கருடன் எப்படி விஷ்ணுவின் வாகனமோ, அப்படியே சுதர்சன சக்கரம் விஷ்ணுவின் ஆயுதம். கருடாரூடரான கிருஷ்ணர், இந்தச் சக்கரம், விஷ்ணு வின் கதையான கெளமோதகீ முதலானதுகளையும் தரித்திருக்கிறார். ராமர் முதலான அவதாரங்கள் இப்படிச் செய்ததில்லை. இதனால்தான் கிருஷ்ண ரையே மகாவிஷ்ணுவின் பூர்ணாவதாரம் என்பது.
முரனை வதைத்ததாலேயே அவருக்கு முராரி, முரஹரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. முரனுக்கு அரி (சத்ரு) முராரி. த்ரி-புரம் என்ற மூன்று புரங்களில் உருவமாயிருந்த அசுரர்களுக்கு விரோதியானதால் ஈஸ்வரனுக்குப் புராரி என்று பெயர். முரஹரி என்றாலும் முரனை அழித்தவர்.
கிருஷ்ணனால் முரன் கதை முடிந்ததும் அவனுடைய ஏழு புத்திரர்களும் வந்து யுத்தம் பண்ணி, அவன் போன கதிக்கே அவர்களும் போய்ச் சேர்ந்தார்கள். கடைசியில் ஒரு பெரிய யானை மேல் ஏறிக்கொண்டு நரகாசுரனே யுத்த பூமிக்கு வந்தான்.
கருடனின் மேலிருந்துகொண்டு பகவான் அவனோடு சண்டை போட்டார். அவ னுடைய சைன்யத்தை வதம் பண்ணுவதில் கருடன், சத்யபாமா இரண்டு பேரும் அவருக்கு சகாயம் செய்தார்கள். தாமே எதையும் சாதித்துக்கொள்ள முடியுமாயினும், அவர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்ததாக இருக்கக் கூடாது என்று நினைத்து, அவர்களுக்கும் இப்படி சேவா பாக்யத்தைக் கொடுத்தார்.
அசுர சைன்யம் முழுவதும் நிர்மூலமான பின் பகவானுக்கும் நரகாசுரனுக்கும் நேருக்கு நேர் உக்கிரமான யுத்தம் நடந்தது. பகலோடு முடியாமல் ராத்திரி யெல்லாம் சண்டை நீடித்தது. ராவேளையில் அசுரர்களுக்குப் பலம் விருத்தியாகும். ஆனாலும் பரமாத்மாவானதால் நரகனின் தாக்குதலைச் சமாளித்தார். அவனால்தான் இவருக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. முடிவிலே அருணோதய காலத்தில் பகவான் நரகாசுரனைச் சக்ராயுதத்தால் சம்ஹாரம் செய்துவிட்டார். அன்று விடிந்தபோது லோகத்துக்கே பெரிய விடிவுகால மாயிற்று!
இது நடந்தது ஒரு ஆச்வின மாதத்துக் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியிலா கும். மறுநாள் அமாவாஸ்யை. ஆச்வினம் என்பதை ஆச்வியுஜம் என்றும் சொல்வதுண்டு. நம்முடைய புரட்டாசி அமாவாசைக்கு மறுநாளான பிரதமை யிலிருந்து ஐப்பசி அமாவாசை முடிய இருக்கிற சுமார் முப்பது நாளுக்கே ஆச்வினமாசம் என்று பெயர். அந்த மாதத்தில்தான் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் நரகாசுரவதம் ஆனது.
கிருஷ்ணபட்ச சதுர்த்தசி என்பது பரமேஸ்வரனுக்கு ரொம்பவும் ப்ரீதியானது. மாதம்தோறும் வரும் அந்த திதிக்கு மாத சிவராதிரி என்றே பெயர். மாசி மாதத்தில் இப்படி வருவதைத்தான் மகாசிவராத்திரி என்று கொண்டாடுகிறோம். ஒரு ஐப்பசி மாத சிவராத்திரி முழுதும் விழித்துக்கொண்டு சண்டை போட்டே பகவான் நரகாசுரனை வதம் பண்ணியிருக்கிறார்! சத்யபாமாவேதான் நரகனை சம்ஹாரம் பண்ணினது என்று இன்னொரு விதமாகவும் சொல்வதுண்டு.
