தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வரும் பொங்கல் பெருங்கொண்டாட்டமாக இருக்கப்போகிறது. காரணம் தமிழ் சினிமாவின் இரு தலைகளின் படங்களும் மோதவிருக்கின்றன. பொங்கல் ரிலீஸ் படங்கள் என்றாலே தமிழ் சினிமாவில் கொண்டாட்டம்தான் அதிலும் விஜய், அஜித் படங்கள் சேர்ந்து ஒரே நாளில் வெளியானால் எப்படி இருக்கும்?
வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை விடுமுறையைக் கொண்டாட்ட அஜித் நடித்த துணிவு படமும் விஜய் நடித்த வாரிசு படமும் நேருக்கு நேர் மோதுகின்றன. அதன் எதிரொலியாக இப்போதே அவர்களது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எதிரிவருகிறது.
வழக்கமான விஜய் படங்கள் வெளியாகும்போது சிறு சர்ச்சையில் சிக்கி வெளியாவது வழக்கம். ஏற்கெனவே தலைவா, மெர்சல் போன்ற படங்களின்போது ஏற்பட்ட சிக்கலைத் தவிர்க்க முதலமைச்சர்களைச் சந்தித்து சரிகட்டினார். தற்போது தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள் ஆந்திரா தியேட்டர்களில் நேரடித் தெலுங்குப் படங்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும். வேறு மொழிப் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காது என்று எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால் வாரிசு படத்துக்கும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் கடுப்பில் இருக்கிறார்கள்.
வழக்கமாக நேரடியாக அஜித் ரசிகர்கள் மேல் பொங்கும் விஜய் ரசிகர்கள் இப்போது உதயநிதி ஸ்டாலின்மேல் கடுப்பில் இருக்கிறார்கள்.
காரணம் என்ன?
தமிழில் மாபெரும் வெளியீட்டு நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட். இந்த நிறுவனம் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிகப் படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்து தமிழில் வெளியிட்ட படங்கள் 21. இதன் மூலம் ரெட்ஜெயன்ட் அடைந்த வர்த்தகத் தொகை ரூ.2000 கோடி. கிட்டத்தட்ட இந்த 8 மாத காலத்திற்குள் ரெட்ஜெயன்ட் அடைந்த லாபம் மட்டுமே ரூ.500 கோடி.
சரி, விஜய் வாரிசு படத்திற்கு என்ன பிரச்சினை என்கிறீர்களா?
விஜய் நடித்த பீஸ்ட் படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. அதை உதயநிதியின் ரெட்ஜெயன்ட்தான் வெளியிட்டது. 800 தியேட்டர்களில் வெளியிட்டு பீஸ்ட் படம் சரியாக போகாததால் 200 தியேட்டராகக் குறைக்கப்பட்டது. ஆனால் கேஜிஎப் படம் எதிர்பார்த்ததைவிட பெரிய அளவில் ரசிகர்களால் பார்க்கப்பட்டது. அதனால் கேஜிஎப் படத்திற்கு 400 தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டது. இது விஜய்யைக் கடுப்பேற்றியது. அதனால் தற்போது விஜய் நடிப்பில் வெளியாகும் வாரிசு படத்தை தெலுங்குத் தயாரிப்பாளரான தில்ராஜின் செவன்த் ஸ்கிரீன் மூலம் வெளியிடுகிறார் விஜய். ஆனால் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட்ஜெயன்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது.
அதனால் என்ன என்கிறீர்கள்?
பொதுவாக ரெட்ஜெயன்ட் வாங்கிய படங்களை எப்படியாவது பெரிய அளவில் ஓடவைத்து லாபம் பார்ப்பதோடு நல்ல பெயரையும் வாங்கும் ரெட்ஜெயன்ட். அதற்காக தற்போதே ரெட்ஜெயன்ட் துணிவு படத்துக்காக சுமார் 800 தியேட்டர்களை புக் செய்து லாக் செய்துள்ளது என்பது விஜய்க்கு மேலும் கடுப்பேற்றியுள்ளது.
