காணாமல் போன கைதியும் மறைந்து கொண்ட சிறைவாசியும்

2 0
Spread the love
Read Time:11 Minute, 10 Second

புழல் மத்திய சிறையிலிருந்து போன்.. தோழர், சிறைவாசிகள் முன் நீங்கள் இலக்கியம்குறித்து பேசமுடியுமா? ஒரு சேவையாக என்றுகேட்டார்.குரலுக்குரியவர் சிறையின் மனஇயல் நிபுணர் முனைவர் பாஸ்கரன். நான் உடனடியாக கண்டிப்பா வருகிறேன் நண்பா என்று சொல்லி ஒப்புக்கொண்டேன். 10 மணிக்கு பொங்கல் நிகழ்ச்சி நீங்கதான் சிறப்பு விருந்தினர் எனவே 9.30 வந்துடுங்க தோழர் என்றார். நீங்கள் என்னை நண்பா என்று விளிப்பதைத்தான் நான் விரும்புகிறேன். விருந்தினர் கோரிக்கையை ஏற்கவேண்டும் என்றேன். சிரித்துக்கொண்டே சரிங்க நண்பா என்றார்.

இன்று டூவீலரில் புழல் சிறை வளாகத்தில் நுழைந்ததும் மனநல ஆலோசகர்
திரு. மெளீஸ்வரன் என்னை அழைத்து சென்றார் அங்கு ஒரு காவலர் விசாரணைபதிவேட்டில் குறித்த பின் எனது போன், பர்ஸ் வண்டிச்சாவி உட்பட அனைத்தும் வாங்கி ஒரு அறையில் வைத்து பூட்டி மெட்டல் டிடெக்டரில் என்னை பரிசோதித்து உள்ளே அனுப்பினர்.

சினிமாவில் சிறையை விட்டு கதாநாயகன் வெளியே வரும் காட்சியை மட்டும் பார்த்த எனக்கு முதல் முறையாக அந்த பிரமாண்ட கதவைத் தாண்டி கால் வைக்கும்போது மனம் கொஞ்சம் கனமானது. பொய், பதற்றமானது. இதனுள் எத்தனை பேரில் கனவுகள், ஆசைகள் காலியாக்கி இந்தக் கதவு அடைத்திருக்கிறது. நம்மை கோவமாக்காமல் உணர்ச்சிவசப்படாது மோசமான சூழுலுக்கு ஆளாக்காமல் சோதனையான காலகட்டத்தை தராமல் வழி நடத்தும் கடவுளுக்கு நன்றி சொன்ன பிறகே உள்ளே கால் வைத்தேன்.

இன்னும் நிகழ்ச்சி தயாராகவில்லை. இன்னும் அரங்கத்துக்கு சிறைவாசிகள் வரவில்லை. எனவே அலுவலகத்தில் அமர்ந்து கொஞ்சம் ஓய்வெடுங்கள். பின்னர் அழைத்துச் செல்கிறோம் என்று சொல்லி தேநீர் தந்தனர். அலுவலக அறை மீது நோட்டமிட்டேன். மூன்று புத்தகங்கள் குந்தியிருந்தன. ஒன்று மூன்று மாதக் கடுங்காவல்- கல்கி எழுதியது. இன்னொன்று பசித்த பொழுது – மனுஷ்ய புத்திரன் எழுதியது. மற்றொன்று பவா செல்லத்துரை எழுதிய டொமினி.. நீங்கள் எந்த இஸத்தில் எழுதினாலும் எந்த நவீனத்தில் குப்பை கொட்டினாலும் இந்த மூன்று புத்தக தன்மையிலான அலைவரிசையின் ஆதிக்கம் தான் சிறை வரை ஊடுருவி நிற்கிறதோ என்று தோன்றியது.

