தீபாவளி என்றாலே பட்டாசுகள் வாணவேடிக்கைகள்தான் முன்னால் வரும். ஆடை அணிமணிகள், பட்சணம், பண்டிகைகாலச் சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் பின்னால்தான். ஆனால் தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்காத கிராமங்களும் தமிழகத்தில் உள்ளன. அந்த ஊர் மக்கள் பறவையினங்கள் மிரண்டு தங்கள் பகுதியை விட்டு பயந்து ஓடிவிடும் என்பதற்காகவே பட்டாசுகளை வெடிக்காமல் பல்லாண்டுகளாகக் கட்டுப்பாட்டுடன் வாழ்கிறார்கள். அங்குள்ள சிறுவர்களும் அதை உணர்ந்து இருக்கிறார்கள். அந்தக் கிராமங்களைப் பற்றிப் பார்ப்போம்.
ஆண்டுதோறும் விருந்தாளிகளாக வரும் பறவைகளுக்காகத் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமல் இருப்பதை தேர்த்தங்கல் கிராம மக்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக கடைபிடித்து வரு கின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தேர்த்தங்கல் கிராமம். இங்கு பறவைகள் சரணாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. இந்தப் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மஞ்சள் மூக்கு நாரை, செந்நாரை, சாம்பல் நிற நாரை, கூழைக்கடா பலவிதமான வாத்துக்கள், நீர்க்காகம், வெள்ளை நிறக் கொக்குகள் என பலவிதமான பறவைகள் வரும். இவ்வாறு வரும் பறவைகள் மீண்டும் ஏப்ரல் அல்லது மே மாதம் திரும்பி சென்றுவிடும். இந்த நிலையில் இந்த ஆண்டின் வடகிழக்குப் பருவமழை சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே மழை சீசன் தொடங்கி உள்ள நிலையில் நாரைகள் மற்றும் கொக்குகள் அதிக அளவில் இங்கு வந்து மரக்கிளைகளில் கூடுகட்ட தொடங்கி உள்ளன. இதனிடையே இந்தக் கிராமத்தில் உள்ள கிராம மக்கள் விருந்தாளிகளாகத் தங்கள் கிராமத்திற்கு வரும் பறவைகளை நேசிக்கும் வகையில் பறவைகளுக்காகவே தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதை தவிர்த்து கட்டுப்பாடுகளுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
அதேபோல் தமிழகத்திலேயே அதிக வெயில் அடிக்கும் பகுதிகளில் ஒன்றாகவும், பசுமையான மரங்களே அதிகம் இல்லாத பகுதியாக விளங்குகிறது க.பரமத்தி ஒன்றியம். இந்த ஒன்றியத்தில் உள்ளது கோடந்தூர் கிராமம். இங்கு ராஜலிங்க மூர்த்தி கோவில் உள்ளது. இந்தக் கோவிலைச் சுற்றி சுமார் 20க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் அமைந்துள்ளது. இங்கு உள்ள புளியமரங்களில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வவ்வால்கள் வாழ்ந்துவருகின்றன. அனைத்து வவ்வால்களும் மரத்திலிருந்து தலைகீழாகத் தொங்கியபடி உறங்கும் காட்சி பார்ப்பவர்களுக்கு பரவசத்தை கொடுக்கும்.
பொதுவாக, மரங்கள் நிறைந்த பகுதிகளில்தான் பறவைகள் அதிகம் வாழும். அதுவும் குறிப்பாக, பழம் உண்ணும் வவ்வால்கள் பழம் தரும் மரங்கள் அடர்ந்த இடங்களில்தான் வாழும். ஆனால், அதிக வெயில் அடிக்கும் பகுதியில், அதுவும் மரங்களே இல்லாத வறண்ட பகுதியான கோடந்தூரில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் தங்கள் வாழ்விடமாக வைத்திருக்கிறது என்பது ஆச்சர்யம்தான்.
