நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளை யத்தில், சுப்பராயன் பழனியம்மாள் தம்பதிக்கு 1929 ஆம் ஆண்டு மகனாக 22 டிசம்பர் மாதம் பிறந்தவர் செல்லப்பன். கணித ஆசிரிய இவர், பள்ளி விழாவுக்கு ரா.பி.சேதுப்பிள்ளையை அழைத்திருந்தார். அப்போது, இவர் வரவேற்புரை ஆற்றினார். இதன்பின் பேசிய, ரா.பி.சேதுப்பிள்ளை, ‘செல்லப்பன், தமிழுக்கு வாய்த்த சொல்லப்பன்; சிலம்பொலி செல்லப்பன்’ என்றார். அன்று முதல், அவர் ‘சிலம்பொலி’ செல்லப்பன் ஆனார்.
தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழிலக்கியங்களை மேடையிலும் நூல்கள் வாயிலாகவும் பரப்பியவர்.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, சீறாப்புராணம், இராவண காவியம் ஆகிய இலக்கியங்களைப் பற்றி இவர் ஆற்றிய தொடர்பொழிவுகள் சிறப்பானவை.
உலகத் தமிழ் மாநாட்டு உதவி அலுவலர், தமிழ் வளர்ச்சி இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் எனப் பல பதவிகளை வகித்துள்ள இவர் தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். ‘சிலம்பொலியாரின் அணிந்துரைகள்’ எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களின் திறனாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
சேலம் மாவட்ட கல்வி அதிகாரி, தமிழ் பல்கலையின் பதிப்புத் துறை இயக்குநர், கூடுதல் பதிவாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் உள்ளிட்ட பதவிகளை வகித்து, தமிழ் வளர்த்தார்.
1975-ம் ஆண்டு ‘சிலப்பாதிகாரம்’ பற்றிய முழுமையான ஆய்வு நூலை எழுதி, ‘சிலம்பொலி’ என்ற தலைப்பில் வெளியிட்டார். சிலம்புச் செல்வர் ம.பொ.சி, சிலம்பொலி நூலுக்கு அளித்துள்ள முன்னுரையில், “கண்ணகி காப்பியம் தமிழினத்தின் தேசியச் சொத்து. இதை மக்கள் மத்தியில் பரப்ப அயராது பாடுபட்டுவரும் சிலம்பொலி செல்லப்பனாருக்கு என் வாழ்த்துகள்” என்றார். பின் ம.பொ.சி.,யுடன் இணைந்து, சிலப்பதிகாரச் சொற்பொழிவுகளில் ஈடுபட்டார்.
இவர் தமிழ் வளர்த்துறையில் இருந்தபோது மாவட்டந்தோறும் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்களை அமர்த்தினார். தமிழ் ஆட்சி சொலகராதியின் வாயிலாக, நல்ல தமிழ் கலைச் சொற்களை அறிமுகம் செய்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட அணிந்துரைகளையும், சங்கத் தமிழ் நுால்களுக்கு தெளிவுரையையும் எழுதி வெளியிட்டார். சிலப்பதிகார அறக்கட்டளையை தொடங்கினார்.
திருச்செங்கோடு நகரில் உள்ள பத்தினித் தெய்வமாகிய கண்ணகிக்கு, `கண்ணகி விழா’ 50 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கியக் காரணமாக விளங்கியவர் சிலம்பொலி செல்லப்பன்தான். சிலம்பொலி செல்லப்பனார் தமிழகத்தின் மூன்று முதல்வர்களிடமும் பணியாற்றிய பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவரிடமும் எளிமையாகப் பழகக்கூடிய இனிமையான மனிதர் செல்லப்பனார். யார் எந்த நூலைக் கொடுத்தாலும் முழுவதுமாகப் படித்து சிறந்த அணிந்துரையை வழங்கக்கூடியவர். அந்த அணிந்துக்காகவே அவரிடம் பலர் நூலைப் படிக்கக் கொடுப்பார்கள். அவர் அளித்த அணிந்துரைகள் அந்த நூலை தராசில் நிற்கவைத்து எடை போடுவதாக இருக்கும்.
அதேபோல் அவரது சொற்பொழிவுகளும் இலக்கியத்தரமானதாகவும் புதிய தகவல்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.
இலக்கியத்தில் மழையாய் சொற்பொழிந்த செல்லப்பன், 2019ல், தன், 91வது வயதில் மறைந்தார். இன்று (21-12-2022) அவரது பிறந்த தினம்.