ஜெ.ஜெயலலிதா எனும் நான்!

1 0
Spread the love
Read Time:25 Minute, 46 Second

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம்
(5-12-2022) இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் ஜெயலலிதா என்கிற கம்பீரப் பெண்மணியின் உண்மையான முகம் தெரிந்துகொள்ள இந்தப் பேட்டி உதவும். அவர் எப்படிப்பட்டவர், அவர் எண்ணம் எப்படி வெள்ளந்தியாக இருந்தது  என்பது பற்றி டி.வி. நேர்காணல் நடத்திய சிமி கர்வாலுடன் பேசிய நேர்முகப் பேட்டி பளிச்சென்று காட்டும். அதைப் பார்ப்போம்.

“போலீஸ் வேனில் ஏற்றும்போதே தீர்மானித்துவிட்டேன்.. பொதுவாக யாரோடும் நானாக சண்டை போடுவதில்லை. ஆனால் வலுச்சண்டைக்கு யாராவது இழுத்தார்கள் என்றால் நான் சும்மா இருப்பதில்லை. வாழ்க்கை என்னை அப்படி மாற்றியிருக்கிறது.”

1999-ஆம் ஆண்டு சிமி கர்வாலுக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதாவின் பதில். இந்த நேர்காணல் எடுக்கப்பட்டு 23 வருடங்கள் ஆகிறது.

ஜெயலலிதா வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட எம்.ஜி.ஆர். மரணத்தின் பின் நடந்த சம்பவங்களை இந்தப் பேட்டியில் வெளிப்படுத்தியிருந்தார் ஜெ.

உங்களுக்கு கோபமே வந்ததில்லையா?

கோபமும், உணர்ச்சிகளும் இல்லையென்றால் நான் சாதாரண மனுஷியாக இருந்திருக்க முடியாது. ஆனால் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும்போது, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

எனது உணர்ச்சிகளை எனக்கும் மட்டுமே வைத்துக் கொள்வேன். அதை நான் வெளிக் காட்டுவதில்லை. நான் என் வசத்தைத் தொலைப்பதில்லை. பொது இடங்களில் அழுததுமில்லை. எனக்கு மனோதிடம் அதிகம்.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகிற அரசியலில் ஒரு பெண்ணாக நீங்கள் முன்னேறியிருப்பது மிகுந்த சிரமமாக இருந்ந்திருக்கும் இல்லையா? அதனால் தான் கடினமானவராக இருக்கிறீர்களா?

இப்படித்தான் இருக்க வேண்டுமென நான் நினைத்ததில்லை. ஆனால் என்னுடைய செயல்களும், ஒவ்வொரு விஷயத்தையும் நான் எதிர்கொண்ட விதமும் என்னை கடினமானவராகக் காட்டியிருக்கிறது.

அரசியல்தான் உங்களைக் கடினமாக்கியிருக்கிறது என நினைக்கிறீர்களா?

ஆமாம். நான் இப்படிப்பட்டவளே கிடையாது. கூச்ச சுபாவமுடையவளாக இருந்தேன். புது மனிதர்களைச் சந்திப்பதற்கே பயப்படுவேன். எனக்குப் புகழ் வெளிச்சமே பிடிக்காது. இது ஆச்சரியமானதுதான். எனது வாழ்க்கை விதி என்னை இரண்டு உயரமான துறைகளுக்கு அழைத்து வந்துள்ளது. ஆனால் நான் திரைக்குப் பின்புலமாகச் செயல்படவே விரும்பியிருக்கிறேன்.

உங்களது சிறு வாழ்க்கை கூட இப்போதுள்ள நிலைக்கு அஸ்திவாரமாக இருந்திருக்கலாம்?

இல்லை நான் பாரம்பரியமான பின்னணியில் வளர்க்கப்பட்டிருந்தேன். எனது தாத்தா, பாட்டியிடம் பெங்களூரில் வளர்ந்தேன். தமிழ் அய்யங்கார் குடும்பத்துப் பெண் நான். ஐந்து வயதாக இருக்கும்போது அவ்வப்போது என்னைப் பார்க்க அம்மா பெங்களூருக்கு வருவார். என்னைத் தூங்க வைத்துவிட்டு கிளம்பிவிடுவார் அம்மா. அதற்காக தூங்கும்போது அம்மாவின் முந்தானையை என் கையில் சுற்றிக் கொண்டு தூங்குவேன்.