கோடந்தூர் பகுதியில் வவ்வால்களை செல்ல பிராணியாகவும் மற்றும் தெய்வமாக நினைத்தும் அப்பகுதி மக்கள் பாதுகாத்து வருகின்றனர். இந்த வவ்வால்கள் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இங்குதான் வசிக்கிறது. உணவுக்காக மாலை 7 மணிக்கு இங்கிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் வரை உணவு தேடச் சென்றுவிடும். குறிப்பாக கேரளா, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு விட்டு, காலை நேரத்தில் எங்கள் பகுதிக்கு வந்து சேர்ந்து விடும். அதற்காக இந்த ஊர் மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த குன்னம் ஊராட்சியில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது பெரம்பூர் கிராமம்
இக்கிராமம் எப்போதும் அமைதியாக காட்சி அளிப்பதால் பறவைகள் இடையூர் இன்றி விரும்பி தங்கும் இடமாக இது அமைந்துள்ளது. இப்பகுதியில் இளுப்பை மரம், வேப்பமரம், ஆலமரம், அரசமரம், மா, தென்னை உள்ளிட்ட மரங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும், வடகிழக்குப் பருவமழை தொடங்கும் அக்டோபர் மாதம் இங்கு குளிர்ச்சியான சூழல் ஏற்படும்போது, ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பறவைகள், வக்கா, நீர்காகம், செந்நாரை, உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் இக்கிராமத்தின் இயற்கைச் சூழலால் பெரம்பூர் கிராமத்தைத் தேர்வு செய்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் இப்பகுதியில் உள்ள மரங்களில் கூடு கட்டி வாழ்கின்றது. இந்தக் கிராமத்திற்குப் பறவைகள் குளிர்காலங்களில் வருவதால் இக்கிராமம் பறவைகள் சரணாலயம் போன்று காட்சியளிக்கிறது.
எனவே கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இந்தப் பறவைகளுக்குப் பாதுக்காப்பு அளிக்கும் வகையில் எந்தவிதத்திலும் இடையூறு ஏற்பட்டுவிடக்கூடாது என்று கவனமாக செயல்படுகிறோம்.
தலைதீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு வரும் மாப்பிள்ளைகளிடம் இது குறித்து முன்கூட்டியே சொல்லிவிடுகிறார்கள். குழந்தைகள்கூட பட்டாசு வெடிக்க ஆசைப்பட்டால் பல கிலோமீட்டர் தள்ளி அழைத்துச் சென்று அவர்களின் ஆசையை நிறைவேற்றுகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அதேபோல் சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் மதுரை செல்லும் ரோட்டின் அருகே வேட்டங்குடிபட்டி மற்றும் கொள்ளுக்குடிப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் 38.426 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் பெரிய கொள்ளுக்குடி கண்மாய் 13.66 ஹெக்டேர், சின்ன கொள்ளுக்குடி கண்மாய் 6.351 ஹெக்டேர், வேட்டங்குடி கண்மாய் 16.415 ஹெக்டேர் என மூன்று கண்மாய்களை உள்ளடங்கியது இச்சரணாலயம். இங்கு தற்போது சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து தங்கியுள்ளன.
செப்டம்பர் முதல் மார்ச் வரை இனப்பெருக்கத்திற்காக வரும் பறவைகள் இக்கண்மாயில் தண்ணீரில் நிற்கும் மரங்களில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். இந்தப் பறவைகள் மீது கொண்டுள்ள அன்பாலும், அக்கறையாலும், தங்களது கிராமத்திற்கு வந்த ‘விருந்தினர்கள்’ என்ற முறையிலும் கடந்த 50 ஆண்டுகளாக தீபாவளிக்கோ அல்லது அக்கிராமத்தில் நடைபெறும் திருமணம், துக்க நிகழ்ச்சிகளில் கூட இக்கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை. பறவைகளுக்காகப் பட்டாசு வெடிக்காத கிராமத்துக்கு வாழ்த்துக்கள்.
