இந்திய ராணுவ வீரர்களின் பயணத்தில் நடந்த உண்மைக் கதை

1 0
Spread the love
Read Time:7 Minute, 57 Second

ஒரு பதினைந்து இராணுவ வீரர்களும் அக்குழுவின் மேஜரும் இமாலயாவில் மூன்று மாத காலம் பணிபுரியச் சென்று கொண்டிருந்தார்கள்.

மிகவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும்  இடை இடையே பனி மழையும் அவர்கள் மலை ஏறுவதை மிகவும் கடினப்படுத் தியது.

இந்த நேரத்தில், யாராவது ஒரு ஒரு கப் தேநீர் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அந்த மேஜர் மனமும் உடலும் ஆசைப்பட்டது. ஆனால் அது ஒரு வெற்று ஆசை என அறிந்தும் அவர்கள் பொருட்படுத்தாமல், ஒரு மணி நேரம் நடக்க, வழியில் ஒரு பாழடைந்த ஒரு சிறிய கடை போல் தோற்றம் கொண்ட ஒரு வடிவைக் கண்டார்கள். அது ஒரு தேநீர்க் கடை போலவே இருந்தது. ஆனால் பூட்டால் பூட்டப்பட்டிருந்தது.

“அதிர்ஷ்டம் இல்லை, தேநீர் இல்லை. ஆனாலும் நாம் சில நிமிடம் ஓய்வெடுக்கலாம். நாமும் மூன்று மணி நேரம் நடந்து வந்திருக்கோம்…” என்றார் மேஜர்.

அதில் ஒரு இராணுவ வீரர் சொன்னார்.. “சார், இது ஒரு தேநீர்க் கடைதான். உள்ளே தேநீர் தயாரிக்க எல்லாம் இருக்கக்கூடும். நாம் பூட்டை உடைக்கலாமே…” என்றார்.

இது ஒரு தர்மசங்கட நிலை அவருக்கு. தன்னுடைய தளர்ந்த வீரர்களுக்குத் தேநீர் கொடுக்க பூட்டை உடைப்பதா? அல்லது இப்படிப்பட்ட ஒரு தகாத காரியத்தைச் செய்யாமல் இருப்பதா? என்று குழம்பினார்.

சிறிது நேரம் கழித்து, அவர் மனதைவிட அவரின் அறிவு ஜெயித்தது. வீரர்களிடம் பூட்டை உடைக்கச் சொன்னார்.

அவர்களின் அதிர்ஷ்டம், உள்ளே தேநீர் தயாரிக்க எல்லாம் இருக்க, பிஸ்கெட் பாக்கெட்டும் இருந்தது..

எல்லோரும் தேநீர், பிஸ்கெட் நன்றாக அனுபவித்துப் புறப்படத் தயாரானார்கள்.

நாம் இந்தக் கடையின் பூட்டை உடைத்து தேநீர், பிஸ்கெட் உண்டோம். நாம் ஒரு மோசமான திருடர்கள் அல்ல. இது ஒரு சூழல். நாம் இந்தத் தேசத்தைக் காக்கும் தேசத்தாயின் பிள்ளைகள்.

இப்படிப்பட்ட நினைவு அவரை வந்து இடிக்க, அவர், ஆயிரம் ரூபாயைத் தன் பர்ஸில் இருந்து எடுத்து, அந்த கவுண்டரில் இருந்த சர்க்கரை டப்பாவின் கீழே வைத்துவிட்டு, கதவை மூடிவிட்டு, தன் குற்ற உணர்ச்சியைத் துறந்து புறப்பட்டார்.

அடுத்த மூன்று மாத காலத்தில் அவரின் தலைமையில் வீரர்கள் தீவிர கிளர்ச்சிக்குள்ளாகக்கூடிய அந்த இடத்தில் பணியாற்றி, யாருக்கும் உயிர்ச் சேதம் வராமல் இருக்க, அடுத்த குழு வந்து அவர்களை விடுவித்தது.

அதே வழியில் அவர்கள் திரும்ப, அதே தேநீர்க் கடை, ஆனால் இப்பொழுது அது திறந்திருந்தது. அதன் முதலாளியும் இருந்தார்.

ஒரு வயதான அந்தக் கடை முதலாளி, திடீரென்று தனக்குக் கிடைத்த அந்தப் பதினாறு விருந்தாளிகளையும் வரவேற்று அமரச் சொன்னார். எல்லோரும் தேநீர், பிஸ்கெட் உண்டு களித்தனர்.