அதனால் அம்மா மெதுவாக தனது  புடவையை எனது அத்தைக்கு உடுத்திவிட்டுப் போய்விடுவார். நான் எழுந்து பார்க்கும்போது அம்மா இல்லை என்று தெரிந்ததும் அழுவேன், அழுவேன் அழுதுகொண்டே இருப்பேன். மூன்று நாட்களானாலும் என்னை யாரும் சமாதனப்படுத்த முடியாது.

பெங்களூரில் இருந்த நான்கு வருடங்களிலும் ஒவ்வொரு நிமிடமும் அம்மாவுக்காக ஏங்கியிருக்கிறேன். எனக்கு கிடைக்க வேண்டிய, தேவைப்பட்ட அன்பு அம்மாவிடமிருந்து அப்போது கிடைக்காமல் போனது. பத்து வயதாக இருக்கும்போது சென்னைக்கு வந்த நேரம் அம்மா ரொம்ப ‘பிஸி’. காலையில் நான் எழுந்து கொள்வதற்கு முன்பே வேலைக்குப் போய்விடுவார். பெரும்பாலான நாட்கள் நான் தூங்கிய பிறகு தான் வீட்டுக்கு வருவார்.

ஒரு சம்பவம் நினைவில் இப்போதும் இருக்கிறது. ஒருமுறை பள்ளியில் நடந்த ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. பரிசையும், கட்டுரையையும் அம்மாவிடம் காட்ட வேண்டுமென்று நான் வெகுநேரம் வரை இரவு காத்திருந்தேன். நடு இரவாகிவிட்டது அம்மா வருவதற்கு. நான் ஹாலில் சோபாவில் படுத்துத் தூங்கிவிட்டேன். அம்மா வந்ததும், ‘என்ன இங்கே படுத்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று எழுப்பிக் கேட்டார். கையிலேயே வைத்திருந்த பரிசையும், கட்டுரையையும் காட்டிவிட்டுதான் தூங்கப்போனேன்.

அம்மா நடிகையாக இருந்ததனால் உங்களது பள்ளித் தோழிகள் உங்களைக் கிண்டல் செய்தார்கள் எனக் கேள்விப்பட்டேன். உண்மை தானா?

ஆமாம். சிலர் அப்படி செய்தார்கள். அதற்கு காரணம் என்னவென்றால், அம்மா கதாநாயகியாக இல்லாதது தான். அப்படியிருந்திருந்தால் என்னைப் பார்த்து பொறாமைப்பட்டிருப்பார்கள்.

ஆனால் அம்மா ஒரு குணச்சித்திர நடிகை. கேலி செய்த பெண்கள் சமூகத்தின் உயர்மட்ட பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நானும் செல்வாக்கான குடும்பத்துப் பெண்தான் என்றாலும் யாராவது என்னை அவமதித்தாலோ, கேலி செய்தாலோ எப்படி பதில் பேச வேண்டுமென எனக்குத் தெரியாது. வீட்டிற்குப் போய் உட்கார்ந்து அழுவேன். இப்போது நான் வேறு மாதிரி இருக்கிறேன்.

இதற்கு மாற்றாகத்தான் நான் எப்போதும் வகுப்பில் முதல் மாணவியாக இருந்தேன். புத்திசாலி என பெயரேடுத்தேன். பள்ளிப்படிப்பை முடித்து வெளியேறும்போது ‘சிறந்த மாணவி’ என்று பெயரெடுத்திருந்தேன். என்னைத் தவிர அவர்களால் வேறு யாரையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. இன்று வரை எனது பெருமைமிகு சாதனையாக அதைத் தான் நினைக்கிறேன். என்னை அவமானப்படுத்துபவர்களுக்கு பதிலடி தருகிறேன்.

