“காலச்சக்கரம் மீண்டும் சுழல்கிறது. சரித்திரங்கள் மாறும்போது, சந்ததிகளும் மாறுவது இயல்பு தானே. எனது 65 ஆண்டு காலக் கலை உலக வாழ்க்கையில் பசுமை நிறைந்த எனது பழைய நினைவு கள் அனைத்தையும் பதிவு செய்து வருகிறார் மூத்த நடிகர் பி.ஆர்.துரை. அவர் மேலும் சொல்லத் தொடங்கினார்.
“1963ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க அமைச்சரவை அமைந்த சமயம், எம்.ஜி.சக்கரபாணியின் மகன் திருமணம் அண்ணாவின் தலைமையில், நல்வாழ்வு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வந்தவர்களை எல்லாம் வரவேற்றார் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் நடைபெற்ற அந்தத் திருமணத்தில் நாவலர், பேராசிரியர், கலைஞர், நாஞ்சில் மனோகரன், மதியழகன், என்.வி.நடராஜன் E.V.K. சம்பத் போன்ற அமைச்சர் பெருமக்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்திப் பேசினார்கள்.
அடுத்து அண்ணா பேசும்போது நிறைவாக “எனது அருமை தம்பி கருணாநிதி வாழ்த்துறை வழங்குவார்” என்று அண்ணா கூறியதும் , எழுந்த கைத்தட்டல் மண்டபத்தையே அதிரச் செய்தது.
கரவொலி நின்றதும் கலைஞர் அவருக்கே உரிய அழகு தமிழில் தன் வாழ்த்துரையை அலங்கரிக்கத் தொடங்கினார்.
‘எனக்கு முன்பாக வாழ்த்துரை வழங்கிய அமைச்சர் பெருமக்கள் அனைவருமே மணமக்களை வாழ்த்திப் பேசியதை உங்களில் ஒருவனாக இருந்து நானும் ரசித்தேன். மணமக்களை என்ன சொல்லி வாழ்த்துவது என்று இப்போது நான் யோசித்தபோது என் மனதிலே ஒரு நல்ல வாழ்த்து தோன்றியது. ‘மணமக்களே, நீங்கள் வெண்ணிலாவும், வானும் போல வாழுங்கள்’ என்று வாழ்த்தலாம். ஆனால் வானத்தில் வெண்ணிலா நிரந்தரமாக இருப்பதில்லை. ஆகவே நான் உங்களை அப்படி வாழ்த்த கூடாது.
‘நகமும் சதையும் போல் வாழுங்கள்’ என்று வாழ்த்தலாம். ஆனால் அப்படியும் வாழ்த்தக்கூடாது. காரணம் சதையை மீறி நகம் வளர்ந்து விடுவதுண்டு. பின் எப்படித்தான் வாழ்த்துவது? ‘மலரும் மணமும் போல் வாழுங்கள்’ என்று வாழ்த்தலாம். ஆனால் அப்படியும் வாழ்த்தக்கூடாது. காரணம் இப்போது விலை மலிந்த கனகாம்பரங்கள் அதிகமாக விற்க ஆரம்பித்துவிட்டன. அதிலே மன மில்லை. பிறகு, எப்படித்தான் வாழ்த்துவது ?
மணமக்களே! உங்களை நான் இப்படி வாழ்த்தலாம் என்று நினைக்கிறேன். எப்படி என்றால், ‘எம்.ஜி.ஆரைப் போலவும், அவரது புகழைப் போலவும் வாழ வேண்டும்’ என்று வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.” என்றார் கலைஞர்.
(தொடரும்)