தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகை வெளியீடாக ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, முக்கிய வேடங்களில் சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராம், சம்யுக்தா சண்முகநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் விவேக் பாடல்களுடன் இந்தப் படத்திற்கு முதன்முதலாக வசனமும் எழுதியுள்ளார்.
தமிழில் வெளியாகி இரண்டு தினங்கள் கழித்து தற்போது தெலுங்கிலும் ‘வாரசுடு’ என்கிற பெயரில் வெளியாகி உள்ள இந்தப் படம் அங்கேயும் அபரிமிதமான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டனர்.
படத்தின் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி பேசும்போது, “வாரிசு ஒரு படம் அல்ல.. அது ஒரு நம்பிக்கை.. தளபதி விஜய், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் என் மீது வைத்த நம்பிக்கை. அந்த நம்பிக்கையை வெற்றியாக்கிய தமிழ் மக்கள் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் ஆரம்பித்தபோதும், முடிவடைந்த போதும், அவ்வளவு ஏன், படம் இப்போது வெளியாகி இருக்கும் நிலையிலும் கூட விஜய் என்னிடம் கேட்ட ஒரே கேள்வி நீங்கள் மகிழ்ச்சிதானே என்பதுதான். அந்த ஒரு வார்த்தை போதும் எனக்கு. இந்தப் படம் பார்த்த என் தந்தை, படத்தில் சரத்குமாரின் கதாபாத்திரம் மற்றும் அவரது நடிப்பை பார்த்துவிட்டு படம் முடிந்ததும் வெளியே வந்து என்னை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார். என் அப்பாவிடம் இருந்து எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக இதை கருதுகிறேன்” என்றார்.
பாடலாசிரியர் விவேக் பேசும்போது, “முதன்முதலாக மெர்சல் படத்திற்கு முழு பாடல்களையும் எழுதும் பொறுப்பை என்னை நம்பி கொடுத்தார் தளபதி விஜய். அதேபோல இந்த வாரிசு படம் மூலம் முதன்முதலாக வசனம் எழுதும் மிகப்பெரிய பொறுப்பையும் என்னை நம்பி விஜய்யும் இயக்குனர் வம்சியும் ஒப்படைத்தார்கள். அதை ஓரளவு நிறைவேற்றி இருக்கிறேன் என நம்புகிறேன். இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த ஒரு அருமையான காட்சி ஒன்று படத்தில் நீளம் காரணமாக இடம் பெறவில்லை. அதை எப்படியாவது விரைவில் வெளியிட முயற்சிக்கிறோம்” என்று கூறினார்.
தயாரிப்பாளர் தில் ராஜு பேசும்போது, “விஜய் நடித்த படங்களில் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதேபோல தெலுங்கில் ஆக்சன் பட ஹீரோக்களான ஜூனியர் என்.டி.ஆரின் பிருந்தாவனம், பிரபாஸின் மிஸ்டர் பர்ஃபெக்ட், மகேஷ்பாபுவின் சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லி செட்டு ஆகிய படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இவை எல்லாமே மாஸ் ஹீரோக்களின் குடும்ப கதையம்சம் கொண்ட படங்கள். அப்படி இந்த வாரிசு படத்தின் கதையை வம்சி என்னிடம் சொல்லியபோது இதில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறினேன். விஜய்யுடன் ஒரே சந்திப்பிலேயே இந்த கதை ஓகே ஆனது.
சில படங்கள் தயாரிக்கும்போது பணம் நிறைய கிடைக்கும். சில படங்களில் பாராட்டு கிடைக்கும். இந்த வாரிசு படத்தில் பணம், பாராட்டு என இரண்டுமே ஒரு சேர கிடைத்துள்ளது. ஒரு மாதத்திற்கு பிறகும் கூட இந்த படம் தியேட்டர்களில் ஹவுஸ் புல்லாக தான் ஓடும். காரணம் குடும்பம் குடும்பமாக இந்த படத்தை வந்து பார்ப்பார்கள்” என்று கூறினார்.
நடிகர் சரத்குமார் பேசும்போது, “தமிழில் எப்படி தயாரிப்பாளர் ஆர்பி.சௌத்ரி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து தயாரிக்கிறாரோ அதுபோன்று தான் தெலுங்கில் தில் ராஜூவும். பெயருக்கேற்றபடி தில்லானவர். இயக்குனர் வம்சி தெலுங்கு இயக்குனர் என சொல்கிறார்களே என்று கவலைப்பட வேண்டாம் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது அதில் வெளிப்படும் வார்த்தைகளில் பிழை கண்டுபிடிக்க தேவையில்லை. அப்படி பேசும்போது தவறு கண்டுபிடித்தாலும் நாம் அதற்கு விளக்கம் அளிக்கவும் தேவையில்லை..
இந்த படத்தில் விஜய்யுடன் நடித்ததால் அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கும் நான் சென்றுள்ளேன். சொல்லப்போனால் இப்போது நான் 40 வயது இளைஞனாக தான் உணர்கிறேன். பாடலாசிரியர் விவேக் இந்த படத்தில் வசனகர்த்தாவாகவும் பிரமிக்க வைத்துள்ளார். அவரிடம் சில வார்த்தைகள் குறித்து விவாதித்தேன். அந்த அளவிற்கு நல்ல வசனங்களை இந்த படத்தில் கொடுத்துள்ளார் விவேக்.
நடிகை சங்கீதா ஸ்ரீகாந்தை கன்னத்தில் ஓங்கி அறையும் காட்சியை பார்த்து அதிர்ந்தேன். நிஜமாகவே அறைந்தாரா என தெரியாது. ஏனென்றால் ராதிகா இதுபோன்ற விஷயத்தில் அப்படித்தான் அறைந்து விடுவார்.. இந்த படத்தில் உறவுகள் பற்றிய ஒரு அழகான மெசேஜ் இருக்கிறது. அதனால் பலரும் இரண்டாவது முறை, மூன்றாவது முறை என குடும்பத்துடன் இந்த படத்தை பார்க்க வருகிறார்கள். வாரிசு படத்துடன் வெளியாகி உள்ள துணிவு படமும் ஹிட் ஆகட்டும்.. அதேபோல இங்கே வெளியுள்ள பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி படங்களும் நன்றாக ஓட வேண்டும்.. அப்படி ஓடினால் தான் இந்த திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கும்” என்று கூறினார்.