ஓணம் பண்டிகையும் வரலாறும்

1 0
Spread the love
Read Time:7 Minute, 38 Second

கேரள மக்களால் கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் (தமிழில் ஆவணி மாதத்தில்) வரக்கூடிய அஸ்தம் நட்சத்திரத்தில் இருந்து திரு வோணம் நட்சத்திரம் வரை உள்ள பத்து நாட்கள் சாதி, மத வேறுபாடின்றி கோலாகலமாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.   இதைக் கேரளத்தின் ‘அறுவடைத் திருநாள்’ என்றும் அழைப்பர். ஓணம் செப்டம்பர் 8 (வியாழன்) இன்று கேரளத்திலும் கேரள மக்கள் உலகில் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது.

சங்க இலக்கியங்களான ‘பத்துப்பாட்டு’ நூல்களில் ‘மதுரைக்காஞ்சி’யில் பாண்டிய மக்கள் பத்து நாட்கள் ஓணம் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடினர் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்

பெண்கள் கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்தி வீட்டின் முன்பு பத்து நாட்களும் தொடர்ந்து பூக்களினாலான கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் ‘அத்தப்பூ’ என்ற பூக்கோலம் விசேஷம்.

ஓணம் பத்து நாட்களில் வெள்ளையம்பலத்திருந்து சாஸ்தாமங்கலம் வரையும்; கவாடியா தொடங்கி கீழக்கோட்டை பத்மநாப சுவாமி கோயில் முன்னால் திருவிதாங்கூர் ராஜா அரண்மனைக்கு முன்னால் மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு கலை நிகழ்ச்சிகளான நாடகம், கதகளி, செண்டை மேளம், மோகினி ஆட்டம், கிராமப் பாட்டு என கேரளத்தின் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். குறிப்பிட்ட பகுதியில் 32 இடங்களில் நடக்கும் இந்த விழாவுக்கு மாநிலம் முழு வதும் இருந்து மக்கள் அங்கு வந்து கூடி கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பார்கள். அதிகப் போக்குவரத்து நிறைந்த அந்த முதன்மைச்சாலையில் செல் லாமல் அன்று மக்களே தவிர்த்துவிடுவர். இந்த விழாவை கேரள அரசாங்கமே முன்னின்று நடத்துகிறது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளத்தின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகளென பத்து நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

ஓணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு, யானைத் திருவிழாவாகும். பத்தாம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலை உயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்கக் கவசங்களாலும் பூத்தோரணங்களாலும் அலங்கரித்து, அணிவித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர்.

ஒவ்வொரு பண்டிகைக்கும் அதற்கே உரிய உணவுகள் விஷேசமாகச் சமைக்கப்படும். அந்த வகையில், ஓணம் பண்டிகைக்கு குறைந்தது 21 உணவுகள் பரிமாறப்படும். இந்த விருந்துக்கு ஓணம் சத்யா (Sadya) என்று பெயர். ஓணம் சத்யா என்றால் விருந்து என்று பொருள். ‘கானம் விற்றாவது ஓணம் உண்’ என்ற பழமொழி ஓணம் சத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. பலாப்பழத்தில் பாயசம், புட்டு போன்ற பல பலகாரங்களைச் செய்து அசத்துவர்.

ஓணத்தில் இனிப்புகளுக்குத் தனி இடம் உண்டு. அவை உன்னி அப்பம், உலர்பழங்கள் கேசரி, அச்சப்பம், கொழுக்கட்டை, பருப்பு பாயசம் ஆகும். ஓணம் பண்டிகையின்போது செய்யப்படும் பருப்புப் பாயசத்தின் சுவையே தனி. கடலைப் பருப்பை தேங்காய்ப் பாலில் வேக வைத்து, வெல்லம், நெய் சேர்த்து குறைந்த தீயில் கெட்டியாகும் வரை செய்யப்படும் பாயசத்தின் மணமே பசியைத் தூண்டும்.

மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, மகாபலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும் அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ‘ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும்’ என்று கோரியதை ஏற்று வாமனர் அருள்புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களைக் காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர் கேரள மக்கள்.

கேரளத்தில் சில இடங்களில் நடத்தப்படும் படகுப் போட்டிகளில் ஆலப்புழாவில் நடைபெறும் நேரு சுழற்கோப்பை படகுப் போட்டி ரொம்ப பிரபலம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் பரவலால் நடைபெறாமல் இருந்த இந்தப் படகுப் போட்டி இப்போது நடக்கிறது. புன்னமடக்காயல் என்ற ஏரியில் நடத்தப்படும் இந்த 68-வது ஆண்டு படகுப் போட்டி நிகழ்ச்சியில் சிறு படகுகள், 20 சுண்டன் படகுகள் (பாம்பு படகு) உட்பட 77 படகுகள் போட்டியில் பங்கேற்கின்றன. கேரள முதல்வர் பினராய் விஜயன் இன்று தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு 40 லட்சம் ரூபாய்க்கு மேலாகப் படகுப் போட்டிக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. அதே போல் மது வகைகளும் ஓணத்தை முன்னிட்டு 400 கோடிக்கு விற்பனை ஆகி யுள்ளன என்கிறது கேரள அரசு.

கேரளத்தில் உள்ள கோவளத்தில் உள்ள பரசுராமர் திருக்கோயில், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி திருக்கோயில், குருவாயூரப்பன் திருக்கோயில், கண்ணகி யாகக் கருதப்படும் திருவனந்தபுரம் ஆட்டுக்கல் பகவதி அம்மன் கோயில் மற்றும் சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து மக்கள் வழிபாடு நடத்துவார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!