பதினாறு வயாதாகும்போது , மேற்படிப்பு படிக்க கல்லூரியில் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஆனால் அம்மா என்னை நடிக்க வேண்டுமென்று சொன்னார். மூன்று நாட்கள் தொடர்ந்து சண்டை, அழுகை, வாக்குவாதம். ஆனால் பதினாறு வயது பெண்ணினால் என்ன செய்திருக்க முடியும்? அம்மா எனக்கு வீட்டின் நிலைமையை எடுத்துச் சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதுவரை வீட்டில் எந்த பணக்கஷ்டமும் இல்லை என்றுதான்  நினைத்திருந்தேன். அண்ணனுக்கு, எனக்கோ குடும்பக் கஷ்டம் தெரிந்துவிடக்கூடாது என அம்மா நினைத்திருந்தார். பிறந்ததிலிருந்து நாங்கள் கோடீஸ்வர வீட்டுப் பிள்ளைகள் என்று தான் நினைத்திருந்தோம். நாங்கள் என்ன விரும்பினாலும் அது எங்களுக்குக் கிடைக்கும். அப்படி வளர்ப்பதற்கு அம்மா எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் எனப் புரிந்தது. எனது மனநிலையை மொத்தமாக மாற்றிக் கொண்டேன்.

அம்மா மீது இரக்கம் வந்தது. அம்மா போராடியது போதும். இனி எங்களுக்காக அம்மாவை சிரமப்படுத்தக் கூடாது என முடிவு செய்தேன். அதனால் ஸ்காலர்ஷிப்பைத் திருப்பிக் கொடுத்துவிட்டு சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன்.

125 படங்களுக்கு மேலாக நடித்துவிட்டேன். தென்னிந்தியாவின் நம்பர் ஓன் நட்சத்திரமாக இருந்தேன். ஆனாலும் எனக்கு நடிக்கப் பிடிக்கவில்லை. ஒன்றைச் செய்தாக வேண்டுமென என்று நான் முடிவெடுத்துவிட்டால் பிடிக்கிறதோ, இல்லையோ என்னை நான் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன்.

அம்மா இறந்த சமயம் ஒரு குழந்தை தன்னந்தனியாக காட்டில் மாட்டிக் கொண்டால் எப்படிஇருக்குமோ அப்படித்தான் இருந்தேன். அம்மா தான் என்னுடைய முழு உலகமாக இருந்தார். எதையுமே அவர் எனக்கு ‘பிராக்டிகலாக’ சொல்லித் தரவில்லை. அம்மா இறக்கும்போது அவருக்கு வயது 47. அந்த சின்ன வயதில் அவர் இறந்து போவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

எனக்கு கூடுதல் சுமை ஏற்றக்கூடாது என்பதால் என்னிடம் பல விஷயங்களை அவர் சொல்லாமல் விட்டிருந்தார். அதனால் அவர் இறக்கும்போது எனக்கு ஒன்றுமே தெரியாது. எப்படி வீட்டை நிர்வகிப்பது, வங்கி கணக்கை எப்படி கையாள்வது, ‘செக்’கில் எப்படி எழுதுவதென்பது எனத் தெரியாது. ‘இன்கம்டாக்ஸ்’ என்றால் என்ன அர்த்தம் என்பதும் தெரியாது.

எவ்வளவு பணியாளர்கள் வீட்டில் இருந்தார்கள், அவர்கள் சம்பளம் என்ன, எனக்கு தயாரிப்பாளர்கள் நடிப்பதற்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் இதெல்லாம் கூட தெரியாது. அப்பாவியான பெண்ணாக இருந்தேன். எல்லோருமே எனது அப்பாவித்தனத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்த்தார்கள். எல்லாவற்றையுமே நான் கடினமான வழியிலேயே கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.

