ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழகத்தின் தாய் தெய்வமான தவ்வை சிலை கல்வெட்டு ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. 2 அடி உயரம் 3.5 அடி நீளபலகை கல்லில் தவ்வை தன்மகன் ‘மாந்தன்’, மகள் ‘மாந்தி’யுடன் அமர்ந்த நிலையில் உள்ளார்.
கொற்றவைக்கு அடுத்ததாக சங்க இலக்கியங்களில் அதிகமாகப் பாடப்படும் தெய்வம் மூதேவி. ‘தவ்வை’ என்ற பெயரில் பல இலக்கியங்களில் மூதேவி குறிப்பிடப்படுகிறாள். ஆலயங்களில் இந்தத் தவ்வை சிலை மூதேவி என்ற பெயரில் கோயில் குளங்களின் மூலையில் அமைக்கப்பட்டிருக்கும். தவ்வை என்கிற மூதேவி காவல் தெய்வமாக வழிபடப்பட்டவள்.
இந்துத் தொன்மவியல்படி, பாற்கடலைக் கடைந்தபோது ஜேஷ்டா தேவி தோன்றியதாகவும் அவரது தங்கை லட்சுமி அமிர்தம் தோன்றும் முன்பு தோன்றியதாகக் கூறப்படுகிறது.
மூதேவி தான் செல்வத்துக்கான தெய்வமாகவும் வணங்கப்பட்டவள். மூதேவி என்றால், மூத்த தேவி,தவ்வை, சேட்டை, கேட்டை, மாமுகடி என்று மூதேவிக்குப் பல பெயர்கள் உண்டு.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி செல்லப்பனேந்தல் பகுதியில் சாலையின் ஓரத்தில் 1000 ஆண்டுகள் பழமையான தவ்வை சிலையை ‘பாண்டியர்கள் தேடி பயணம்’ குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
தவ்வை தெய்வம் தமிழகத்தில் கி.பி.7ம் நூற்றாண்டு முதல் 10ம் நூற்றாண்டு வரை வழிபடப்பட்ட தெய்வம் ஆகும்.
நம் முது தந்தையரை எப்படி ‘மூதாதையர்’ என்று அழைக்கிறோமோ அப்படித்தான் மூத்ததேவிக்கு ‘மூதேவி’ என்ற பெயர் வந்தது. அக்காவைக் குறிக்கும் சொல்லான ‘அக்கை’ என்கிற வார்த்தை எப்படி ‘தமக்கை’ ஆனதோ, அதேபோல் ‘அவ்வை’ என்ற வார்த்தை ‘தவ்வை’ ஆகியிருக்கலாம் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படும் திருமகளுக்கு சகோதரி தவ்வை.
தமிழகத்தின் தாய் தெய்வம் எனப்படும் தவ்வையின் முக அமைப்பானது முற்கால பாண்டியர் காலத்து பாணியில் உள்ளதாகவும், இச்சிற்பத்தில் தவ்வை சுகாசனத்தில் வலது கையில் மலர் பிடித்து, இடது கையை தனது தொடை மீது வைத்து, பின்பக்கக் கொண்டை அணிந்து, தொங்கும் காதுகளுடன், கழுத்தணி, கையணிகள் போன்ற ஆபரணங்களுடன் இடுப்பில் முழு ஆடை உடுத்தி கீழ்நோக்கிய பார்வையுடனும், வலது புறத்தில் மகன் மாந்தன் சுகாசனத்திலும் அமர்ந்த நிலையில் உள்ளார். கைகள் இரண்டும் சிதைந்த நிலையில் உள்ளதால் அவற்றைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
இடதுபுறத்தில் மகள் மாந்தியும் அமர்ந்த கோலத்தில் கொண்டை, காதணி உடன் கூடிய தொங்கும் காதுகளும், கழுத்து அணிகளுடனும், வலது கையில் மலர் பிடித்தும், இடது கையை தொடையில் வைத்தும் அமர்ந்த நிலையில் உள்ளார்.
தவ்வை பல கோயில்களில் ‘ஜேஸ்டா தேவி’ என்று தவ்வை வழிபடப்படுகிறாள். வடமொழியில் ஜேஸ்டா என்றால் மூத்தவள் என்று பொருள். காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தில் தவ்வை தேவிக்குத் தனி சந்நிதி இருக்கிறது. திருவானைக்காவல், வழுவூர் போன்ற இடங்களில் தவ்வைச் சிற்பங்கள் வணங்கப்படுகின்றன. திருப்பரங்குன்றத்தில், தவ்வைக்குக் குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது. சப்த மாதா வழிபாட்டிலும் தவ்வைக்கு தனி இடம் உண்டு.
தொல்லியல் ஆய்வாளர்கள் மதன், மணிகண்டன், அறிவுசெல்வம், தேவி கண்டுபிடித்தனர். 2 அடி உயரம் 3.5 அடி நீளபலகை கல்லில் தவ்வை தன்மகன் ‘மாந்தன்’, மகள் ‘மாந்தி’யுடன் அமர்ந்த நிலையில் உள்ளார். கை சிதைந்துள்ளதால் சிலை குறித்த குறிப்புகளை விரிவாக அறிய முடியவில்லை என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தவ்வை சுகாசனத்தில் வலது கையில் மலர் பிடித்து, இடது கையை தன் தொடையில்வைத்து, பின் கொண்டையுடன் அமர்ந்துள்ளார்.
தவ்வை ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக பலகாலங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளாள். ஆய்வாளர்கள் தாய்த் தெய்வ வழிபாட்டில் இந்த தவ்வை வழிபாடு இருந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஏழு கன்னியர்களுள் தவ்வை குழந்தைப் பேறு வழங்கும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். சாக்ததில் இவள் வழிபாடு முக்கிய இடத்தில் இருந்துள்ளது. ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக வழிபடப்பட்டு பிறகு தனியாகப் பிரிக்கப்பட்டாள். சாக்த வழிபாட்டில் சக்தி பீடத்தின் வடிவான மேரு மலை பூசையில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றினை நவாபரணம் என்று அழைக்கின்றனர். இந்த ஆபரணங்களில் இரண்டாவது ஆபரணமாகத் தவ்வை இருக்கிறார்.
தவ்வை வழிபாடு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வெகுவாகக் காணப்படுகிறது. தவ்வையை பயணத்தில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க வழிபடுகின்றனர். சோம்பலை நீக்கி சுறுசுறுப்பான வாழ்வைத் தர தவ்வையை வழிபட வேண்டும்.