திருப்பூர் குமரன் கொடிகாத்த வரலாற்றையும்,ஆஷ் துரை என்கிற வெள்ளையனைச் சுட்ட வாஞ்சிநாதனையும், ஜாலியன் வாலாபாக்கில் நடந்த பஞ்சாப் படுகொலையையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
இதில் பெருங்காமநல்லூர் படுகொலை என்கிற ரத்த வரலாறு எத்தனை பேருக்குத் தெரியும் ?
இது நடந்தது நூறாண்டுகளுக்கு முன்பு…
மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர் கொண்டுவந்த குற்ற இனச் சட்டமான ரேகைச் சட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீது 1920, ஏப்ரல் 3ல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட 16 பேர் பலியானார்கள்.
தமிழ்ச் சமூகத்தால் மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட வரலாறாகவே பெருங்காமநல்லூர் படுகொலை இன்றும் இருக்கிறது.
இது ஒரு தனிப்பட்ட சாதிக்கான போராட்டமாகத் தமிழ்ச் சமூகத்தால் பார்க்கப்படுகிறது.
குற்றவாளி என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட ஒருவரை தண்டிப்பதுதான் சட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் குற்ற இனச் சட்டம் என்கிற ரேகைச் சட்டமானது, குற்றம் புரிந்த குறிப்பிட்ட நபரை மட்டும் தண்டிக்காமல், குற்றமே புரியாத ஒட்டுமொத்த சமூகத்தையும் தண்டித்தது.
ஒரு சிலர் தவறிழைப்பதால் அந்தச் சமூகமே குற்றத்திற்கும் தண்டனைக்கும் உள்ளானது. இது மனித தர்மத்துக்கே மாறானது எனக்கூறி ஆங்கிலேயர்களுக்கு எதிராக பெருங்காமநல்லூரில் தொடங்கிய போராட்டம், தமிழ்நாட்டில் ரேகைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட 89 சாதிகள் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட 190க்கும் மேற்பட்ட சாதிகளுக்கும் விடிவு பிறக்க காரணமாக அமைந்தது.
அதனை நினைவுகூரும் வகையில் பெருங்காமநல்லூர் வீரத் தியாகிகள் நினைவு நூற்றாண்டு விழா மலரைத் தயாரித்திருந்தனர். அந்த விழா மலரை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, கவிப்பேரரசு வைரமுத்து பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் பெருங்காமநல்லூர் வீரத் தியாகிகள் நினைவு பொதுநலச் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் என்.எஸ்.பொன்னையா,செயலாளர் புலர் சின்னன் அய்யா, பொருளாளர் டி. ராஜாராம், புரவலர் வெற்றிவேல், மலர் அமைப்புக் குழுவைச் சேர்ந்த பசும்பொன், சுருளிவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான எத்தனையோ போராடங்கள் மறக்கடிக்கப்பட்டன.
அதில் பெருங்காமநல்லூரில் நடைபெற்ற ஆங்கிலேயருக்கு எதிரான இந்தப் போராட்டம் ஒன்று. இந்தப் போராட்டத்தின் மூலம் 190 க்கும் மேற்ப்பட்ட சாதி மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர உதவியுள்ளது.