அதேபோல் கூந்தன்குளம் என்றவுடன் நினைவுக்கு வருவது, பறவைகள் சரணாலயம் தான். நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. ஆண்டுதோறும் பல்வேறு வகையான பறவைகள் கூந்தன்குளத்துக்கு வந்து மரங்களில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்துச் செல்வது வழக்கம்.
உள்நாட்டு பறவைகளான கூழக் வர்ணநாரை, அரிவாள் கடா, மூக்கன், அண்டில் பறவை, பாம்பு தாரா, நீர்க்காகம், குருட்டு கொக்கு, கரண்டிவாயன்நாரை, வெளி நாட்டு பறவை இனங்களான ஊசிவாய் வாத்து, பட்டை தலை வாத்து, கோல்டன் பிளவர்,நீலச்சிறகி, நத்தை கொத்தி நாரை, கொசு உள்ளான் போன்ற 227 வகையான பறவைகள் கூந்தன்குளத்துக்கு வந்து செல்கின்றன.
இந்தியாவில் உள்ள பறவைகள் மட்டுமல்லாது. சைபீரியா, சீனா, ரஷியா, மத்திய ஆசியா, ஆர்டிக் பகுதிகளில் உள்ள பறவைகளும் இங்கு வந்து தங்கி கூடு கட்டுகின்றன. அவை இப்பகுதி வயல்வெளிகளில் காணப்படும் சிறுபூச்சிகள், புழுக்கள், தானியங்கள் போன்றவற்றைச் சேகரித்து தானும் தின்று, தனது குஞ்சுகளுக்கும் கொடுக்கின்றன.
இனப்பெருக்கம் செய்வதற்காக வருகை தரும் இந்தப் பறவைகளை, அந்தக் கிராம மக்கள் தங்கள் வீட்டு விருந்தாளிகளாகத்தான் பார்க்கிறார்கள். பறவைகள் வீடுகளில் உள்ள மரங்களில் கூடுகட்டி இருந்தாலும், அவர்கள் அதனைப் பிரித்துப்போடுவது இல்லை. மாறாக பறவைகளுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கிறார்கள்.
கூந்தன்குளத்தில் பறவைகள் தங்கியிருக்கும் காலங்களில் கிராம மக்கள் தங்களது வீட்டு நிகழ்ச்சிகளில் கூட வெடி வெடிப்பது, மேள தாளம் இசைப்பது உள்ளிட்ட வற்றைத் தவிர்த்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகை காலங்களிலும் யாரும் பட்டாசு வெடிப்பது இல்லை. மேலும் வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன் படுத்துவது கிடையாது. இந்தத் தீபாவளியையும் அவர்கள் பறவைகளுக்காகப் பட்டாசு வெடிக்காமல் சத்தமில்லாத தீபாவளியாகக் கொண்டாட உள்ளனர். அந்த கிராம மக்களுக்கு வாழ்த்துக்கள்
தமிழகத்தில் பிரபலமான பறவைகள் சரணாலயம் வேடந்தாங்கல். மதுராந்தகம் அருகில் சுமார் 30 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது வேடந்தாங்கல். இங்கு கனடா, சைபீரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பறவைகள் வலசை வந்து, இனப்பெருக்கம் செய்து, அவை நாடுகளுக்குத் திரும்புகின்றன.
நவம்பர் முதல் மார்ச் மாதங்களில் மட்டுமே இப்படிப் பறவைகள் வலசை வருகின்றன. இப்பகுதியில் கடந்த 1972-ம் ஆண்டு பட்டாசு வெடிக்க வனத்துறை தடை விதித்ததனால் இங்கே மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை.
சட்டத்திற்காக மட்டுமில்லாமல், பறவைகள் மீது கொண்ட அன்பின் காரணமாகவே பட்டாசு வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள் இந்தக் கிராம மக்கள். அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
பறவைகளின் நிம்மதிக்காக பட்டாசுகளின் சத்தத்தை நிறுத்தியதோடு காசைக் கரியாக்காமல் தங்கள் காதையும், காற்று மாசையும் தடுக்கும் மக்களைப் பாராட்டுகிறோம்.