அந்த வயதானவரிடம், இப்படி ஒரு அத்துவான இடத்தில் தேநீர் விற்பது பற்றியும் அவரின் வாழ்க்கைச் சூழல் பற்றியும் பேசினர். அவரிடம் பல அனுபவக் கதைகள் இருந்தது. மிகவும் கடவுள் பக்தியுடன் பேசினார்!

ஒரு வீரர் கேட்டார், “ஹே தாத்தா… கடவுள் இருக்கிறார் என்பது உண்மை எனில், அவர் எதுக்கு உன்னை இப்படி இங்கே இவ்வளவு வறுமையுடன் வைத்திருக்க வேண்டும்” என்று.

“அப்படிச் சொல்லாதீர்கள் மகனே. கடவுள் நிச்சயம் இருக்கிறார். அதற்கு என்னிடம் சான்றே இருக்கு. மூன்று மாதங்களுக்கு முன்பு, சில தீவிரவாதிகளால், ஒரு விஷயம் தேவைப்பட்டதால் என் மகன் மிகவும் அதிகத் தாக்குதலுக்கு உள்ளாக் கப்பட்டான்.

நான் எனது கடையை மூடிவிட்டு எனது மகனை மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றேன். அவர்கள் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்க என்னிடம் பணம் இல்லை. தீவிரவாதிகளுக்குப் பயந்து யாரும் எனக்குக் கடன் கொடுக்கவும் வரவில்லை.என் நம்பிக்கை இற்றுப் போய்விட்டது.

கடவுளிடம் கதறி அழுதேன். ஐயா கனவாங்களே, கடவுள் அன்று என்னுடைய கடைக்குள் வந்திருக்கிறார். நான் அழுது அரற்றிக்கொண்டு என் கடையை வந்தடைந்தபொழுது என் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

நான் முழுதும் போய் விட்டது என்று நினைத்து கலங்கி, பயந்து உடைக்கப்பட்ட பூட்டை விலக்கி உள்ளே சென்று பார்த்தேன். அங்கே சர்க்கரை டப்பாவின் கீழே ஆயிரம் ரூபாய் இருந்தது. உங்களுக்கு என்னால் அந்த ஆயிரம் ரூபாயின் மதிப்பை வார்த்தைகளால் சொல்ல இயலாது. கடவுள் இருக்கிறார். என்றும் இருக்கிறார். இதை விட என்ன சொல்ல” என்று முடித்தார். அவர் கண்களில் அதற்கான நம்பிக்கை மிளிர்ந்தது.

அந்தப் பதினைந்து ஜோடிக் கண்களும் அந்த மேஜரின் ஒரு ஜோடிக் கண்களை இப்பொழுது துடிப்புடன் பார்த்தன.

அந்த ஒரு ஜோடிக்கண், எதையும் சொல்லாதீர்கள் என்பதை ஒரு அதிகார ஆணையாக பிறப்பித்ததை அவர்கள் உணர்ந் தார்கள்.

அந்த மேஜர் எழுந்து எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்தார்.

அந்த முதியவரைத் தழுவிக்கொண்டு, “ஆம் தாத்தா, எனக்கும் தெரியும். கடவுள் இருக்கிறார்… தாத்தா… உங்கள் தேநீர் மிக அபாரம்…”

இதை அவர் சொல்லும்பொழுது, அவர் கண்களின் ஓரம் படிந்த ஈரத்தை மீதி பதினைந்து ஜோடிக்கண்களும் பார்க்க தவற வில்லை.

இதில் இருக்கும் உண்மை என்ன என்றால்…

ஆண்டவர் நேரிடையாகச் செய்வார் என்று எதிர்பார்க்காதீர்கள். நம்மைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்வார். நமக்கு மற்றவர்களைக் கொண்டு உதவி செய்வார்.

அழுவதைவிட அதிகமாகச் சிரியுங்கள்! பெறுவதைவிட அதிகமாகக் கொடுங்கள்! வெறுப்பதைவிட அதிகமாக நேசியுங்கள்!

(இது ஒரு இராணுவ வீரரால் சொல்லப்பட்ட உண்மைக் கதை. மார்க்கம் @ கூப்வாரா செக்டார், காஷ்மீர் பகுதி)

  • மலேசியச் செய்திகள் முகநூல் பக்கத்தில் மைதிலி
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!