அந்த நேரத்தில் வாழ்க்கையையே முடித்துக் கொள்ளலாம் என்று கூட நினைத்தேன். உணர்ச்சிமயமான ஒரு நபருக்கு இப்படி நேருகிறபோது எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். இது தான் வளர்ச்சியின் அடுத்த கட்டம். அப்போது நான் என்ன நினைத்திருந்தாலும் சரி, அதிலிருந்து வெளியேறிவிட்டேன். இன்று நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அது தான் முக்கியம். அம்மா இல்லாமல் ஒருநாளாவது வாழ்ந்துவிட முடியுமா என்று தான் நினைத்திருந்தேன். இன்று என்னைப் பாருங்கள். நானே என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

எம்.ஜி.ஆர். உங்கள் வாழ்க்கைக்குள் வந்த பிறகு தான் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. 28 படங்கள் சேர்ந்து நடித்திருக்கிறீர்கள். அவர் தான் உங்களை அரசியலுக்கு அழைத்து வந்தார். அவருடன் உங்களுக்கு காதல் ஏற்பட்டதா?

எம்.ஜி.ஆருடன் யார் பழகினாலும் அவரை காதலிப்பார்கள். அத்தனை வசீகரமானவர் அவர். சின்ன வயதில் எம்.ஜி.ஆர். நடித்த படம் பார்க்கப் போவோம். அவருடைய படங்களில் எப்போதும் ஒரு  வாள் சண்டை இருக்கும். வீட்டுக்கு வந்ததும் நானும் என் அண்ணனும் ஆளுக்கு ஒரு கம்பை எடுத்துக்கொண்டு வாள் சண்டை போடுவோம். எப்போதும் நான் எம்ஜிஆராகவே இருப்பேன். அண்ணன் தான் பி.எஸ். வீரப்பா. கடைசியில் நான் தான் ஜெயிப்பேன். ஏனென்றால் நான் தானே எம்.ஜி.ஆர். அப்போதிலிருந்தே கதாநாயக வழிபாடு தொடங்கிவிட்டது.

தனிப்பட்ட முறையில் அவர் எப்படிப்பட்டவராக இருந்தார்? அவர் எங்களுக்கு புதிரானவராகேவே இருக்கிறார்.

அவர் ரொம்ப கனிவானவர். அக்கறை எடுத்துக் கொள்பவர். அம்மா இறந்ததும் அவர் தான் அந்த இடத்தை நிரப்பினார். அவர் தான் எனக்கு எல்லாமுமாகவே இருந்தார். அப்பாவாக, அம்மாவாக, வழிக்காட்டியாக குருவாக.

அவர் உங்களை ஆதிக்கம் செலுத்தினாரா?

என்னுடைய அம்மா, எம்.ஜி.ஆர். இருவருமே வலுவான குணம் கொண்டவர்கள். அம்மா இருக்கும் வரை அம்மாவின் ஆதிக்கம் இருந்தது. எம்.ஜி.ஆர். இருக்கும்வரை அவர் முழுமையான ஆதிக்கம் செலுத்தினார். அவருடைய அறிவு, குணம் மீது எனக்கு மரியாதை உண்டு. அவரும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேயவர் என்பதால் அவர் மீது எனக்கு இரக்கமும் உண்டு.

நீங்கள் இதுவரை எதிர்பார்ப்பில்லாத அன்பை அனுபவித்திருக்கிறீர்களா?

இல்லை. எதிர்பார்ப்பிலாத அன்பு என்று ஒன்று இருப்பதாகவே நான் நம்பவில்லை. புத்தகத்திலும், திரைப்படங்களிலும் மட்டுமே அப்படியான அன்பு காட்டப்படுகிறது. நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லை. நான் அப்படி எதையும் சந்தித்ததில்லை.

ஆண்களின் ஆதிக்கம் மிகுந்த துறை என எதைச் சொல்வீர்கள் அரசியலா, திரைப்படமா?

இரண்டுமே தான். ஆனால் திரைப்படங்களில் பெண் என்பவள் அதி அவசியமான ஒரு பொருள். உங்களுக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ ஈர்ப்புக்காக பெண்களைத் திரைப்படங்களில் பயன்படுத்தியாக வேண்டும். வேறு வழியே இல்லை. ஆனால் அரசியலை பெண்கள் இல்லாமலே நடத்த முடியும். அவர்களை இல்லாமலாக்குவதற்கு முயற்சி செய்ய முடியும். ஆனால் என்னைப் போன்ற பெண்களை சர்வசாதரணமாக ஒதுக்கித் தள்ளி விடமுடியாது.

