“ஒரு பெண் துணிச்சலாக துப்பறியும் துறையில் இறங்கி சாதித்திருப்பது பாராட்டுக்குரியது” என்றார் கூடுதல் காவல்துறை இயக்குநர் (இருப்புப் பாதை)
வே. வனிதா ஐ.ஏ.எஸ்.
சுவடு பதிப்பகம் வெளியிட்ட டிடெக்டிவ் ஐ.எஸ். யாஸ்மின் எழுதிய ‘டிடெக்டிவ் டைரி’ நூல் வெளியீட்டு விழா மற்றும் ISY VERIFICATION SERVICE 11-ஆம் ஆண்டு தொடக்க விழா 25-12-2022 அன்று ஞாயிறு மாலை சென்னை கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியை நடிகை ரேகா தொகுத்து வழங்கினார்
கவிஞர் அமிர்தம் சூர்யா ஒருங்கிணைப்பில் பல்வேறு துறைசார்ந்த ஆளுமைகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட நீதிபதி ஆர்.கணேசன், பத்திரிகையாளர் லோகநாயகி, இயக்குநர் கே. பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
வனிதா ஐ.பி.எஸ் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றியபோது “நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகிறேன் என்று பகிர்ந்தபோது அதில் பலர் யாஸ்மினைப் பார்த்து அழகான பெண் என்று வர்ணித்தார்கள். அழகான பெண்களுக்குத்தான் நாட்டில் பெரிய பாதிப்புகள் உள்ளது. அவர்கள்தான் மிகப் பாதுகாப்பாக இருக்கவேண்டிய சூழ்நிலை நாட்டில் உள்ளது. போலிஸ் என்றால் எல்லாரும் ஒன்றுதான் அதென்ன, பெண் போலிஸ் என்று போடுகிறார்கள். ஆணுக்கு மட்டும் ஆண் போலிஸ் என்று போடுவதில்லை. பெண் போலிஸ் என்பதில் ஒரு ஏளனம் இருக்கிறது. என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தபோது யாஸ்மினைப் பற்றிக் கேள்விப்பட்டேன். கட்டுப்பாடுகள் நிறைந்த இஸ்லாமிய சமுதாயத்திலிருந்து வந்து சாதித்திருக்கும் யாஸ்மினைப் பாராட்டியே ஆகவேண்டும் என்று வந்திருக்கிறேன்” என்று விரிவாகப் போசினார்.
முன்னாள் மாவட்ட நீதிபதி ஆர்.கணேசன் பேசும்போது, “தற்போது தமிழைப் பலர் தவறாக உச்சரிக்கிறார், உபயோகிக்கிறார்கள். ஒன்றைச் சொல்லிவிட்டு இதை நான் பதிவு செய்கிறேன் என்று சொல்கிறார்கள். இதை வலியுறுத்துகிறேன் என்று சொல்லவேண்டும். பதிவு என்பது ரிஜிஸ்டர் செய்வது, அதைப் பதிவு என்று சொல்லக்கூடாது. இன்னொன்று டிடெக்டிவ் எப்படி வந்தது என்று தெரியவில்லை என்று சொன்னார்கள். அது கணிதப் பாடம் கற்பிப்பதற்கு முன் பௌதிகம்தான் கற்பிக்கப்பட்டது. அப்போது அறிஞர்கள் ஒரு விஷயத்தை சல்லடையாக சலித்து கண்டறிதல் என்பதிலிருந்து வந்தது டிடெக்டிவ்” என்று விரிவாகப் பேசியதோடு பல விஷயங்களையும் தொட்டுக்காட்டிப் பேசினார்.
பாக்யராஜ் பேசும்போது, “தான் சினிமாவில் நுழைந்தது, தான் துப்பறியும் ஒரு படத்தை எடுத்தது, அதில் தான் பட்ட கஷ்டங்களைப் பற்றியும், துப்பறியும் பெண்ணாக இன்று உயர்ந்திருந்து யாஸ்மின் இந்தளவுக்கு வளர்ந்தது பாராட்டுக்குரியது என்று புகழ்ந்து தள்ளினார்”
இறுதியாக யாஸ்மின் தன் ஏற்புரை மற்றும் நன்றியுரையில் “நான் பத்திரிகையுலகில் அறிமுகம் இல்லாமல் இருந்தேன். என்னிடம் ஒரு வழக்கு வந்தது. அதைச் சிறப்பாக முடித்துக்கொடுத்தேன். அது மங்கையர் மலர் ஆசிரியராக இருந்த அனுராதா அவர்கள் அதைக் கேள்விப்பட்டு அந்த கேஸ் பற்றி மங்கையர் மலரில் எழுதச் சொன்னார். நான் அந்த ரகசியகங்களை எழுத மறுத்தேன். அவர் பெயர் மற்றும் நபர்களைக் குறிப்பிடாமல் எழுதலாம். இது மற்ற பெண்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும் என்று வலியுறுத்தினார். அப்போது எழுதத் தொடங்கினேன். இன்று வரை பல பத்திரிகைகளில் ஊடகங்களில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த வழியில் எனக்குக் கிடைத்த நண்பர் அமிர்தம் சூர்யா, அவர் என் குடும்ப நண்பர். எப்போது எனக்குப் பக்கபலமாக இருந்து வருகிறார். அவர் எல்லோருக்கும் சிறந்த நண்பர். அதேபோல் எனக்கும் சிறந்த நண்பர். இந்த நூல் குமுதம் சினேகிதியில் 40 வாரங்கள் தொடராக வந்தது. இந்த நூல் உருவாகக் காரணமாக இருந்தவர் பத்திரிகையாளர் லோகநாயகி அவர்கள். அவருக்கு நன்றி. அழகான பெண்களுக்குத்தான் பல கஷ்டங்கள் உள்ளன என்றார் வனிதா ஐ.ஏ.எஸ். அது உண்மை. அழகான பெண்கள் எதைச் செய்தாலும் தவறாகவே பார்க்கும் இந்தச் சமூகத்தில் ஒரு துறையில் இறங்கிச் சாதித்து நிற்பது கடினம். அதை நான் செய்திருக்கிறேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.
பத்திரிகையாளர் லோகநாயகி பேசும்போது, “என்னிடம் யாஸ்மின் தொடர் எழுத வந்தபோது மூன்று பகுதிகள் மட்டும் போடுவதற்காக எழுதி வரும்படிக் கேட்டுக்கொண்டேன். அவர் எழுதித் தந்ததைப் படித்துப் பார்த்தேன். அதோடு அவரது செயல்பாடுகளையும் பார்த்தேன். மிகவும் உண்மையாகவும் சரியாகவும் இருந்தது. தொடர்ந்து 40 வாரங்கள் எழுத வாய்ப்பு வழங்கினேன். அதன் பிறகு அவரது செயல்பாடுகளைப் பார்த்தேன். டிடெக்டிவ் பயிற்சிக்காக குதிரையேற்றம் கற்றுக்கொண்டார். சண்டைப் பயிற்சி கற்றுக்கொண்டார். சட்டம் தெரிந்திருக்கவேண்டும் என்பதற்காக சட்டம் படித்தார். அவரது இந்தத் துறைக்கான இந்த நூல் மிகப் பொருத்தமானது” என்றார்.
ஆளுமைகளின் அளவளாவலால் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில் உணவு உபசரிப்பு, நட்பு பரிமாதல் என பல்வேறு சந்திப்புகள் நடந்தது மனதுக்கு நிறைவாக அமைந்த அந்த மாலைப்பொழுது.