2,200 ஆண்டு பழமையான ‘தமிழி கல்வெட்டு’ கண்டுபிடிப்பு

1 0
Spread the love
Read Time:5 Minute, 30 Second

மதுரை திருப்பரங்குன்றம் மலைக் குகையில் 2,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழிக் கல்வெட்டு ஒன்றைத் தொல்லியல் ஆய்வாளர் வெ.பாலமுரளி கண்டெடுத்துள்ளார்.

முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையானதாக விளங்குகிறது மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம். இக்குன்று முழுவதும் வரலாற்றுச் சிறப்புடையதாகத் திகழ்கிறது.

இக்குன்றில் முற்கால பாண்டியர்களின் பல குடைவரைக் கோயில்கள் உள்ளன. திருப்பரங்குன்றம் புகைவண்டி நிலையம் எதிரில் உள்ள குன்றின் மேற்குச் சரிவில் இயற்கையாக அமைந்த இரண்டு குகைகள் உள்ளன. அதில் மேலே உள்ள குகையில் ஏராளமான கற்படுகைகளும் கி.மு.1 மற்றும் கி.பி.
1-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று தமிழி கல்வெட்டுகளும் உள்ளன. இவை மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மேலே உள்ள குகைக்குப் போகும் வழியில் அதன் இடதுபுறம் இயற்கையான ஒரு சிறிய குகை உள்ளது. இதன் உள்ளே ஐந்து கற்படுகைகள் உள்ளன. வட்ட வடிவமான இதன் முகப்புப் பகுதியில் மழை நீர் உள்ளே செல்லாதவாறு காடி வெட்டப்பட்டுள்ளது. இக்குகையின் விதானத்தின் மேற்குப் பகுதியில் ஒரு தமிழி கல்வெட்டு இருப்பதை பாறை ஓவியம், கல்வெட்டு, குடைவரைகள் பற்றி ஆய்வு செய்து வரும் மதுரை தொல்லியல் ஆய்வாளர் வெ.பாலமுரளி கண்டுபிடித்து படித்தார்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் நேரில் சென்று இக்கல்வெட்டை படி எடுத்து, மூத்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் உதவியுடன் மீண்டும் படித்தனர்.

இது பற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, தொல்லியல் ஆய்வாளர் வெ.பாலமுரளி ஆகியோர் கூறியதாவது,

“இக்கல்வெட்டு இரண்டு வரிகளாக இருந்துள்ளது. முதல் வரியில் த, ர போன்ற சில எழுத்துகள் தவிர மற்றவை முழுவதும் சிதைந்துள்ளன. இரண்டாம் வரியிலும் சில எழுத்துகள் அழிந்துள்ளன. சில எழுத்துகள் கொஞ்சம் இடைவெளி விட்டு எழுதப்பட்டுள்ளன. முதல் வரியின் தொடர்ச்சியாக அமைந்த இரண்டாம் வரியில் உள்ள எழுத்துகளை ‘யாரஅதிறஈத்த/////வதர’ என படிக்கலாம்.

குகையில் வெட்டப்பட்டுள்ள ஐந்து கற்படுக்கைகளைக் குறிக்க 5 என்ற எண்ணாக 5 கோடுகள் கொஞ்சம் சாய்ந்த நிலையில் மிகவும் தெளிவாக வெட்டப்பட்டுள்ளன.

இக்கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவர் பெயராக ‘யாரஅதிற’ என்பதைக் கொள்ளலாம். இதன் இறுதியில் உள்ள எழுத்துக்களை அதிட்டானம் என முயன்று படிக்கலாம். இதில் ‘அ’ சிதைந்துள்ளது. அதிட்டானம் என்றால் இருக்கை எனவும் பொருளுண்டு. இது குகையில் வெட்டப்பட்டுள்ள கற்படுக்கையிலான இருக்கையைக் குறிக்கிறது. அரிட்டாபட்டி, தொண்டூர் ஆகிய ஊர்களில் உள்ள தமிழிக் கல்வெட்டிலும்
3 கற்படுக்கைகளைக் குறிக்க 3 கோடுகள் செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடினமான பாறையிலும் கல்வெட்டு சிதைந்திருக்கும் நிலை, “அ” மற்றும் “ர” போன்ற எழுத்துகளின் வடிவமைப்பு, “ஐந்து” என்ற எண்ணைக் குறிக்க ஐந்து கோடுகளை செதுக்கி வைத்திருக்கும் முறை ஆகியவற்றைக் கொண்டு இதன் மேலே உள்ள 3 குகைக் கல்வெட்டுகளை விட புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டு காலத்தால் முந்தியது என்பதை அறிய முடிகிறது. எனவே இக்கல்வெட்டை கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம்.

இக்கல்வெட்டை மத்திய தொல்லியல் துறையும், தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேலும் ஆய்வு செய்து இதன் முழு வாசகத்தையும் வெளிக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
100 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!