கிறிஸ்துமஸ் ஈவ் (Christmas Eve) என்பது கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் அல்லது இயேசு கிறிஸ்து பிறந்த நாள் என்று குறிப்பிடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் தினத்தைவிட கிறிஸ்துமஸ் இரவு மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக கிறிஸ்தவர்களின் கிறிஸ்துமஸ் விழா. இரவில் தான் தொடங்கும். அதற்கான காரணம் என்னவென்றால் விவிலியத்தில் வரும் படைப்புக் கதையில் குறிப்பிடப்படும் முதல் நாள் என்பதில் முதலில் இரவும் அடுத்தது பகலும் என்று வருகிறது. அது போல் விவிலியத்தில் பழைய ஏற்பாட்டில் யூதர்களின் ஓய்வு நாள் சடங்கு, சூரியன் மறைந்த பின்புதான் தொடங்கும். ஆகவே கிறிஸ்துமஸ் இரவு, கிறிஸ்துமஸ் நாளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. மேலும் கிறிஸ்துமஸ் இரவில் தான் இயேசு கிறிஸ்து பிறந்ததாக கிறிஸ்தவ பாரம்பரியமும் கூறுகிறது.
இயேசு யூதேயாவிலுள்ள பெத்லகேமில் மரியாவுக்கும் ஜோசப்புக்கும் பிறந்தார். கி.பி.240களில் மார்ச் 28ம் தேதி கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டம் நிகழ்ந்ததாக அக்கால கிறிஸ்தவ நாள்காட்டி குறிப்பிடுகிறது. பிறகு, டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கம் கி.பி.336ஆம் ஆண்டு ரோம் நகரில் தோன்றியது. இந்தத் தேதிக்கு, போப் முதலாம் ஜூலியஸ் அங்கீகாரம் வழங்கினார். கிறிஸ்துமஸ் கேரல் கீதங்கள் 4ஆம் நூற்றாண்டு முதல் ஆலயங்களிலும், 13ம் நூற்றாண்டு முதல் தெருக்களிலும் பாடப்படுகின்றன. கிறிஸ்துமஸ் விழாவின்போது, இயேசு பிறந்த காட்சியைக் குடிலாக அமைக்கும் வழக்கத்தை, அசிசி புனித பிரான்சிஸ் 1223ம் ஆண்டு தொடங்கி வைத்தார் என்று கூறப்படுகிறது.
இயேசு கிறிஸ்து கி.பி. சுமார் 33ம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் உயிர்ப்பு ஞாயிறைத்தான் கிறிஸ்தவம் கொண்டாடியது.
ஆரம்பகால கிறிஸ்துவ சமூகங்களில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் விரும்பப்படவில்லை. இருப்பினும், நான்காம் நூற்றாண்டில், திருச்சபைகள் இயேசுவின் பிறப்பை விடுமுறையாக நிறுவ முடிவு செய்தனர். குளிர்காலக் கொண்டாட்டங்களின் தாக்கங்கள் இதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கிறிஸ்துமஸ் ஈவ் என்றால் என்ன?
கிறிஸ்துமஸ் என்பது அரவணைப்பு மற்றும் ஒற்றுமையின் கொண்டாட்டம். கிறிஸ்மஸ் ஈவ் என்பது கிறிஸ்மஸுக்கு முந்தைய நாள், எல்லோரும் பண்டிகையை எண்ணி மகிழ்ச்சியாக இருக்கும் தருணம். கிறிஸ்மஸைக் கொண்டாட மக்கள் ஒருவருக்கொருவர் தங்களது சந்தோஷங்களை பரிமாரிக்கொள்ளும் செயல்களில் ஈடுபடும் நேரமாகும்.
