தஞ்சை பெரிய கோயிலும் மோர் விற்கும் மூதாட்டியும்

0 0
Spread the love
Read Time:6 Minute, 7 Second

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டுவிட்ட நேரம் அது…

கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்கப்பட்ட சந்தோஷத்தில் ராஜராஜ சோழன் நிம்மதியாகத் தூங்கும்போது… கனவில் இறைவனான பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார்.

‘ராஜராஜா!’ என்றழைக்க… ராஜராஜ சோழன், “இறைவா, என் பாக்கியம் என்னவென்று சொல்வது… தாங்கள் எனக்குக் காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்… தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது? இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிகப் பெரிய கோயிலாகக் கட்டியுள்ளேன். அதற்குத் ‘தஞ்சை பெரிய கோயில்’ என்று பெயர் சூட்டப் போகிறேன். மகிழ்ச்சிதானே தங்களுக்கு?” என்று கேட்டான் ஆனந்தமாக.

இறைவன் சிரித்துக்கொண்டே, “ம்ம்ம்… மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம். ஒரு மூதாட்டியின் காலடி நிழலின்கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்…” என்று கூறி மறைந்தார். ராஜராஜனின் கனவும் கலைந்தது.

விழித்தெழுந்த ராஜராஜன் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்தக் கனவுக்கு விளக்கம் கேட்டான். யாருக்கும் பதில் தெரியவில்லை.

நேராகத் தான் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்குச் சென்றான். கோயில் சிற்பியிடம் தான் கண்ட கனவைக் கூறி விளக்கம் கேட்டான்.

சிற்பி தயங்கியவாறே, “அரசே, கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் ஒரு ஏழை மூதாட்டி தினமும் மத்திய வேளையில் இங்கு வருவார்… ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்தக் கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியைக் காசுக்காகவும், பாதியை இந்தக் கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்குக் குடிக்க இலவசமாகக் கொடுப்பார்… நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார். ‘ஏதோ இந்த ஏழைக் கிழவியால் இந்தக் கோயிலுக்குச் செய்ய முடிந்த தொண்டு’ என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார்.

இப்படி இருக்கும்போது போன வாரத்தில் ஒரு நாள், ஆலயச் சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை. நாங்களும் அதன் அளவை எவ்வளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது. அல்லது குறைவாக இருந்தது.

எங்கே ஆலயப் பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம். அப்பொழுது இந்த மோர் விற்கும் மூதாட்டி வந்து மோர் கொடுத்துக் கொண்டே, ‘’ஏன் கவலையாய் இருக்கிறீர்கள்?’’ என்று கேட்டாள். நாங்களும் கல் சரி ஆகாத விஷயத்தைச் சொன்னோம்.

அதற்கு அவள் “என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது. நான் அதைத்தான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன். அதை வேண்டுமானால் எடுத்துப் பொருத்திப் பாருங்கள்” என்றார். நாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த மூதாட்டி சொன்ன கல்லை எடுத்துவந்து பொருத்தினோம்.

என்ன ஆச்சரியம்! கருவறையின் மேற்கூரைக்கு அளவெடுத்து வைத்தது போல் மிகச் சரியாக இருந்தது. அதைத்தான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தி இருப்பார் என்று அடியேன் நினைக்கிறேன்” என்றார் சிற்பி.

இதைக் கேட்டதும் ராஜராஜனுக்கு எல்லாம் புரிந்தது. ‘எவ்வளவு பொருள் செலவு செய்து கோயில் கட்டினாலும் இறைவன் நேசிப்பது அன்பான ஒரு ஏழையின் பக்தியைத்தான். ஆரவாரமாகப் பொருள் செலவு செய்து நான் கோயிலைக் கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த மூதாட்டி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே…’ என்று கண்ணீர் மல்கினான்.

பின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, “அமைச்சரே, கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்… வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்… இந்தக் கோயில் கட்டியது அந்த அம்மையார்தான்… நான் அல்ல… இதற்கு இறைவனே சாட்சி” என்றான்.

பேருக்கும் பெருமைக்கும் ஆசைப்படாதவன் ராஜராஜ சோழன்.

நன்றி : அசோக் ராமநாதன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!