யாரானாலும், இரண்டு பேருமே அதிலே சந்தோஷப்பட்டு, லோக க்ஷேமத் தையே புத்ர நாசத்தைவிடப் பெரிதாக மதித்திருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
இப்படிச் சாகிற சமயத்தில்தான் நரகாசுரன், தான் அழிந்த தினத்தை லோக மெல்லாம் மங்கள ஸ்நானம் பண்ணி மங்களோற்சவமாகக் கொண்டாடி மகிழ வேண்டும் என்று வேண்டிக் கொண்ட்தாக ஒரு version.
பரம மங்களம் கங்கா ஸ்நானமே. அந்த ஸ்நான புண்ணியம் எந்த ஜலத்தில் ஸ்நானம் பண்ணுகிறவருக்கும் அன்றைய தினத்தில் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டான். இன்னொரு கதைப்படி, நரகனின் தாயாரான பூமாதேவி இப்படிப் பிரார்த்தித்து வரம் பெற்றதாக இருக்கிறது. முன்னேயே சொன்ன மாதிரி சாட்சாத் பரமாத்மாவின் கையால் வதமாகி ஸாயுஜ்ய முக்திக்குப் போகிற நிலையில் இருக்கிற நரகன் இப்படி லோகோபகாரமாக வரம் கேட்டுக் கொண்டதில் விசேஷம் எதுவும் தெரியவில்லை.
அவனுடைய பெற்ற தாயார் இப்படிக் கேட்டாளென்றால்தான் அது மஹா உசத்தி என்று தோன்றுகிறது. தன் பிள்ளை எத்தனையோ வருஷமாக லோகத்தை அழவைத்ததற்குப் பிராயச்சித்தமாக எதிர்காலத்தில் வரப்போகிற அத்தனை வருஷமும் ஜனங்கள் அவன் பேரைச் சொல்லிக்கொண்டு, தங்கள் வாழ்க்கைப் போராட்ட அழுகைகளை மறந்து, ஆனந்தமாகப் பண்டிகை கொண் டாட வேண்டும் என்று நினைத்து இப்படி வரம் கேட்டாள்.
பூமாதேவியின் அவதாரமான சத்யபாமாவே சம்ஹாரத்துக்கு சகாயம் பண்ண, தனியாக பூமாதேவி வந்து நரகாசுரன் அபகரித்திருந்த குடை, குண்டலங்களைக் கிருஷ்ணருக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு இப்படிப் பிரார்த்தித்தாள் என்று சொல்லியிருக்கிறதே என்று தோன்றலாம்.
ஒரு தெய்வம் அவதாரம் பண்ணின பிறகும், அந்த மூலதெய்வமும் இருக் கிறபடியே இருந்துகொண்டு அவதாரமும் தனியாக இருந்திருக்கிறது. பாகவதத் திலேயே பிற்பாடு ஒரு பிராம்மணனின் செத்துப்போன குழந்தைகளை விஷ்ணு லோகத்திலிருந்து மீட்டுவருவதற்காக கிருஷ்ணர் அர்ஜுனனோடு அங்கே போனதாகவும், அங்கே சேஷ சயனத்திலிருந்த நாராயணமூர்த்தியைப் பார்த்த தாகவும் விஷ்ணுவும் கிருஷ்ணரும் சம்பாஷித்துக் கொண்டதாகவும் வருகிறது. அப்படித்தான் இப்போது பூமாதேவி, பாமா இரண்டு பேரும் ஏக காலத்தில் வெவ்வேறாக இருந்திருக்கிறார்கள். தன் பிள்ளை போன தினத்தில் எல்லோருக்கும் கங்கா ஸ்நான புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று பூமாதேவி கேட்டுக்கொண்ட விசேஷம்தான் இன்றைக்கும் நாம் தீபாவளியன்று ‘கங்கா ஸ்நானம்’ செய்வது.