சிங்கப்பூர் அரசு 57ஆவது தேசிய தினத்தை சமீபத்தில் கொண்டாடியது. அப்போது சிங்கப்பூரில் உள்ள 74 பாரம்பரிய தேசிய நினைவுச் சின்னங்களின் பட்டியலில் சுபாஷ் சந்திரபோஷின் ஐ.என்.ஏ. வீரர்கள் நினைவாக உள்ள 200 ஆண்டுகள் பழமையான பதாங் மைதானம் உள்ள நினைவுச் சின்னமும் இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சுபாஷ் சந்திரபோஸ் ‘ராணி ஆப் ஜான்சி’ என்கிற படைப்பிரிவை உருவாக்கியபோது எழுப்பப்பட்ட நினைவுச்சின்னம்தான் இது (படத்தில்).
ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தனியொருவராக சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய போர்ப் படை இந்திய தேசிய இராணுவம். இதில் இந்தியர்கள் பலர் தன்னை இணைத்துக்கொண்டு போராடினர். வெற்றியைக் கண்டனர். அதேபோல் பலர் தங்கள் இன்னுரையும் ஈந்தனர். அவர்களின் பல நூறு பேர்கள் தமிழர்கள். அதிலும் குறிப்பாக தமிழகப் பெண்கள். அதுவும் கேப்டன்களாகவும் இருந்துள்ளனர். அவர்களின் ஒருவர் கேப்டன் லட்சுமி. அவர் சில வருடங்களுக்கு முன்தான் மறைந்தார். இப்படி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஐ.என்.ஏ. படையில் இணைந்து போரிட்டு வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டதுதான் பதாங் மைதானத்தில் உள்ள நினைவுச்சின்னம். இதில் பல தமிழர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது தமிழரின் வீரத்தைப் பறைசாற்றுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, 2015 நவம்பர் 24 அன்று ஐ.என்.ஏ. நினைவிடத்தில் ஐ.என்.ஏ. தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் கிழக்காசிய நாடான சிங்கப்பூரில் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கான மைதானமாக பதாங் அமைந்துள்ளது. இங்கு, பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து பல முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டபோது 1943ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கும் சென்றிருந்தார். அப்போது ‘பதாங்’ மைதானத்தில்தான் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்தார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக ‘டெல்லி சலோ’ என்று அவர் உணர்ச்சிப்பொங்க முழக்கமிட்ட இடம் ‘பதாங்’.
ஜப்பானியர்களுக்கும் ஐ.என்.ஏ.வுக்கும் பொதுவான ஒரு எதிரி ஆங்கிலேயராக இருந்ததால், சிங்கப்பூர் ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது இந்த நினைவுச் சின்னம் கட்டப்பட்டது. போர் நினைவுச் சின்னத்தில் ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் தியாகம் என்ற சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதை இலக்காகக் கொண்டு ஜப்பானியப் படைகளால் ஐ.என்.ஏ. ஆதரிக்கப்பட்ட காலம் அது.
ஆங்கிலேயர்கள் சிங்கப்பூரில் தங்கள் காவல் நிலையத்தை நிறுவியபோது, இந்திய சிப்பாய்கள் முதன்முதலில் தங்கள் முகாம்களை பதாங்கில்தான் நிறுவினர். சுபாஷ் சந்திர போஸ் 1945, ஜூலை 8ல் அடிக்கல் நாட்டினார்.
சிங்கப்பூர் மீண்டும் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 1945 இல் ஜப்பானியர்களால் ஒரு மாதத்திற்குள் இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.
நேசநாடுகளால் 1945 இல் சிங்கப்பூர் மீட்கப்பட்டபோது, தென்கிழக்கு ஆசிய கட்டளையின் தலைவரான லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன் அரசியல் காரணங்களுக்காக பதாங் மைதானத்தில் இருந்த முன்னாள் இந்திய தேசிய இராணுவ நினைவுச்சின்னத்தை இடிக்க உத்தரவிட்டார்.
ஆங்கிலேய விடுதலைக்குப் பிறகு 1995ஆம் ஆண்டில், சிங்கப்பூரின் தேசிய பாரம்பரிய வாரியம் இந்த இடத்தை ஒரு வரலாற்றுத் தளமாக அடையாளப்படுத்த நினைவுச்சின்னம் இருந்த இடத்தில் ஒரு கல்லறை அமைத்தது. பின்னர் சிங்கப்பூரில் உள்ள இந்திய சமூகத்தின் நிதி நன்கொடைகளுடன், முந்தைய நினைவுச்சின்னத்தை நினைவுகூரும் புதிய நினைவுச்சின்னம் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட இந்திய-தமிழர்களின் விடுதலை வீர வரலாற்று சாட்சியாக நிற்கிறது.