ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடக்கும் கலை விழாவில் மதுரையைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் ராஜஸ்தானியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள ஜவஹர் கலா கேந்திராவில் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் கலை விழாவான ‘லோக்ராங் விழா’ கொண்டாடப்படுகிறது. அதன் 25 வது பதிப்பில் 11 நாள் விழா பல்வேறு மாநிலங்களின் வண்ணமயமான கலாச்சாரத்தை ஒரே மேடையில் கொண்டு வரும். இந்த கலாசார சடங்கில், நாடு முழுவதிலும் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் இணைந்து கலை நிகழ்ச்சி நடத்தவுள்ளனர்.
ஜவஹர் கலா கேந்திராவின் முக்தா-காஷி மஞ்ச் மற்றும் சில்ப்-கிராமில் உள்ள நாட்டுப்புறக் கலைகளின் சங்கமம் இடையே 11 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும், கலைஞர்கள் அந்தந்த பகுதிகளின் நாட்டுப்புற கலைகளை வழங்குவார்கள். மாலை 6.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இருக்கும்.
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் 11-10-2022 அன்று தொடங்கி வரும் 21ம் தேதி வரை பாரம்பரிய நாட்டுப்புற இசை மற்றும் கலைத் திருவிழா நடக்கிறது.
‘லோக்ரங்’ என்ற பெயரில் நடக்கும் இந்தத் திருவிழாவை ராஜஸ்தான் அரசு நடத்துகிறது. இதை ஒரு தேசிய கலைத் திருவிழாவாக நடத்தும் வகையில் அனைத்து மாநில கலைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்ற தமிழகக் கலை பண்பாட்டுத் துறை மதுரை தேனியைச் சேர்ந்த கலைஞர்களை முதல் கட்டமாகவும் சேலம் தர்மபுரி மாவட்ட கலைஞர்களை இரண்டாம் கட்டமாகவும் ஜெய்ப்பூருக்கு அனுப்ப முடிவு செய்தது.
அதன்படி நேற்று முன்தினம் முதல் இன்று வரை மதுரை தேனியைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் தப்பாட்டம், ஒயிலாட்டம், சாட்டைக் குச்சியாட்டம், கரகாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகின்றனர்.
அவர்களின் தாள ஒலி ஆட்ட அடவுகளைக் காணும் ராஜஸ்தானியர்கள் வியந்து ரசித்து கலைஞர்களை பாராட்டி வருகின்றனர்.
சேலம் தர்மபுரி மாவட்ட குழுவினர் பம்பை இசை, கைச்சிலம்பு, இசை மரக்கால் ஆட்டம் உள்ளிட்ட கலைகளை அக்டோபர் 17, 18, 19 ஆகிய தேதிகளில் நிகழ்த்தும் வகையில் இந்த வாரம் ஜெய்ப்பூர் செல்ல உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, அசாம், கோவா, பீகார், பஞ்சாப், ஜம்மு, காஷ்மீர் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் ஒன்றுகூடி தங்கள் திறமையை நிரூபித்துவருகிறார்கள்.