புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்து கடந்த 1954ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி அன்று விடுதலை பெற்றது. அதையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி விடுதலை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை மாநகரிலிருந்து 170 கி.மீ. தொலைவில், இந்திய யூனியன் பகுதியாக வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது புதுச்சேரி.
ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது புதுச்சேரி. வரலாற்று ரீதியாகப் பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டு வந்த இப்பிரதேசம், அதன் அதிகாரபூர்வ பெயராக, 2006ஆம் ஆண்டு புதுச்சேரி என மாற்றப்பட்டது.
ஆந்திர மாநிலத்தின், காக்கிநாடாவுக்கு அருகாண்மையில் உள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின், நாகப்பட்டினத்தின் அருகாண்மையில் உள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகில் உள்ள மாஹே நகரும், இந்த மாநிலத்தின் ஆட்சிப் பகுதிகளாக விளங்குகின்றன.
புதுச்சேரியில், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாள மொழி பேசும் மக்களும் சிறுபான்மையினராக இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
புதுச்சேரி உருவான கதை
பிஜப்பூர் சுல்தான் ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, பிரெஞ்சு நாட்டினரால் 1693இல் தொடங்கப்பட்ட‘பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி’ மூலம் புதுச்சேரி நகரத்தின் அட்டித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 04, 1673இல் பிரஞ்சு கம்பெனி பிரான்சுவா மார்ட்டின் என்பவரை முதல் ஆளுநராக நியமித்தது. அவரே சிறு மீனவ கிராமமாக இருந்த புதுச்சேரியை, பெரிய துறைமுக நகரமாக உருவெடுக்கும் திட்டத்தைத் தொடங்கினார்.
1674இல் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி ஆளுநர் பிரான்சுவா மார்ட்டின் புதுச்சேரியில் வர்த்தக மையத்தை அமைத்தார். அதுவே, இந்திய நாட்டின் தலைமை பிரஞ்சுப் பகுதியாகப் பின்னாளில் அமைந்தது.
அந்தக் காலகட்டத்தில் இந்தியாவுடனான வர்த்தகப் பங்களிப்பு தொடர்பாக ஐரோப்பா நாடுகளுடையே போர் மூண்டது. ஆதலால் புதுச்சேரி 1693ஆம் ஆண்டு டச்சு நாட்டினரால் பிடிக்கப்பட்டது. பின்னர் 1699-ஆம் ஆண்டு ‘டிர்ட்டி ஆப் ரிஸ்விக்’ ஒப்பந்தத்தின்படி பிரஞ்சு கம்பெனியிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. 1720-1738ஆம் காலகட்டத்தில் பிரஞ்சு கம்பெனி மாகே, ஏனாம் மற்றும் காரைக்கால் பகுதிகளைத் தன்னுடையதாக ஆக்கியது. 1742-1763-இல் ஏற்பட்ட ஆங்கிலோ – பிரஞ்சு போரின்போது ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனிக்கு கைமாறிய புதுச்சேரி, பின்னர்
1763ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தின்படி மீண்டும் பிரஞ்சு கம்பெனி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
1793இல் ஏற்பட்ட பிரஞ்சுப் புரட்சியின் பிறகு ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனிக்கு மாறிய புதுச்சேரி பின்னர் 1814ஆம் ஆண்டு பிரஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இந்தியாவின் பிற பகுதிகளில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனின் ஆதிக்கம் அதிகமானாலும் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் மற்றும் சந்தர்நகோர் ஆகிய பகுதிகள் மட்டும் பிரஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தின் கீழ் செயல்பட அனுமதித்தனர்.
1947ஆம் ஆண்டு சுதந்திர இந்தியா உத்வேகத்துடன் இந்திய அரசும் பிரஞ்சு அரசும் சேர்ந்து 1948ஆம் ஆண்டு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டனர். அதில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தேர்ந்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி உடன்படிக்கையின்படி புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் மற்றும் சந்தர்நகோர் ஆகிய பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைத்த பகுதிகளாக மாறியது. இது 1963ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் சந்தர்நகோர்பகுதி மேற்கு வங்க மாநிலத்தில் இணைக்கப்பட்டது. புதுச்சேரி, காரைக்கால், மஹே மற்றும் ஏனாம் பகுதிகள் இந்திய அரசில் புதுச்சேரி யூனியன் பிரதேசமாக மாறியது.
இந்தாண்டிற்கான விடுதலை நாள் விழா இன்று புதுச்சேரி காந்தி திடலில் நடக்கிறது. காலை 8:55 மணி முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்….
அதன்பின் போலீசார், முன்னாள் ராணுவ வீரர்கள், என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு, விடுதலை நாள் உரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.