தமிழ்நாடா? தமிழகமா? என்கிற ‘லாவணி’ தமிழ்நாட்டில் நடக்கிறது. ஆனால், சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே ‘தமிழ்நாடு காத்த பெருமான்’; ‘தமிழ் வாழப் பிறந்தவன்’; ‘கன்னடரையும் தெலுங்கரையும் தோற்கடித்தவன்’ என்றெல்லாம் கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட மன்னன் வரலாற்றில் மறைக்கப்படுகிறார். இந்த அவலநிலை மாற்றப்பட வேண்டும்.
“காடவராயர்கள் – சம்புவராயர்கள்”
தமிழ்நாட்டை தமிழ்நிலமாக நெடுங்காலம் காத்து நின்றவர்கள் பல்லவர்களும், அவர்கள் வழிவந்த சம்புவராயர்களும் காடவராயர்களுமே. (இருவரும் உறவினர்களே). இவர்களே வடஇந்தியப் படையெடுப்புகள் பலவற்றைத் தடுத்து நின்றார்கள். தென் தமிழகத்தில் சிங்களப் படையெடுப்பை முறியடித்து தமிழ்நாட்டைக் காத்தார்கள்.
காடவராயர்கள் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தொடங்கி 13ஆம் நூற்றாண்டுவரை (கி.பி.1076 – கி.பி. 1279) வடதமிழ்நாட்டை ஆண்டனர். தெற்கே தஞ்சை, வடக்கே ஆந்திர மாநில கிருஷ்ணாநதி வரை காடவராயர்கள் ஆட்சி செய்தனர்.
சிதம்பரம் நடராசர் ஆலயத்தின் தெற்கு கோபுரத்தைப் புதுப்பித்தும், கிழக்கு கோபுரத்தைப் புதிதாக அமைத்தும், தில்லைக் காளி கோவில், கடலூர் மாவட்டத்தில் பெருமாள் ஏரி ஆகியவற்றை அமைத்தும் பல சாதனைகளைச் செய்தவர்கள் காடவராயர்கள்.
காடவராய மன்னர்களில் புகழ்பெற்றவர் கோப்பெருஞ்சிங்கன். இவன் மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் மகளை தில்லை நடராஜர் கோயிலில் திருமணம் செய்தான். அதே கோப்பெருஞ்சிங்க காடவராயன், கி.பி. 1216ஆம் ஆண்டில், தனது மைத்துனனான சோழ அரசன் மூன்றாம் இராசராச சோழனை கைது செய்து சேந்தமங்கலத்தில் சிறை வைத்தான்.
தமிழையும் தமிழ்நாட்டையும் தனது பல கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளான் கோப்பெருஞ்சிங்கன்.
“தமிழ்நாடு காத்த பெருமாள்” – என்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கல்வெட்டு.
“திருநெடுந் தோப்பும் தீர்த்த மாகிய
அமுதநன் னதியும் அனைத்திலும் தூய
தமிழ்நாடு காத்த பெருமாள் தடாகமும்
வண்டிசை பாடும் அது மலர் வாசம்”
(தமிழ்நாடு காத்த பெருமாள் தடாகம் எனும் நீர்நிலையை திருவண்ணமலையில் அமைத்தவன்)
“செந்தமிழ் வாழப்பிறந்தவன் கோப்பெருஞ்சிங்கன்”- என்கிறது வந்தவாசி அருகே உள்ள வாயலூர் கல்வெட்டு.
வென்னிடாத போர்க் கன்னடர் வென்னிடப்
பொருததுன் பெருஞ்சேனை
விளங்கு செம்பொனி னம்பலக் கூத்துநீ
விரும்பிய தேவாரம்
பின்னி காவல அவனி நாராயண
பேணு செந்தமிழ் வாழப்பிறந்த
காடவகோப் பெருஞ்சிங்க நின்
பெருமை யார் புகழ்வாரேய்
(வெற்றிபெற முடியாத கன்னடரை வென்றவன், சிதம்பரம் நடராஜரை வழிபடுபவன், செந்தமிழ் வாழப்பிறந்தவன்).
“கன்னடரையும் தெலுங்கரையும் தோற்கடித்தவன்” – என்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கல்வெட்டு.
