மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள்
தெய்வத்திற்கும் மேலாக குருவை வைத்தார்கள்
இரண்டாம் பெற்றோர்கள் நம் ஆசிரியர்கள்
இருள் நீக்கிடும் ஒளிவிளக்கு ஆசிரியர்கள்
புயலைத் தென்றலாக்கும் வித்தை கற்றவர்கள் ஆசிரியர்கள்
புரியாததைப் புரிய வைக்கும் புனிதர்கள் ஆசிரியர்கள்
கற்களை சிலைகளாகச் செதுக்குவது ஆசிரியர்கள்
களிமண்களை பொம்மைகளாக வடிப்பது ஆசிரியர்கள்
முட்டாள்களையும் அறிவாளிகள் ஆக்குவது ஆசிரியர்கள்
முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுபவர்கள் ஆசிரியர்கள்
மாணவர்களைக் குழந்தைகளாக நினைப்பது ஆசிரியர்கள்
மாணவர்களை மாவீரர்களாக மாற்றுவது ஆசிரியர்கள்
மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை விதைப்பது ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு எழுச்சியை ஊட்டுவது ஆசிரியர்கள்
ஆயிரம் விளக்குகளை ஏற்றும் அகல்விளக்கு ஆசிரியர்கள்
அறிவொளி ஏற்றிடும் அற்புத ஒளி ஆசிரியர்கள்
இந்தியாவே போற்றும் நல்மனிதர் அப்துல்கலாம்
இனியவர் அவர் போற்றுவது ஆசிரியர்கள்
பணிவுகள் பயிற்றுவிப்பது ஆசிரியர் பணி
பணிகளில் சிறந்த பணி ஆசிரியப் பணி.
கவிஞர் இரா.இரவி