அஜித் நடித்த துணிவு ரூ.200 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விஜய் நடித்த வாரிசு படமும் ரூ. 200 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 1100 தியோட்டர்கள் உள்ளன. அதில் அதிகபட்சமாக 800 தியேட்டர்களில் படம் ரிலீசானால்தான் படத்துக்குப் போட்ட பணத்தை எடுக்கமுடியும். இல்லை என்றால் நஷ்டம்தான். இந்த நிலையில் 800 தியேட்டர்களை ரெட்ஜெயன்ட் லாக் செய்துள்ளதால் விஜய் படம் வாரிசு வெளியானால் லாபத்தை ஈட்டாது என்கிற கணக்கு விஜய்க்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. அதனால் விஜய் உடனடியாக பனையூரில் 3 மாவட்ட ரசிகர்களைக் கூட்டி பெரிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அதில் பேசிய விஜய், துணிவு படத்துக்காக 800 தியேட்டர்கள் லாக் செய்யப்பட்டதைப் பற்றியும் வாரிசு படம் வெற்றியடைய வைக்கவேண்டும் என்றும் முதன்மைக் கருத்தாக ரசிகர்களிடம் பேசியுள்ளார். காரணம் வாரிசு படத்தின் பட்ஜெட் ரூ.200 கோடி. அதில் விஜய்யின் சம்பளம் மட்டுமே ரூ.120 கோடி. வாரிசு தோல்வி அடைந்தால் விஜய்யின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும். அதனால் விஜய் பொங்கல் வெளியீட்டில் வாரிசு படத்தை எப்படியாவது வெற்றியடையச் செய்விக்கவேண்டும் என்று கங்கனம் கட்டி பேசியிருக்கிறார்.
வாரிசு சிக்கல் வர ரெட்ஜெயன்ட்தான் காரணம். துணிவு படத்தை வெளியிட வாரிசுக்குத் தடை செய்ய தெலுங்குத் தயாரிப்பாளர்களை உதயநிதி தூண்டிவிடுகிறார். அதற்காகத் துணிவு படத்துக்கு இப்போதே 800 தியேட்டர்களை லாக் செய்துள்ளார். இவர்கள் ஆட்சியில் தமிழ் சினிமா துறையில் இவர்கள் வைத்ததுதான் சட்டம். இவர்களை மீறி எந்த புதிய வெளியீட்டாளரும் தயாரிப்பாளரும் படம் தயாரிக்கமுடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு வெளியீட்டு உரிமையை வழங்காவிட்டால் எந்தப் படத்துக்கும் தியேட்டர் கிடைக்காமல் செய்கிறார்கள் என்று விஜய் சங்கப் பிரதிநிதிகள் பேசியதாகத் தெரிகிறது.
இதைக் கேள்விப்பட்ட ரெட்ஜெயன்ட் தரப்பு, நாங்கள் யாரிடமும் படங்களை எங்களிடமே கொடுங்கள், நாங்கள்தான் வெளியிடுவோம் என்று கட்டாயப்படுத்துவதில்லை. எங்கள் வெளியீட்டு உத்தி தரமாக நேர்மையாக இருக்கிறது. வாங்குகிற படங்கள் லாபத்தில் ஓட்டிக் காட்டுகிறோம். கணக்கு வழக்குகளும் மிகச் சரியாக இருக்கின்றன. அதனால் எங்களைத் தேடி வருகிறார். நாங்கள் யார் படத்தையும் தடுக்கவில்லை என்கின்றனர்.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க ஏற்கெனவே விஜய் ஜெயலலிதாவைச் சந்தித்திருக்கிறார். பின் எடப்பாடி பாழனிச்சாமியையும் சந்தித்திருக்கிறார். தற்போது வாரிசு வெற்றிக்காக உதயநிதி தந்தை தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்திப்பாரா என்பது பெரிய கேள்வி.
இந்தச் சந்தர்ப்பத்தில் அஜித் தரப்பு ரசிகர்கள் இவர்களின் வாக்குவாதங்களுக்கு எந்தவித எதிர்வினையும் காட்டாமல் தங்கள் தல அஜித் படத்தின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார்கள்.
இந்தப் பொங்கல், சினிமா ஜல்லிக்கட்டுப் போட்டியாகவே வாரிசும் துணிவும் இருக்கப்போகிறது என்பது நிச்சயம்.