தமிழர்கள் ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளாதார மேதை பற்றி கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்தான் ஜே.சி.குமரப்பா.
தஞ்சையில் வாழ்ந்து வந்த ஒரு கிறித்துவக் குடும்பத்தில் 1892ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் நாள் ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்தார்.
இவரது பாட்டனார் மதுரையில் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர். அரசுப் பணியின் காரணமாக குடும்பம் தஞ்சைக்கு இடம்பெயர்ந்தது. தஞ்சை, சென்னை என்று கல்வியைப் பெற்று தனது 21ஆம் அகவையிலேயே இலண்டன் சென்று கணக்கியலில் பணியாற்றத் தொடங்கினார். இவரது தந்தை கல்வியின் முதன்மையை உணர்ந்து தனது அனைத்துச் சொத்துகளையும் விற்று பிள்ளைகளை நன்கு படிக்க வைத்துள்ளார்.
குமரப்பாவின் பெற்றோர் இட்ட பெயர் ஜோசப் செல்லத்துரை கொர்னீலியஸ், அவரது நண்பர்களும் உறவினர்களும் ‘செல்லா’ என்றே செல்லமாக அழைப்பர். ஆனால் அவர் பின்னர் தனது மரபு வழித் தமிழ்ப் பெயரான குமரப்பா என்றே அழைத்துக் கொண்டார். அவ்வாறே புகழும் பெற்றார்.
1913-ல் இங்கிலாந்து சென்று சார்ட்டர்ட் அக்கவுன்ட்ஸ் மற்றும் பொருளாதாரம் பயின்றார். 1928-ல் அமெரிக்கா சென்று, பொருளாதாரத்தில் மேற்படிப்பு பயின்றவர். ஜெர்மானியப் பொருளியலாளர் ஷமாக்கர் தனது நூலில் ‘இந்திய தத்துவ மேதை’ என்று இவரை குறிப்பிட்டுள்ளார். உண்மையான காந்தியவாதியான இவர் இந்தியாவின் ஏழ்மை நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என சொன்னவர் காந்தி. அந்த கிராமங்களுக்கான பொருளாதாரக் கொள்கைகளை தந்தவர் குமரப்பா.
காந்திஜி தண்டி யாத்திரையின்போது ‘யங் இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியராக இவரை நியமித்தார். இயற்கையோடு இயைந்த உற்பத்தி முறைதான் இயற்கை ஆதார வளங்களைச் சிதைக்காது என்பார்.
இவர் டிராக்டர் பயன்பாட்டை சுதந்திர இந்தியாவில் வேண்டாம் என்றார்
காரணம் அப்போதுதான் இந்தியா சுதந்திரம் அடைந்த சமயம். டிராக்டர் தயாரிக்கும் தொழிற்சாலை நம்மிடம் இல்லை.
ஆகையால் நாம் டிராக்டர் இறக்குமதி செய்ய வேண்டும். அதனால் நம் நாட்டிற்குச் செலவு அதிகம் அது மட்டுமல்ல டிராக்டர் இயங்க டீசல் வேண்டும். அதுவும் நாம் வெளிநாட்டிலிருந்து வாங்க வேண்டும்.
இந்தியா ஒரு விவசாய நாடு அவ்ளோ டிராக்டர் இறக்குமதி செய்தல் நமக்குத்தான் செலவு அதிகமாகும்.
டிராக்டர் வந்தால் மனிதனுக்கும் மண்ணிற்கும் உண்டான தொடர்பு அறுபடும்.
ஏர் செய்யும் தொழிலாளி வேலை இழப்பார். டிராக்டர் டன் கணக்கில் எடை இருக்கும். அது மண்ணில் உழும்போது மண் இறுகும்.
நாம் மாடு கொண்டு உழும்போது மாடு சாணி போடும். ஆனால் டிராக்டர் சாணி போடுமா என்று கேட்டார்.
அந்த மாடு போடும் சாணி இயற்கை உரமாகப் பயன்படும். அதனால் நாம் வெளிநாட்டிலிருந்து ரசாயன உரம் இறக்குமதி செய்ய வேண்டியது இல்லை.
அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் குமரப்பாவைச் சந்திக்க வந்திருந்தபோது, அவரிடம் சில கருத்துக்களை குமரப்பா முன்வைத்தார்.
கிராமப்புறங்களில் மின்சார நீர் இரைப்பான்களையும் கிணற்றுப் பாசனத்தையும் விரிவுபடுத்துவதை மிகக் கவனமாகச் செய்ய வேண்டும் என்று அவர் முன்வைத்த முதல் கருத்து. அதற்கு மாற்றாக ஏரிகளையும் குளங்களையும் அரசு விரிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இப்போது நாம் நிலத்தடி நீர் குறைகிறது, அதைப் பற்றி அப்பவே கணித்துச் சொன்னவர் குமரப்பா.
சர்க்கரை ஆலைகள் பெருமளவில் தொடங்கப்பட்டபோது, குமரப்பா அவற்றை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். கரும்பு உற்பத்தி, வெள்ளைச் சர்க்கரை உற்பத்தி, அதனுடன் சேர்த்து எரி சாராய உற்பத்தி ஆகியவற்றுக்கு ஆதரவாக அரசுச் சட்டங்களையும் கொள்கைகளையும் கொண்டுவந்து கொண்டிருந்தது.
சர்க்கரை ஆலைகளுக்குப் பதிலாக, பனை மரங்கள் தரும் பதநீரையும், கருப்பட்டியையும் மேம்படுத்த அரசு பெரும் முதலீடு செய்ய வேண்டும் என்பது அவருடைய கோரிக்கை. பதநீரும் கருப்பட்டியும் உடல்நலத்துக்கு அமிர்தம் போன்றவை என்பது அவருடைய வாதம்.
இது போல இன்னும் பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்போது நாம் பேசும் தற்சார்பு பொருளாதாரம் பற்றி அன்றே மிக நுணுக்கமாக ஆராய்ந்து கூறியவர் தான் நம் குமாரப்பா.
தமிழகத்தில் மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் தனது கடைசி நாட்களில் பணியாற்றினார். தொடர்ந்து பயிற்சி வகுப்புகள், கூட்டங்கள் என்று சோர்ந்துவிடாது பணியாற்றினார். அவரது தம்பி பரதன் குமரப்பாவின் மறைவும் இந்திய அரசியலின் போக்கும் அவரது உடல்நிலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தின. கடுமையான இரத்த அழுத்த நோயால் துன்பமுற்றார். புதிய உலகிற்கான மாற்றுப் பொருளியலை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல் அதை நடைமுறைப்படுத்தியும் காட்டிய இந்தப் பேரறிஞர் தான் பிறந்த தமிழ் மண்ணில் உரிய போற்றுதலின்றி 1960ஆம் ஆண்டு சனவரி 30ஆம் நாள் தனது தலைவரான காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட அதே நாளில் மறைந்தார்.