பெண்கள் ஒரு துறையில் வெற்றிப் பெற்றால் உலகம் உடனேயே ஆண் தான் அதற்குப் பின்புலம் என்று சொல்லிவிடும். நீங்கள் சந்தித்த போராட்டங்களும், வெற்றிகளும் எம்.ஜி.ஆர். இறந்தபிறகே நடந்திருக்கிறது?

நீங்கள் சொல்வது ரொம்ப சரி. எம்.ஜி.ஆர். இருக்கும் வரை தலைவராக இருந்தார். அவரது வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும். அவர் இறந்தபிறகு நான் தனியாளானேன். அவருக்கு அடுத்து நான் வருவதற்கு எனக்கு சுலபமான வழியை தந்துவிட்டு அவர் போகவில்லை.

ஆசியாவில் அதிகாரத்திற்கு வந்த அத்தனைப் பெண்களையும் பாருங்கள். அவர்கள் ஒரு தலைவருக்கு மனைவியாகவோ, மகளாகவோ இருப்பார்கள். ஏனெனில் ஒரு மனைவியாக இருந்திருந்தால் தன்னிச்சையாக மரியாதைத்  தரப்பட்டிருக்கும். அவர்களைப் பற்றிப் பேசும்போது மரியாதயுடனும், மதிப்புடனும் குறிப்பிடுவார்கள்.

ஆனால் எனக்கு அப்படியில்லை. நான் எனது வழியில் ஒவ்வொரு அடியாக முன்னேறுவதற்கும் நிறைய போராட வேண்டியிருந்தது. சில நேரங்களில் நமக்கு முன்பாக என்ன விதிக்கப்பபட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. ஒருவேளை சில விஷயங்கள் முன்பே தெரிந்திருந்தால் எனக்கு பயம் வந்திருக்கும்

உங்களது வாழ்க்கையில் கடினமான பகுதி என்று எதைச் சொல்வீர்கள்?

எம்.ஜி.ஆர். மரணத்திற்குப் பிறகு கட்சியில் என்னுடைய இடம் என்னவென்பதை வரையறுத்துக் கொள்ள போராடிய காலத்தில் நிறைய துரோகங்களை , கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அது அவ்வளவு சுலபமில்லை. ஒரு வழக்கறிஞராகவோ, கல்வியாளராகவோ இருந்திருந்தால் யாரும் என்னைப் பார்த்து அவதூறாக பேசியிருக்க முடியாது. அதே போல் ஒரு வழக்கறிஞரையோ , மருத்துவரையோ பேட்டி எடுக்கும்போது மரியாதையுடனேயே அணுகுகிறார்கள்.

ஆனால் ஒரு அரசியல்வாதியிடம் கேள்வி கேட்கிறபோது ரொம்ப கீழ்த்தரமாக, அவமானப்படுத்தும் விதமாக கேள்வி எழுப்புகிறார்கள். என்ன கேட்டாலும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ரொம்ப கஷ்டம் இது.

அரசியலில் இருப்பவர்களுக்கு கடினமான மனநிலையே எப்போதும் இருக்கும் என நினைக்கிறார்கள். உணர்வுப்பூர்வமாக இருப்பவர்கள் கடைசி வரை அப்படியே தான் இருப்பார்கள்.

என்னைப் போன்ற அதீத உணர்வுபூர்வமானவர்களுக்கு சாதாரண வலி கூட பெரிதாகவே பாதிக்கும். ஊடகத்தில் என்னைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் என்பது என்னை காயப்படுத்துகிறது. ஏனெனில் நிஜத்தில் நான் அப்படி இல்லை.

எனக்கு முன்னால் நின்று அர்த்தமற்றவைகளை யாரும் பேசுவதை அனுமதிக்க மாட்டேன். அந்த பழைய ஜெயலலிதா இல்லை நான். மலை மேல் தனிமையாக சந்நியாசி போல வாழவே விரும்புகிறேன். மனதளவில் அப்படித்தான் வாழ்கிறேன்.

உங்களது நம்பிக்கையைப் பெற வேண்டுமானால் என்ன தகுதி இருக்க வேண்டும்?

