‘கீழடிச் சிந்து பாடல்’ – நூறு ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியம் கண்டுபிடிப்பு || -இரா.சிவக்குமார், மதுரை

2 1
Spread the love
Read Time:7 Minute, 20 Second

உலகத் தொல்லியல் வரலாற்றில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கீழடி குறித்து நூறு ஆண்டுகளுக்கு முன்பே சிந்து வகை பாடல் இலக்கியத்தில் இடம் பெற்றிருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழாசிரியர் முனைவர் ராஜாவின் இந்த ஆய்வு இலக்கிய உலகில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. அது குறித்த சிறப்பு நேர்காணல்.

உலகத் தொல்லியல் வரலாற்றிலும், தமிழர் தம் தொன்மை வரலாற்றிலும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கீழடி அகழாய்வு, கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கியது. தமிழகத் தொல்லியல் குறித்த சாதனையில் குறிப்பிடத்தக்க மைல் கல்லை கீழடி அகழாய்வு எட்டி யுள்ளது.

கீழடி மற்றும் பண்டைய மதுரை குறித்து பல்வேறு வகையான ஆய்வுகளும் கருத்துருவாக் கங்களும் அறிஞர் மத்தியில் நிகழ்ந்துவரும் நிலையில், மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியரும் ஆய்வாளருமான முனைவர் ராஜா மேற்கொண்ட ஆய்வில் கீழடி குறித்து நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கியத்தின் முக்கிய கூறான சிந்து பாடலில், கீழடி வழிநடை சிந்து, கீழடி மகிமை சிந்து என்ற பெயரில் இரண்டு நூல்கள் வெளியாகியிருப்பது தெரிய வந்துள்ளது.

முனைவர் ராஜா

இது குறித்து தமிழாசிரியர் முனைவர் ராஜா கூறுகையில், “மதுரை பதிப்பு வரலாறு 1835 லிருந்து 1950 வரை என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டேன். இந்த ஆய்வுக்கான தரவுகளைத் தேடியபோதுதான் கீழடி குறித்து முதுகுளத்தூரைச் சேர்ந்த பூலாரு சாமிப் பிள்ளையால் கடந்த 1906-ஆம் ஆண்டு எழுதப்பட்ட கீழடி வழிநடைச் சிந்து, கீழடி மகிமைச் சிந்து ஆகிய இலக்கிய நூல்களைக் கண்டறிய முடிந்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியல் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுக்குப் பிறகுதான் கீழடி குறித்து நாம் அறிய முடிந்தது.

பொதுவாகவே இலக்கியங்களின் வழியேயான வரலாறுகள்தான் சான்றாக உள்ளன. ஆனால், அதனை உறுதிப்படுத்துவதற்கான பிற சான்றுகள் தொல்லியல் அகழாய்வின் வழியேதான் கிடைக்கின்றன. அந்த வகையில் கீழடி அகழாய்வில் அதன் பழமை கி.மு. 6-ஆம் நூற்றாண்டு என அங்கு கிடைத்த தொல் பொருட்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கீழடிக்கான இலக்கியச் சான்றுகள் இதுவரை கிடைக்காத நிலையில், கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு முதுகுளத்தூரைச் சேர்ந்த பூலாருசாமிப் பிள்ளையால் எழுதப்பட்ட கீழடி வழிநடைச் சிந்து, கீழடி மகிமைச் சிந்து ஆகியவை கிடைத்துள்ளன.

சிந்து என்ற பா வகை இலக்கியம் கடந்த 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நமக்கு உரு வானது என்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி. இந்த சிந்து பா வகையை அடிப்படையாகக் கொண்டுதான் கீழடி குறித்த மகிமைச் சிந்தும், வழிநடைச் சிந்தும் எழுதப்பட்டுள்ளது. கீழடி குறித்து இலக்கிய வகையில் கிடைத்த முதல் சான்று இதுவாகும்.

கீழடி மகிமைச் சிந்து என்பது கீழடியைப் புராண, இதிகாசங்களோடு தொடர்புபடுத்தி எழுதப் பட்டதாகும். கீழடி வழிநடைச் சிந்து என்பது, மதுரை ரயில் சந்திப்பிலிருந்து கீழடி வரை நடந்து செல்லும்போது இடையில் கண்ட பல்வேறு காட்சிகளைக் கொண்டு பாடலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கீழடி குறித்து நமக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கிய ஆவணம் இதுதான்.

பல லட்சம் பேர் பங்கேற்ற ஊர் திருவிழா கீழடியில் நடைபெற்றதாகக் கீழடி மகிமைச் சிந்து நூலின் மூலமாக அறிய முடிகிறது” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “கங்கை நதிக்கு இணையாக இருக்கக்கூடிய ஐந்து புண்ணிய குளங்கள் கீழடியில் இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு குளத்திலும் ஒவ்வொரு புண்ணியம் கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். இவற்றையெல்லாம் புராணம் மற்றும் இதிகாச மாந்தர்களோடு குறிப்பாக அர்ச்சுனன் மற்றும் பாண்டிய மன்னர்களோடு தொடர்பு படுத்திய கதைகளும் அதில் காணப்படுகின்றன.

கீழடி வழிநடைச் சிந்து, தனது மனைவியோடு நடந்து வரும்போது மங்கம்மா சத்திரம், வெளி வீதி அமைப்புகள், முக்கிய பிரமுகர்களின் வீடுகள் என தான் காணுகின்ற காட்சிகளை மனைவிக்கு கணவன் விவரித்துக்கொண்டே வருவதாக அமைந்துள்ளது.

கீழடி அகழாய்வில் ஏராளமான தொல்சான்றுகள் கிடைத்துள்ளபோதிலும் இலக்கிய ஆதாரங் கள் இதுவரை கிடைக்காத நிலையில், முதன்முதலாகக் கீழடியைப் பற்றிப் பாடக்கூடிய இரண்டு நூல்கள் கிடைக்கப்பெற்றது வரலாற்றுச் சிறப்பானதாகும்” என்றார்.

வரலாறு என்பது இலக்கியங்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளையும் வைத்தே நிறுவப்படு கிறது. அந்த வகையில் உலகத் தமிழர்கள் உற்று நோக்கும் கீழடி அகழாய்வில் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பழம் பொருட்கள், எழுத்துகள், பானையோடுகள் கிடைத்தபோதிலும் அவ்வூரைப் பற்றிய இலக்கியச் சான்றாகக் கீழடி வழிநடைச் சிந்து மற்றும் கீழடி மகிமைச் சிந்து நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டிருப்பது மிகு வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் உண்மை.

Happy
Happy
20 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
80 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!