தமிழறிஞர், பேராசிரியர் க. நெடுஞ்செழியன் தமிழ் மெய்யியல், தமிழ் இலக்கியம், தமிழர் அரசியல், தமிழர் சமயம் ஆகிய துறையினரால் போற்றப்பட்டவர். ஆசீவகம் பற்றிய இவருடைய ஆய்வு தமிழாய்வு உலகில் மிகவும் முக்கியமானது.
பேராசிரியர் க. நெடுஞ்செழியன், தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம், இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும், சித்தன்ன வாசல், ஆசீவம் என்னும் தமிழர் அணுவியம், சங்க காலத் தமிழர் சமயம், தமிழரின் அடையாளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். ஆசீவகமும் அய்யனார் வரலாறும் என்ற இவரது ஆய்வு ஆசீவகம் பற்றிய ஆய்வில் முக்கியமானது.
பேராசிரியர் க. நெடுஞ்செழியனுக்குக் கடந்த மாதம், செம்மொழி நிறுவனத்தின் கலைஞர் பொற்கிழி விருதை தமிழக அரசு வழங்கியது.
அரசு சார்பில் மரியாதை செலுத்த தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் அளித்த அறிக்கையில்
“தமிழறிஞர் பேரா. க. நெடுஞ்செழியன் ஆசீவக சமயம், தமிழர்களால் உருவாக்கப்பட்ட சமயம் என்பதை முதன்முதலாகத் தக்கச் சான்றுகளுடன் நிறுவிய பெருமைக்குரியவர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராக விளங்கியதோடு, அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கான பட்டியலில் அவர் பெயரும் இடம்பெற்றிருந்த வேளையில், கர்நாடகக் காவல்துறையால் பொய்யான குற்றச்சாட்டில் கொடிய தடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுப் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானார்.
அவர் படைத்த நூல்கள் அனைத்தும் சிறந்த ஆய்வு நூல்களாகும். அவற்றை தேசியமயமாக்க வேண்டும் என்றும் அவரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படவேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை வேண்டிக் கொள்கிறேன்” என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவாட்டம், இலல்குடி வட்டத்தில் உள்ள படுகை கிராமத்தில் ஜூன் 15, 1944-இல் பிறந்தார் நெடுஞ்செழியன். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று திருச்சியில் உள்ள ஈ.வே.ரா பெரியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராகவும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையத் தலைவராகவும் பணியாற்றினார். இவருக்கு மனைவி ஜக்குபாய், மகன் பண்ணன், மகள்கள் நகைமுத்து, குறிச்சி மற்றும் மருமகன்கள், பேரன், பேத்திகள் உள்ளனர்.
பேராசிரியர் க. நெடுஞ்செழியனின் மறைவு தமிழ் ஆய்வாளர்கள், திராவிட இயக்கத்தினர், தமிழ்த்தேசிய அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழுக்கும் தமிழினத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் தொண்டாற்றுவதற்காகத் தனது வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்டவர்தான் பேராசிரியர் நெடுஞ்செழியன். பல்வேறு நூல்களைப் படைத்தவர். தந்தை பெரியார் குறித்தும், திராவிட இயக்கம் பற்றியும் தொடர்ந்து எழுதி வந்தவர். அது மட்டுமல்ல, இன உரிமைப் போராளியும் ஆவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது தமிழ்டுதமிழ்