தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகை சமந்தா மயோசிடிஸ் (Mayositis) எனப்படும் (தசை அழற்சி) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அறியப்பட்டதும் திரை உலகினர் மட்டுமின்றி ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
தற்போது அவர் நடித்து வெளியான சகுந்தலா திரைப்படத்தின் புரமோஷனுக்குக்கூட வர இயலாத நிலையில் அந்தப் படம் குறித்த புரமோஷன் வீடியோவில் மயோசிடிஸ் நோய் குறித்து சமூக வலைதளத்தில் கனத்த இதயத்தோடு கண்ணீர் கசியத் தெரிவித்தார் சமந்தா.
அவர் பேசிய வீடியோவில் “நோயில் இருந்து குணமடைந்த பிறகு, இதைப் பற்றி வெளியே சொல்லலாம் என எதிர்பார்த்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட நோயில் இருந்து குணம் பெற அதிக நாட்கள் தேவைப்படுகிறது. எப்போதும் தைரியத்துடன் இருக்க வேண்டியது இல்லை என்பதை உணர்ந்தேன். இந்தப் பாதிப்பை ஏற்றுக்கொள்ள மிகவும் கடினமாக உள்ளது. நான் விரைவில் குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர்.
உணர்ச்சி ரீதியாக, உடல் ரீதியாக என நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் இரண்டையும் கடந்துள்ளேன். இந்த நாளை என்னால் கையாள முடியாது என நினைத்தேன். ஆனால் அதுவும் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. நான் குணமடைவதற்கான நாளை நெருங்கிவிட்டேன் என்று தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.
சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்கிற நோய் ஏற்பட்டுள்ளது என்று தெரிந்த பிறகுதான் அந்த நோய் குறித்த தகவல்கள் வலைதளத்தில் வேகமாகத் தேடப்பட்டது. அதுகுறித்து தேடிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோய், தசைகளில் ஏற்படும் வீக்கமே. மயோசிடிஸ் என்பது எலும்புகளை இணைக்கக்கூடிய தசைகளை தாக்கும் மயோபதி நோயாகும். இது பொதுவாக கைகள் மற்றும் தோள்கள், கால்கள், இடுப்பு, வயிறு மற்றும் முதுகுத்தண்டில் உள்ள தசைகளை பாதிக்கிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபரின் உடல் தசைகள் மீது நோயெதிர்ப்பு அமைப்பு நடத்தும் தாக்குலால் தசைகள் பாதிப்படையும். இது நாட்கள் செல்லச் செல்ல தசைகளை வீக்கமடைய வைக்கிறது. இந்த வீக்கமானது கடைசியில் தசைகளை பலவீனமாக்குகிறது.
மயோசிடிஸ் நோய் ஏற்பட உறுதியான காரணம் என்ன என்பது குறித்து விஞ்ஞானிகளால் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றாலும், சுற்றுச்சூழல் மற்றும் மரபணு இந்நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதன்படி, வைரஸ்கள், பாக்டீரியாக்கள், புற ஊதா கதிர்வீச்சு, புகைபிடித்தல், போதை மருந்துகள், ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ், தூசி, வாயு அல்லது புகை ஆகியவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மயோசிடிஸ் கீழ்க்காணும் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.டெர்மடோ-மயோசிடிஸ், 2. இன்க்லூஷன்-பாடி மயோசிடிஸ், 3. ஜுவனைல் மயோசிடிஸ், 4. பாலிமயோசிடிஸ் 5. டாக்ஸிக் மயோசிடிஸ்.
இதன் அறிகுறிகள் வலியுடன் அல்லது வலி இல்லாமல் தசை பலவீனத்தை உணர்தல், நடந்த பின்னர் அல்லது நின்ற பின்னர் சோர்வாக உணர்வது, சரியாக நடக்க முடியாமல் தடுமாறுவது, படிக்கட்டுகளில் ஏறுவதில் சிரமம், வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுதல்.
மயோசிடிஸைத் தடுக்க எந்த வழியும் இல்லை. அதேபோல் அதனை முழுமையாக குணப்படுத்தவும் எந்தவித சிகிச்சையும் இல்லை எனக் கூறப்படுகிறது. மயோசிடிஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவர்களின் அன்றாட அறிகுறிகளில் இருந்து காப்பதற்கான சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது.
இந்த விசித்திரமான நோயிலிருந்து சமந்தா மீண்டுவரவேண்டும் என்று இந்தச் செய்தியைப் படித்தபின் பல்லாயிரம் மக்கள் வேண்டிக்கொள்வார்கள். அந்த நோயைத் தடுப்பதற்கான மருத்துவ முறையும் வரும் என நம்புகிறோம்.