தமிழ்க்கடல் என்றழைக்கப்படுபவர் மூத்த தலைவர் நெல்லை கண்ணன். காமராஜரின் தீவிர விசுவாசி.. இளம் வயதிலேயே காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டவர். குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர்.
1970களில் தமிழ்நாட்டு சூழலில் காமராசர், கண்ணதாசன் முதலிய முக்கிய தலைவர்களாக, ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவரும் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் மறைவு இலக்கியத் துறைக்கு பேரிழப்பு.
அவர் சிறிது காலம் வயோதிகத்தின் காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். கடந்த ஒரு வாரமாக உணவு உட்கொள்ள முடியாமலும் அவதிப்பட்டு வந்த நெல்லை கண்ணன் தனது வீட்டில் இன்று (18-8-2022) உயிரிழந்தார்.
பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த ந.சு.சுப்பையா பிள்ளைக்கும் தாயார் முத்து இலக்குமிக்கும் 1945, ஜனவரி 27ஆம் தேதி பிறந்தார் நெல்லை கண்ணன். இவருக்கு உடன்பிறந்தோர் எட்டு பேர். நெல்லைக்கண்ணனின் முதல் மகன் சுகா எனப்படும் சுரேஷ் கண்ணன் திரைப்படத் துறையில் உள்ளார். இரண்டாம் மகன் ஆறுமுகம் செய்தித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளர்.
நடிகர் சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியில் இருந்த காலத்தில் அவர் பாளையங்கோட்டையில் பேசுவதாக இருந்தது. சிவாஜி வரும் வரை பேசுங்கள் என்று நெல்லை கண்ணனை மேடை ஏற்றி விட்டார்கள். சிவாஜி வருவதற்கு 5 மணி நேரம் தாமதமானது. அதுவரை கண்ணன் பேசிக்கொண்டே இருந்தார். அன்னிறிலிருந்து இறுதிவரை பேச்சின்மூலம் வாழ்ந்தவர் நெல்லை கண்ணன்.
இலக்கியம் மட்டுமல்லாமல், ஆன்மிகப் சொற்பொழிவாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். கம்பர், ராமாயணம் பற்றிய தகவல்களை விரல்நுனியில் வைத்திருப்பவர். ஆன்மிகச் சொற்பொழிவில் அனைவரையும் அவன், இவன் என்று காட்டமாகப் மிக நெருங்கியவராகப் பாவித்து பேசுவார். பொதுவாக தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் ஆழம்படப் பேசக்கூடியவர். அதேநேரத்தில் நகைச்சுவையோடும் உடல்பாவனையோடும் பேசக்கூடியவர். சில நேரங்களில் சில கட்சியுடன் இணைந்து பேசக்கூடியவர். அவரது பேச்சு பல நேரங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலர், துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர். கேரளாவின் ஆண்டனி, இன்றைய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இவரது நண்பர்கள். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும்போதெல்லாம் இவரைத்தான் நெல்லையில் நிற்க வைப்பார்கள். வலுவான கூட்டணி அமையும்போது கண்ணனை ‘கை’ விட்டு விடுவது சகஜம்.
2001-ல் ராஜியசபை எம்.பி பதவிக்கு இவர் பெயரும் ஜெயந்தி நடராஜன் பெயரும் டெல்லிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. டெல்லி ஜெயந்தியை தேர்வு செய்ய கண்ணன் கோபித்துக்கொண்டு அ.தி.மு.க-வுக்குப் போய்விட்டார். ஆனால், ஒரு வருடம் கூட அங்கே தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் காங்கிரசுக்கே வந்துவிட்டார்.
தி.மு.க. தலைவர் கலைஞருடன் எதிரும் புதிருமாகவே பேசிக்கொண்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நெல்லை கண்ணன் ‘அ.தி.மு.க.தான் சிறந்த கட்சி; ஜெயலலிதாதான் சிறந்த தலைவர்’ என்று அளித்த பேட்டியால், போயஸ் கார்டனுக்கு நெல்லை கண்ணனை வரவழைத்து ஜெயலலிதா பேசினார் ஜெயலலிதா.
1996-ல் மூப்பனார் தலைமையில் காங்கிரசில் இருந்து பிரிந்து த.மா.கா.வில் சேர்ந்தவர்களோடு கண்ணன் போகவில்லை.
சேப்பாக்கம் தொகுதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை எதிர்த்து சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அ.தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோது, அங்கே போட்டியிட காங்கிரஸில் பலரும் தயங்கிய நேரத்தில் நெல்லை கண்ணன் போட்டியிட்டார். அவருக்காக ஜெயலலிதா நேரடிப் பிரசாரமும் செய்தார். எனினும் அந்தத் தேர்தலில் நெல்லை கண்ணன் தோல்வியடைந்தார். சென்னை சேப்பாக்கத்தில் கருணாநிதியை எதிர்த்து நின்று 77,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன் காரணமாக அ.தி.மு.க.வுக்காக தமிழகம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்தார் நெல்லை கண்ணன். அதற்கான செலவுகள் அனைத்தையும் அ.தி.மு.க.வே ஏற்றுக்கொள்ளும் என்று அ.தி.மு.க. அறிவித்தது.
தமிழகத்தின் தவிர்க்கமுடியாத இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான நெல்லை கண்ணன் அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழா ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நோக்கி, ‘உங்களின் கடைக்கண் பார்வையில் என்னையும் வைத்துக்கொள்ளுங்கள்’ என தழுதழுத்த குரலில் கும்பிட்டபடியே பேசினார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த அனைவரது உள்ளமும் கரைந்தது. ஒரு தமிழ் படித்தவருக்கு இந்த நிலைமையா என இரங்கினர். அதற்குப் பிறகு தமிழக அரசு சார்பில் நெல்லை கண்ணனுக்கு இளங்கோவடிகள் விருதும் அதற்குப் பரிசுத்தொகையாக 2 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ள நெல்லை கண்ணன், ‘அகவை 78 இல் அடியெடுத்து வைக்கிறேன். செலவினங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. மருத்துவச் செலவுகளுக்காக நல்ல நண்பர்கள் உதவிக்கொண்டிருக்கின்றனர். மற்றவர்களிடம் கேட்க நாணம் தடுக்கிறது. முடிந்தால் உதவுங்கள்!’ என பதிவிட்டுள்ளார்.
அவர் மறைந்தாலும் அவரது தமிழ்ப்பணி மறையாது.