிற உயிரியல் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இதற்காக நான் பள்ளியில் படித்தபோது இதே போன்று குணாதிசயங்களுடன் எனக்குப் பாடம் சொல்லித் தந்த தீபா டீச்சரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அதையே நடிப்பில் வெளிப்படுத்தினேன்.

இந்தப் படத்தில் கல்வி முறையில் உள்ள சில பிரச்சனைகள் பற்றிக் கூறியுள்ளோம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எனது பள்ளிக் காலகட்டம் என்பது மோசமான அனுபவமாகவே இருந்திருக்கிறது. என்னுடன் படித்தவர்கள் வெவ்வேறு விஷயங்களில் நன்கு திறமையானவர்களாக இருந்தாலும் படிப்பில் அவர்கள் தடுமாறுவதைப் பார்க்க முடிந்தது. இன்ஜினியரிங் படித்த பெண் கூட அதை முடித்துவிட்டு தனக்கு விருப்பமான நடனத் துறையில்தான் சேர்ந்தார். நானும் பிளஸ் டூ மட்டுமே படித்துள்ளேன். சினிமா மீதான ஆர்வம் இருந்ததால் இங்கே வந்து விட்டேன்.

பெர்சனலாகச் சொல்லவேண்டும் என்றால் ஒரு டிகிரி இருந்தால்தான் நமக்குப் பிடித்த வேலையைப் பார்க்க முடியும் என்று சொல்லப்படுவதை நான் நம்பவில்லை. அதேசமயம் இந்தப் படத்தில் நடித்தபோது கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்குப் படிப்பு எவ்வளவு பெரிய மாற்றத்தை அவர்களது வாழ்க்கையில் கொண்டுவருகிறது என்பதை உணர முடிந்தபோது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது.

வாத்தியில் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் படத்தில் இருந்து நான் விலகி விட்டதாக சில செய்திகள் வெளியாகின. யாரோ அழகாக கற்பனை செய்து உருவாக்கிய செய்தி அது. அதனால் எனக்கு முன்பை விட அதிக எதிர்பார்ப்பு, பப்ளிசிட்டி, அதிக ரசிகர்கள் என நன்மையே கிடைத்தது.

மலையாளத்தில் நடிப்பதையும் தமிழ்ப் படங்களில் நடிப்பதையும் ஒப்பீடு செய்யத் தேவையில்லை. தமிழ் சினிமாவில் எந்தப் படங்களை கமர்சியலாக எடுக்க வேண்டும், எந்தப் படங்களை ரியலிஸ்டிக்காக எடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மலையாளத்தில் கூட தமிழ் படங்களுக்கான வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது.

முதன்முறையாக இந்தப் படத்தில்தான் ஒரு நடன இயக்குநர் சொல்லிக் கொடுத்த அசைவுகளுக்கு நடனம் ஆகியுள்ளேன். தெலுங்கில் விருபாக்சி, டெவில் என இரண்டு படங்களில் நடித்துள்ளேன். எல்லாமே பீரியட் படங்கள் தான். எப்போது ஒரு கதையைக் கேட்டதும், உடனே நான் நடிக்கிறேன் என்று சொல்கிறேனா அந்த படங்கள் எனக்கு நன்றாகவே அமைந்திருக்கின்றன. யோசித்து சொல்கிறேன் எனக் கூறி பின்னர் ஒப்புக்கொண்ட படங்கள் பெரிய அளவில் பலன் தரவில்லை. கதையைத் தாங்கிப் பிடிக்கும் கதையின் நாயகியாக நடிக்க ஆசைதான் என்றாலும் அதற்குள் இன்னும் சில படங்களில் நடித்துவிட விரும்புகிறேன். அதேசமயம் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழலையும் ரொம்பவே அனுபவித்து நடித்து வருகிறேன்.

வாத்தி படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்பு வேறொரு படத்திற்காக தென்காசிக்குச் சென்றிருந்தபோது, அப்படியே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்துவிட்டு ஏற்கனவே யூட்யூப் மூலமாக கேள்விப்பட்டிருந்த மதுரை பன் புரோட்டா சாப்பிடலாம் என முகத்தில் மாஸ்க் அணிந்தபடி ஒரு ஹோட்டலுக்கு சென்றேன். அப்போதுதான்தான் ‘வா வாத்தி’ பாடல் ரிலீஸ் ஆகியிருந்த நேரம். நான் மாஸ்கை கழட்டியதுமே அங்கிருந்து என்னைப் பார்த்த சிலர் ‘ஏ நம்ம டீச்சரம்மா’ என்று ஆச்சரியமாக கூவினார்கள். அந்தப் பாடல் ஏற்படுத்திய மேஜிக்தான் இது. இந்தப் படத்தின் மூலம் நான் எனக்கென எடுத்துச் செல்வது இந்தப் பெருமையைத்தான்” என்று கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!