எதையும் நேரிடையாக எதிர்கொள்ள வேண்டும். எனக்கு எல்லாமே துல்லியமாகவும், சரியாகவும் நடைபெற்றாக வேண்டும்.

விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

என்னைவிட இங்கு யாரும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்க முடியாது. நான் என்னை எப்போதும் பரபரப்பாகவே வைத்துக் கொள்கிறேன். அதனால் உட்கார்ந்து இதைப் பற்றி  யோச்சிக்கக்கூட நேரமிருக்காது.

நீங்கள் காயப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள், சிறைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். எப்படி இருந்தது அப்போதைய மனநிலை?

போலிஸ் வேனில் என்னை ஏற்றும்போதே முடிவு செய்துவிட்டேன். என்ன நேரப்போகிறதோ அதை எதிர்கொண்டாக வேண்டுமென்று. பிறகு மனம் அமைதிக்குள் சென்றுவிட்டது. ஒரு மாத காலம் மோசமான நிலையில் இருந்த சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தேன். ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை. என்னை நான் இரும்பாக்கிகொண்டேன்.

நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?

நடக்கவில்லை அவ்வளவுதான். எல்லா இளம்பெண்களையும் போல திருமண ‘ஐடியா’ பிடித்திருந்தது. ஒரு நல்ல மனிதரோடு குடும்பம் நடத்த வேண்டுமென்கிற எல்லா இளம்பெண்களின் கனவு போல எனக்கும் இருந்தது.

எனக்கு பதினெட்டு வயதாக இருக்கும்போதெல்லாம் அம்மா எனக்கொரு திருமணம் செய்து வைத்திருந்தார்கள் என்றால் திருப்தியுடன், சந்தோசமாக குழந்தைகளை வளர்த்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் இருந்திருப்பேன். ஆனால் வாழ்க்கை யாருக்கும் சொல்லித் தராததையெல்லாம் எனக்குக் கற்றுக் கொடுத்தது.

நமக்கென்று ஒரு குடும்ப இல்லையே என்று யோசித்திருக்கிறீர்களா?

கண்டிப்பாக இல்லை. என்னுடைய சுதந்திரம், விடுதலையின் மதிப்பு எனக்குத் தெரியும். என்னைச் சுற்றியிருக்கும் தோல்வியால் முடிந்த திருமணங்களைப் பார்க்கிறேன். சில குடும்பங்களில் குழந்தைகள் அம்மா, அப்பாவிடம் நன்றியில்லாமல் இருக்கிறார்கள்.

இப்போதுள்ள இளைய தலைமுறையினர் பொறுப்பில்லாமல் அப்பா, அம்மாவை கைவிட்டுவிடுகிறார்கள். அவர்களை முதியோர் இல்லத்துக்கு விரட்டுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது திருமணம் நடக்காததும், இப்படிப்பட்ட குழந்தைகள் இல்லாததும் நல்ல விஷயமென்றே நினைக்கிறேன்.

நான் இப்போது இருக்கும் வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய முடிவுகளை நானே எடுத்துக் கொள்ள முடியும். தனிப்பட்ட யாரையும் திருப்திப்படுத்துவதற்கு நான் எதையும் செய்ய வேண்டியதில்லை. இது சுயநலமாகத் தெரியும். ஆனால் அப்படியில்லை. மூன்றில் ஒரு பங்கு என்னுடைய வாழ்க்கையை அம்மா தான் ஆதிக்கம் செலுத்தினார். அம்மா விரும்புவதைத் தான் செய்தாக வேண்டும். எனக்குப் பிடித்ததை நான் செய்ததே இல்லை.

பிறகுள்ள எனது பெரும்பாலான வாழ்க்கையை எம்.ஜி.ஆர். ஆதிக்கம் செலுத்தினார். இப்போது ஒரு பங்கு வாழ்க்கையே மீதமிருக்கிறது.

இப்போது எனக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்போது அரசியலுக்கு ‘குட் பை’ சொல்கிறேனோ அப்போது தான் முழு விடுதலையாவேன்.

நன்றி Ezhumalai Venkatesan

T M Viswanaath முகநூல் பக்கத்திலிருந்து..

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!