சிறை வளாகத்தில் நுழைந்தேன். எங்கு பார்த்தாலும் வெள்ளைச் சட்டை வெள்ளை பேண்டில் ஆட்கள். மண்ணில் புல் வெட்டிக்கொண்டிருந்த ஒரு குழுவினரும் வெள்ளை சீருடை தான். காவல் துறை அதிகாரியிடம் எப்படி இப்படி பளீர்னு வெள்ளை டிரஸ்ல என்று ஆச்சரியம் பாவித்தேன். அவர் சொன்னார் அவங்க டிரஸ்ஸை அவங்க எப்படி க்ளீனா வெச்சிக்கிறாங்களோ அதுக்கு மார்க் உண்டு ஸார் என்றார். எல்லா இடத்திலும் மதிப்பெண் ஆதிக்கம் தொடர்கிறது போலும்.

மத்திய சிறை அலுவலர் திரு. இளங்கோ என்னை வரவேற்றார். என்னைப் பற்றிய குறிப்பை முனைவர் பாஸ்கரன் வாசித்தார்.

நான் நிறைய தயாரிப்போடு போனேன் அப்பா டக்கராட்டம். என் எண்ணத்தை காலி செய்தனர் சிறைவாசிகள். முதலில் அங்கு கைதி என்ற சொல்லை அகராதியிலிருந்தே நீக்கியிருப்பார்கள் போலும். அங்கு பயன்பாட்டில் அது இல்லை. அப்புறம் அதிகாரிகள் முதல் ஊழியர் வரை யாரும் சிறைவாசி என்கிற சொல்லைக் கூட உச்சரிக்கவில்லை. அங்கு புழக்கத்தில் இருந்த ஒரே சொல் – இல்லவாசிகள். கவிதை வாசிப்பு, உரை வீச்சு, பட்டிமன்றம் நடந்தது. ஆட்களை அழைக்கும் போது கூட இல்லவாசி சுந்தர் அய்யாவை மேடைக்கு அழைக்கிறோம் என்பதாகவே விளிக்கப்பட்டது. முதலில் இதற்காகவே ஒரு நிர்வாகத்துக்கு ஒரு சபாஷ் போடலாம்.

எப்போதும் நூல் விமர்சனம் நடக்குமாம். என் வருகைக்காக எனது நூலே நேற்று புக் பேர்ல் வாங்கி இல்லவாசிகளுக்குக் கொடுத்து இரவு படித்து இரண்டு இல்லவாசிகள் காலையில் விமர்சித்தார்கள். அதில் ஒருவர் கல்லூரி படித்த இளைஞர், மற்றொருவர் பேராசிரியர். இருவரும் இல்லவாசிகள்தான். அவ்வளவு அருமையாக நுட்பமாக அலசினர். அதில் ஒரு தம்பி ஆயிஷா நடராஜன், கீரா மனைவி பற்றியெல்லாம் சுட்டி காட்டினார். நான் மிரண்டு போனேன்.

பட்டிமன்றமும் அவ்விதமே சிறப்பாக நடந்தது. பண்டிகைகள் மகிழ்ச்சியைத் தருகிறதா? சோர்வைத் தருகிறதா என்று தலைப்பு. மற்ற டி.வி. சேனலில் வருவது போல் மொக்கை ஜோக்ஸால் அக்குளில் சீண்டி சிரிக்க வைக்கும் பிரயத்தனம் இல்லை. இயல்பாய் சமூகத்தை, சூழலை அலசினர். அதில் ஒருவர் அயோத்திதாசர் , ரெட்டைமலை சீனிவாசன் ஆகியோரை மேற்கோள் காட்டினார். இன்னொருவர் ஆங்கில மேற்கோளை சுட்டிக்காட்டினார்.

நிகழ்ச்சி தொடங்கும்போது பறை முழக்கம், போட்டோகிராபர் படங்களை எடுத்துக்கொண்டே இருந்தார். ஒருவர் மைக் செட்டிங் பார்த்துக்கொண்டார். ஒருவர் நிகழ்ச்சித் தொகுப்பு செய்தார். எல்லோரும் இளைஞர்கள். எல்லோரும் இல்லவாசிகள். ஏதோ ஒரு கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு தவறு செய்தவர்கள். சிறைசாலையை அறச்சாலையாக மாறவேண்டும் என்ற மணிமேகலை மேற்கோள் மிகச் சரியாகவே இங்கு இயங்கியது.