கிறிஸ்மஸ் ஈவ் கிரிகோரியன் நாட்காட்டியின் படி டிசம்பர் 24 அன்று கொண்டாடப்படுகிறது. இது அட்வென்ட் பருவத்தின் உச்சத்தை குறிக்கிறது. கத்தோலிக்க திருச்சபையின் கூற்றுப்படி, அட்வென்ட் என்பது கிறிஸ்மஸுக்கு முந்தைய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளின் ஒரு தொகுப்பு.
கிறிஸ்துமஸ் ஈவின் முக்கியத்துவம்
உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கான பரிசுகளை வழங்க சாண்டா கிளாஸ் வட துருவத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கும் நாள் தான் கிறிஸ்துமஸ் ஈவ். குழந்தைகள் தங்கள் வீட்டில் சாண்டா, பரிசுகளை விட்டு செல்வார் என்றும், அவருக்காக குழந்தைகள் வைக்கும் பால் மற்றும் குக்கீகளை சாப்பிட்டு செல்வார் என்றும் நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கிறிஸ்துமஸ் ஈவ் நள்ளிரவில், மிட்நைட் மாஸ் ஏற்பாடு செய்யப்படும்.
அந்த வகையில் இன்று (டிச. 24), உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களைப் பரிமாறிக்கொள்வார்கள். ஒவ்வொருவரின் இல்லங்களிலும் வண்ண விளக்குகள், குடில், கிறிஸ்துமஸ் மரங்கள் ஆகியவற்றை வைத்து அலங்கரிப்பர். மக்கள் தேவாலயங்களுக்குச் செல்வார்கள். வீடுகளை ஒளிரச் செய்வார்கள். மெழுகுவர்த்திகளுடன் பிரார்த்தனை செய்வார்கள். கிட்டத்தட்ட எல்லா தேவாலயங்களிலும் இசை ஒலிக்கும். இவை கிறிஸ்மஸிற்கான மாஸ் முன் பயிற்சி அமர்வுகளாகச் செயல்படுகின்றன.
மேலும் ஈவ் அன்று கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்கரிக்கப்பட்டு, மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்காக பரிசுகளை மரத்தின் அடியில் வைப்பார்கள். பல ஐரோப்பிய நாடுகள் 24ம் தேதியே கிறிஸ்துமஸைக் கொண்டாடுகின்றனர். ஏனெனில் அன்று சாண்டா கிளாஸ் பூமியின் மேல் பறந்து செல்வார் என்பதற்காக.
மேலும், ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து, ஹங்கேரி, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் டிசம்பர் 24ம் தேதி பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
மனித குலம் ஞானவொளி பெற இயேசு கிறிஸ்துவால் போதிக்கப்பட்ட கருணை, மன்னிப்பு ஆகிய மாண்புகள் மீது நமது நம்பிக்கையை கிறிஸ்துமஸ் விழா மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
ஏசுவின் பிறந்த நாள் விருந்தான கிறிஸ்துமஸ் பெரும் மகிழ்ச்சி, கொண்டாட்டங்களின் காலம். கிறிஸ்துமஸ் சமயங்களில் கிறிஸ்துவர்கள் கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன் ஒருவரை ஒருவர் மிகுந்த மகிழ்ச்சி, அமைதி, பரஸ்பர பரிசு வழங்குதல் ஆகியவற்றுடன் வாழ்த்திக் கொள்ளுகின்றனர்.
உலகமே கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடக் காத்துக் கொண்டிருக்கிறது. கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த மக்கள் கிறிஸ்துமஸ் விழாவை இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளாகக் கருதி மகிழ்ந்து கொண்டாடுவர். கிறிஸ்துமஸ் விழாவின் முக்கிய தருணமாக கிறிஸ்துமஸ் இரவு (Christmas Eve) இருக்கிறது. குடும்பங்கள் ஒன்றிணைந்து, தங்களின் அன்பை வெளிப்படுத்தி, மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் மற்றும் பரிசுப் பொருள்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் மகிழ்ச்சி நிறைந்த தருணமாக கிறிஸ்துமஸ் இரவு இருக்கிறது.