1916-ல் மறைமலையடிகளார் தொடங்கிய தனித் தமிழ் இயக்கத்துடன் இணைந்து, அதை வளர்த்தெடுத்தவர்களில் கு.மு.அண்ணல் தங்கோ முக்கியமானவர். அவரும் பெற்றோர் சூட்டிய பெயரைத் தமிழ்ப்படுத்திக் கொண்டவர். ‘சுவாமிநாதன்’ என்ற பெயரை ‘அண்ணல் தங்கோ’ என்று மாற்றிக்கொண்டார். தனது திருமணத்தைத் தானே முன்னின்று திருக்குறளை முன்மொழிந்து தமிழில் நடத்திக் கொண்டவர் அவர். தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.
1918-ல் காங்கிரஸில் சேர்ந்த அண்ணல் தங்கோ, 1923-ல் மதுரை வைத்தியநாத ஐயருடன் இணைந்து கள்ளுக் கடை மறியலைத் தலைமை தாங்கி நடத்தினார். நாக்பூரில் தடையை மீறி கொடிப் போராட்டம் நடத்திச் சிறை சென்றார். டாக்டர் வரதராஜுலு நாயுடுவுடன் இணைந்து குருகுலப் போராட்டத்திலும் கலந்துகொண்டார்.
அண்ணல் தங்கோவின் தலைமையில் நடந்த நீல் சிலை எதிர்ப்புப் போராட்டத்தில் காமராஜர் ஒரு தொண்டராகக் கலந்துகொண்டிருக்கிறார். நீல் சிலை எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, அப்போது நீதிபதியாக இருந்த பம்மல் சம்பந்த முதலியார் அண்ணல் தங்கோவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனைக்கு உத்தரவிட்டார். சிறைக்குச் சென்ற அண்ணல் தங்கோ அங்கு பம்மலாரின் நாடகத்தை நடித்து சிறைக் கைதிகளின் மறுவாழ்வுக்கு நிதி திரட்டினார்.
சைமன் குழு வருகை எதிர்ப்பு, உப்பெடுக்கும் போராட்டம் என்று காங்கிரஸ் தலைமையில் நடந்த பல சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டவர் அண்ணல் தங்கோ. பின்பு, காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, ‘உலகத் தமிழ் மக்கள் தற்காப்புப் பேரவை’ எனும் அமைப்பை நிறுவினார். ‘தமிழ்நிலம்’ என்ற பத்திரிகையையும் நடத்தினார்.
தமிழில் பெயர் சூட்டுவதை ஓர் இயக்கமாக முன்னெடுத்துச் சென்றவர் அவர். மணியம்மையாருக்கு ‘அரசியல்மணி’ என்று பெயர் சூட்டியவர் அவர். பின்பு, அப்பெயரில் அரசியல் மறைந்து, மணி மட்டும் நிலைபெற்றது. சி.பி.சின்ராஜ், ‘சிற்றரசு’ ஆனதும் அவரால்தான். கருணாநிதிக்கும் ‘அருட்செல்வன்’ என்ற பெயரை அவர் பரிந்துரை செய்திருக்கிறார். கிருபானந்தவாரியாரை ‘அருளின்பக் கடலார்’ என்பார். ரெங்கசாமியை ‘அரங்கண்ணல்’ என்று மாற்றியவரும் அண்ணலே!
திராவிடர் கழகத்துக்குத் தமிழர் கழகம் என்று பெயரிட வேண்டும் என்றும் அண்ணல் தங்கோ வலியுறுத்தினார். அந்தக் கோரிக்கையை பெரியார், அண்ணா இருவருமே ஏற்றுக்கொள்ளவில்லை. சிவாஜி அறிமுகமான ‘பராசக்தி’ திரைப்படத்தின் முடிவில், ‘எல்லோரும் வாழ வேண்டும்’ என்ற பாடல் முழங்கும். அந்தப் பாடலை இயற்றியவர் தனித்தமிழ் இயக்க முன்னோடியான கு.மு.அண்ணல் தங்கோ. ‘பெற்றமனம்’, பசியின் கொடுமை’, கோமதியின் காதலன்’ ஆகிய திரைப்படங்களிலும் பாடல் எழுதி இருக்கிறார். தமிழ் மொழியின் சிறப்பை வளர்க்கும் வகையில் பல நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்கள் அனைத்தையும் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அரசுடைமையாக்கி சிறப்பித்தார் .
1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் அவர் எழுதிய ‘நேற்று பிறந்த மொழி! முத்தம்மா! நீட்டி அளக்குதடி! ஆற்றல் நிறைந்த தமிழ்! முத்தம்மா! ஆட்டங் கொடுக்குதடி!” பாடல் தமிழரைத் தட்டியெழுப்பிய பாடலாகும்.
