உலகப் புகழ்பெற்ற தீபத் திருவிழா இன்று (6-12-2022) கொண்டாடப்படுகிறது. இன்று தொடங்கி 12 நாட்களுக்கு திருவண்ணாலையில் தீபம் ஏற்றப்படும். அண்ணாமலையார் தீபம் என்பது விளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாகச் சேர்த்தது.
திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தைக் காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாகக் கருதப்படுகிறது.
கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாதவண்ணம் தடுக்கிறது.
தீபத்தின் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன.
உலகப் புகழ்பெற்ற தீபத் திருவிழா திருவண்ணாமலையில் 12 நாட்களுக்கும் நடைபெறும். தினமும் காலையும் மாலையும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பலவகை வாகனங்களில் பவனி வருவார்கள். ஐந்தாம் நாள் வெள்ளி ரத உற்சவமும் ஏழாம் நாள் ரத உற்சவமும் சிறப்பாக நடைபெறும். பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேர்தளில் உலா வருவார்கள். சுவாமி தேர் பெரியது. அதற்கு அடுத்தது அம்மன் தேர் வரும். இதைப் பெண்களே வடம்பிடித்து இருப்பார்கள்.
எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும் இல்லத்தில் இருவேளையும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையம் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மைச் சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரைச் சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக்கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.
வழிபாட்டு முறை
கார்த்திகைத் திருநாளன்று காலையில் குறித்த பிறகு சிவனைத் துதிக்க காலையில் வேண்டும். நெற்றியில் திருநீறு அணிந்து வில்வ இலையால் அர்ச்சிக்க வேண்டும். பருப்பு வடை, பருப்பு வெல்லப் பாயசம், சாம்பார், அன்னம் முதலியவற்றைச் சமைத்துச் சிவன் பார்வதிக்கு படையலிட வேண்டும். இந்த நிவேதனங்கள் காளிக்கும் உகந்தவை என்பதால் அத்தெய்வத்தையும் திருப்தி அடையச் செய்யும் என்பது ஐதீகம்.
அவல் பொரி, நெல்பொரி ஆகியவற்றில் பாகு சேர்த்து, உருண்டை பிடிக்க வேண்டும். உருண்டையாகப் பிடிக்க வராவிட்டாலும் பரவாயில்லை. வெல்ல அப்பம், வேர்க்கடலை உருண்டை ஆகியவற்றைச் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அகல் விளக்குகளைக் காலையில் அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவிட வேண்டும். பின்னர் அவற்றை எடுத்துச் சுத்தமாகத் துடைத்து, ஆற விட வேண்டும். சந்தனம், குங்குமம் இட வேண்டும். பஞ்சு அல்லது நூல் திரி போட்டு, நல்லெண்ணெய்விட்டு விளக்குகளைப் பூஜை அறை அல்லது பூஜை அலமாரிக்கு அடியில், மனைபலகையில் அழகாக அடுக்க வேண்டும்.
திரியின் நுனியில் கற்பூரத்துகள்கள் போட்டு வைத்தால், தீபத்தை எளிதில் ஏற்றிவிடலாம். மலையில் அண்ணாமலை தீபம் ஏற்றியபின் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றும் வழக்கத்தைச் சிலர் கொண்டிருப்பார்கள். அவ்வாறே தீபம் ஏற்றும்போது அண்ணாமலைக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் போட வேண்டும். தயாராக உள்ள பொரி உருண்டை, அப்பம், வேர்க்கடலை உருண்டை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும், வெற்றிலை பாக்கு, பழம், பூ மற்றும் சன்மானத்துடன் சகோதரன் வாங்கிக் கொடுக்கும் புதிய விளக்குகளைத் தவறாமல் ஏற்ற வேண்டும். ஏற்றிய விளக்குகளை வாசலில் அணிவகுத்தாற் போல் வரிசையாக வைக்க வேண்டும். வீட்டின் ஒவ்வொரு அறையிலும் குளியல் அறை உட்பட அனைத்து ஒரு விளக்காவது வைக்க வேண்டும். தீபாவளிக்கு வாங்கிய மீதமுள்ள பட்டாசுகளை வெடித்துத் தீர்த்துவிடலாம். அன்றைய தினம் சிவன் கோயிலுக்குச் சென்று சிவ தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியத்தை அளிக்கும் என்பது நம்பிக்கை.
சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவ்ல் காட்சி தரும் சிவபெரமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.