நான் கொஞ்சம் அடக்கி வாசித்தேன் என் உரையை. சூழல் தான் கடவுள், விதி, ஊழ்வினை, கடவுள் என்று புனை பெயர் சூட்டிகொள்கிறது. நான் இங்கு பேசுவது சூழல் எனக்கு விதிக்கப்பட்டு இருக்கிறது. அவ்வளவுதான்.

கடவுளுக்கே இலக்கியம் தேவைப்படுவதன் சூட்சமம் சொல்லி சமூகத்தில் இலக்கியத்தின் தேவை, இலக்கியம் என்னென்ன செய்யும், எப்படி எழுதத் தொடங்கலாம், எழுத்து என்னென்ன மாற்றத்தை உருவாக்கும், உருவாக்கியது என்பதெல்லாம் வள்ளுவன், ஆன் செக்ஸ்டன், வை.மு. கோதை நாயகி, ஆர். சூடாமணி , ரமேஷ் பிரேமிள் என பலரைத் துணைக்கழைத்துச் சொல்லி என்னுடைய சொந்தக் கதைகளையும் சொல்லி, கல்கி சிறுகதை போட்டிக்கு இங்கிருந்து நால்வர் போட்டியில் கலந்துகொண்டதை அதில் ஒருவர் ஜெயித்ததைச் சொல்லி என் உரையை முடித்தேன். இல்லவாசிகளின் அபரிமிதமான கைத்தட்டலோடு. அதிகாரிகள் பாராட்டினர். தொடர்ந்து பயிலரங்கம் வைத்தால் வருவீர்களா என்று கேட்டனர். எப்போது குரல் கொடுத்தாலும் வந்து நிற்பேன் என்றேன்.

விழாவில் அரங்கை சுற்றிலும் ஐந்து காவல் அதிகாரிகள் அவர்களின் வாக்கி டாக்கியிலிருந்து வந்த குரலிலேயே என் கவனம் இருந்தது. எஸ் சவுத் ஜுனில் செக்யூரிட்டி இருக்கு. ஓவர் ஓவர் என்பதான கரகரப்பான குரல்கள் முடியும் வரை பின் தொடரும் நிழலின் குரலாக வந்தது.

மதியம் 2.30க்கு எனது உடைமைகளை வாங்கிக்கொண்டு விடைப்பெற்று வெளியே வரும்போது முனைவர் பாஸ்கரன் கேட்டார், “நண்பரே சிறை சாலையின் இந்த கேட் வாசலில் நிற்கிறீர்களா? போட்டோ எடுக்கவா” என்றார். போட்டோ பைத்தியமான நான் தீர்க்கமாக “வேண்டாம் நண்பா” என்று மறுத்துக் கிளம்பினேன்.

ஒரே ஒரு கேள்வி தான், அங்கு யார் முகத்திலும் சோகமோ, வருத்தமோ, தனிமையின் சுவடோ பார்க்கவே முடியவில்லை. அல்லது எனக்கு ஊடுருவத் தெரியலையா? தெரியல. டூர் போகும் பிளானில் பிட் நோட்டிஸில் இரவு தங்கல் பாண்டிச்சேரி என்று அச்சிடுவார்களே அதுபோல் இந்த வாழ்க்கை பயணத்தில் இந்த இல்லத்தில் கொஞ்சநாள் தங்கல் என்பதாக அவர்கள் இந்தப் புழல் வாழ்வைக் கடந்து போக
மனரீதியாகத் தயாராகிவிட்டனரா? அல்லது இப்படியான இலக்கிய நிகழ்வின் மூலம் அவர்களை மனரீதியாகத் தயார்படுத்துகிறார்களா? தெரியவில்லை.

உள்ளே இருக்கும் இல்லவாசிகள் எண்ணிக்கை 976 என்பதாக எங்கோ பார்த்தேன். அது 0 வாக குறைய வேண்டும் இறைவா என்பதாகத்தான் எனது பிரார்த்தனை இருந்தது. எது எப்படியோ ஒரு புதிய நேரடி அனுபவம் இல்லவாசிகளுடன் இன்று. சிறந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் சிறைத் துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்

Amirtham Surya முகநூல் பக்கத்திலிருந்து

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!