இசைத் துறையில் ஆஸ்கர் விருதுக்கு இணையாகக் கருதப்படுவது கிராமி விருது. கர்நாடகாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி விருதை வென்று சாதித்திருக்கிறார்.
சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்படும் இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் கிராமி விருது வழங்கப்பட்டு வருகிறது.
இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான ரிக்கி கேஜ் ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பம், சிறந்த அதிவேக ஆடியோ ஆல்பம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பாடல் ராக்-லெஜண்ட் மற்றும் போலீஸ் டிரம்மர் ஸ்டீவர்ட் கோப்லேண்டுடன் ரிக்கி கேஜும் இணைந்து பெறுகிறார்.
கிராமி விருதை வென்ற இவர் நான்காவது இந்தியர். நாட்டின் இளைய 41வது வயதில் விருது பெற்றவர் இவரே. இதற்கு முன், கேஜ் 2022இல் புதிய ஆல்பத்திற்கான மற்றொரு கிராமி விருதை வென்றார். இவர் 2015ல் வெளியிட்ட ஆல்பமான ‘விண்ட்ஸ் ஆஃப் சம்சார’ ஆல்பதிற்கும் முதல் கிராமி விருதை வென்றார்.
ரிக்கி கேஜ் பெங்களூருவில் உள்ள கல்லுரியில் பல் மருத்துவம் படித்தார். அந்தப் பணியில் ஈடுபடாமல் இசைத் துறையில் கால் பதித்தார். ஏராளமான விளம்பரப் படங்களுக்கும் இசையமைத்துள்ள ரிக்கி கேஜ், இசை ஆல்பங்களைத் தயாரித்து வெளியிட்டு வருகிறார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ‘தி போலிஸ்’ என்ற பிரபல ராக் இசைக்குழுவின் டிரம்ஸ் இசைக்கலைஞர் ஸ்டீவர்ட் கோப்லாண்ட்டுடன் இணைந்து ‘டிவைன் டைட்ஸ்’ என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். இந்த ஆல்பம்தான் கடந்த ஆண்டுக்கான பட்டியலில் சிறந்த புதிய அலை பிரிவில் விருது வென்றது. இந்த ஆண்டு இதே ஆல்பம் சிறந்த அதிவேக இசை ஆல்பத்துக்கான பிரிவில் கிராமி விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிக்கியுடன் இணைந்து தயாரித்தவர் என்ற முறையில் ஸ்டீவர்ட் கோப்லாண்ட் இந்த விருதைப் பெறுகின்றார்.
ரிக்கி கேஜ் பேசும்போது, “எனது 3வது கிராமி விருதை வென்றேன். மிகவும் நன்றியுள்ளவனாக, நான் இருக்கிறேன்! இந்த விருதை தாய்நாடான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.
விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட இந்த ஆல்பத்தில் ஒன்பது பாடல்கள் மற்றும் எட்டு இசை வீடியோக்கள் உள்ளன. அவை இந்திய இமயமலையின் நேர்த்தியான அழகு முதல் ஸ்பெயினின் பனிக்கட்டிக் காடுகள் வரை உலகம் முழுவதும் படமாக்கப்பட்டன.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்துள்ள ட்வீட்டில், “3வது முறையாக கிராமி விருதை நீங்கள் வென்றதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். ஹாட்ரிக் வென்ற ஒரே இந்தியரான உங்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஆண்டு இந்தியாவின் 75வது கேன்ஸ் பட விழாவில் உங்கள் இசை பார்வையாளர்களைக் கவர்ந்தது, உங்கள் பணி நமது சூழலுடன் இணக்கமாக வாழ்வதற்கான செய்தியைப் பரப்புகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரிக்கி கேஜ்ஜை நாமும் வாழ்த்துவோம் .