முதல் இந்தி எதிர்ப்புப் போரில் 15.1.1939 இல் முதல் களப்பலியானவர் நடராசன். அவரின் கல்லறையில் நின்று கொண்டு “நடராசன் அவர் குடிக்கு ஒரே பிள்ளை. நம் மகன் சிறையிலிருந்து வருவான், திருமணம் செய்வோம் என பெற்றோர் எண்ணியிருந்தனர். மணக்கோலத்தில் போக இருந்தவர் இப்படி பிணக்கோலத்தில் சென்று விட்டாரே” என்று அண்ணல் தங்கோ உருக்கமாக உரையாற்றிய போது கண் கலங்காதவர்களே இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.
ஈ.வெ.ராமசாமி பெரியாரோடும் அவர் நீதிக்கட்சியில் பணிபுரிந்தார். 1941இல் திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழர்கள் தங்களைத் திராவிடர் என்று குறிக்காமல் ‘தமிழர்’ என்று குறிக்கும்படி வேண்டினார். இக்கருத்தை முதலில் ஒப்புக் கொண்ட ஈ.வெ.ரா.பெரியாரும், அண்ணாவும் பின்னர் மறுப்பு தெரிவித்தனர். தமிழரல்லாதார் நலன் காத்திடும் வகையில் திராவிடர் என்று குறிப்பிடுமாறு தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.
நீதிக்கட்சி நடத்திய ஏடுகளெல்லாம் தமிழில் திராவிடன், தெலுங்கில் ஆந்திரப் பிரகாசிகா, ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் என்றும் பெயர் வைத்து தமிழரின் இன அடையாளத்தை மறுத்து வந்தன. இதைப் புரிந்து கொண்ட அண்ணல் தங்கோ 1942இல் ‘தமிழ் நிலம்’ எனும் ஏட்டைத் தொடங்கினார். அதில் தமிழர் நிலத்திற்கு வேலி இல்லாததை நினைத்து, “வீட்டுக் கரண் வைத்தனை! -வயலுக்கும் வேலி அரண் வைத்தனை, நாட்டுக் கரண் வைத்திலை! தமிழா! இல்லையே?” என்று பாடல் தீட்டினார்.
1944இல் நீதிக்கட்சி பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதும் தன் கருத்தை பதிவிட அண்ணல் தங்கோ தயங்கவில்லை. கி.ஆ.பெ.விசுவநாதம், சவுந்தர பாண்டியன், தங்கவேலு ஆகியோரோடு இணைந்து ‘தமிழர் கழகம்’ பெயரை சூட்டிமாறு வாதாடினார். வழக்கம் போல் ஈ.வெ.ரா. பெரியாரும் திராவிடப் பித்து தலைக்கேறி ‘திராவிடர் கழகம்’ என்றே பெயர் சூட்டிட இதை ஏற்க அண்ணல் தங்கோவின் மனம் இடம் தரவில்லை. உடனடியாக அக்கட்சியை விட்டு விலகினார்.
1950ஆம் ஆண்டு கோவையில் தி.மு.க. சார்பில் முத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அண்ணல் தங்கோ அதில் பங்கேற்று “திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே காதிலே நாராசம் ஊற்றியது போல் இருக்கிறது” என்றும் இம்மாநாட்டில் மூவேந்தர் சின்னமான புலி, வில், கயல் பொறித்த தமிழ்க் கொடியை ஏன் ஏற்றவில்லை? என்றும் சினத்தோடு வினா எழுப்பினார்.
1953இல் ஆந்திரர்கள் தனிமாநிலம் கேட்டதோடு தமிழர் தாயகப் பகுதிகளை அபகரிக்க முயன்றனர். அப்போது அதனை எதிர்த்து வேலூரில் தமிழக எல்லைத் தற்காப்பு மாநாட்டை நடத்தி தமிழர்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்தார்.
அன்று அண்ணல் தங்கோ பேச்சைக் கேட்டிருந்தால் இன்று சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் வந்தது என்கிற சொல்லுக்கு வழிபிறந்திருக்காது.
வாழ்நாள் முழுவதும் திருக்குறள் நெறியைப் பரப்பவும் தனித்தமிழை வளர்க்கவும் பாடுபட்ட கு.மு.அண்ணல்தங்கோ ஜனவரி 4, 1974ல் காலமானார். அப்போது மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் நேரில் வந்து “தமிழ்மொழி ஒரு தன்னலமற்ற தொண்டனை இழந்து விட்டதே” என்ற படி ஓவென தலையிலடித்து அழுதார்.