குடதிசைக் கருநடர் தென்புலங் குறுகவும்
வடதிசைத் தெலுங்கர் வடக்கிருந் தழியவும்
போர்பல கடந்து பொருந்தா மன்னவர்
(குடகுமலை திசையில் உள்ள கருநாடகரின் தென்புலத்தை குறைத்தவன், வடதிசையில் உள்ள தெலுங்கரை அங்கேயே அழியச் செய்தவன்).
“கோப்பெருஞ்சிங்கன் அடையாளங்கள்”
சிதம்பரம் நடராஜர் கோயிலின் கிழக்கு கோபுரத்தில் கோப்பெருஞ்சிங்கனின் திருவுருவச்சிலை இடம்பெற்றுள்ளது.
செஞ்சி அருகே உள்ள அன்னமங்கலத்தில், சிங்கம் ஒன்று யானையை வீழ்த்துவது போன்ற சிற்பம் ஒன்று உள்ளது. அதில் “சொக்கப் பல்லவன் வாய் செல்லும் வன்னியர் மணாளன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வன்னியர் மருமகனான சோழ மன்னனை கோப்பெருஞ்சிங்கன் முறியடித்தான் என்பது இதன் பொருளாகும்.
தமிழ்நாட்டு வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டவர்கள் காடவராயர்கள். அவர்களது சந்ததியினரான கச்சிராயர்கள் இப்போதும் விருத்தாசலம் அருகில் உள்ள முகாசாபரூரிலும் கடலூரின் அருகில் உள்ள தியாகவல்லியிலும் வாழ்கின்றனர்.
800 ஆண்டுக்கு முன்பே தமிழுக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் பாடுபட்ட கோப்பெருஞ்சிங்கன் போற்றப்பட வேண்டும். கல்வெட்டுகளில் தன்னை பள்ளி என்று காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் குறிப்பிட்டுள்ளான் என்பதற்காகவே, அவனது வரலாற்றை மூடி மறைக்கக் கூடாது.
குறிப்பு: தமிழ்நாடா? தமிழகமா?
தமிழ்நாடு என்பது இந்த நாட்டின் பெயர். தமிழகம் என்பதும் ஒரு சிறப்பு பெயர் தான். இந்த இரண்டுமே காலம் காலமாக இங்கு வழங்கி வருகிறது.
பழந்தமிழ் காவியமான சிலப்பதிகாரம் “தமிழ்நாடு” “தமிழகம்” என இரண்டையுமே குறிப்பிடுகிறது.
1. தமிழ்நாடு
“இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இது நீ கருதினை ஆயின்”
முழங்கும் கடலை எல்லையாக கொண்டது தமிழ்நாடு என்பது இதன் பொருளாகும்.
2. தமிழகம்
“இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி”
‘அரவாரமுடைய கடலால் சூழப்பட்ட தமிழகத்தின் மக்கள் அனைவருக்கும் தெரியுமாறு, தமிழ் மொழியின் தன்மை முழுதும் தெரிந்தவனாக புலவன் இருத்தல் வேண்டும்’ – என்பது இதன் பொருளாகும்.
தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்கள் தமக்குள் பகுதிகளாக பிரித்துக்கொண்டாலும், அவற்றின் எல்லைகள் அவ்வப்போது மாறினாலும், இந்த நிலத்துக்கு உள்ளேயே பல நாடுகள் வழங்கி வந்தாலும் – தமிழ்ப்பேசும் பகுதி எப்போதும் ஒரு தேசமாகவே கருதப்பட்டது.
அரசியல் ரீதியாக தமிழ்நாடு என்பதே வழக்கத்தில் பயன்படுத்தப்பட்டது. மெட்ராஸ் மாகாணத்தின் தமிழர் பகுதிக்கு தமிழ்நாடு என்கிற பெயர் சூட்டப்படுவதற்கு முன்பாகவே, எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் தமது கட்சிக்கு ‘தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி’ என்கிற பெயரைதான் சூட்டினார்.
எனவே, தமிழ்நாடு என்பது தான் முதன்மை பெயர். தமிழகம் என்பதும் இதன் சிறப்பு பெயர் ஆகும்.