கல்வெட்டு ஆராய்ச்சி பேரறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் நினைவு தினம் இன்று. (2.01.1960)
கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும், மீனாட்சியம்மையாருக்கும் 15.08.1892 அன்று மகனாகப் பிறந்தார் சதாசிவப் பண்டாரத்தார். 1910ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் கற்றுத் தேர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் தாலுகா அலுவலகத்திலும், கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியிலும் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பணியில் இருந்தபோது ‘செந்தமிழ்’ என்ற மாத இதழில் இவரது கட்டுரைகள் வெளியாகின.
தமிழாசிரியராகத் தமிழுக்கும் தமிழக வரலாற்றுக்கும் தாம் பிறந்த தமிழ் மண்ணுக்கும் தமது வரலாற்று ஆய்வின் மூலம் பெருமை சேர்த்துள்ளார். தி.வை.சதாசிவ பண்டாரத்தார் தனது 22 வயது முதலே வரலாற்று ஆய்வு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார்.
தமிழில் முதன்முதலில் பிற்காலச் சோழர் வரலாற்றை விரிவாக எழுதி சோழர்களின் புகழை மூன்றடுக்கு கோபுரமாய் உச்சியில் ஏற்றி வைத்தார்.
கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் ஆட்சி செய்தது சோழப் பேரரசு. புகழ்பெற்ற சோழர்களின் முழுமையான வரலாற்றைத் தமிழில் முதன்முதலில் எழுதியவர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார்தான். ஒரு காலத்தில், வரலாற்று ஆய்வு மாணவர்களுக்கு மானசீக குருவாக இருந்தவர் இவர்.
தமிழ்ச் சங்கம் வளர்த்த பாண்டியர்களை ‘பாண்டியர் வரலாறு’ பற்றியும் எழுதி போற்றினார்.
இறுதி காலத்தில் அவரிடம் பலர் பல்லவர், சேரர் வரலாறு எழுதக் கேட்டிருந்த நிலையில் உடல்நிலை பாதிப்பால் முடியாமல் போய்விட்டது. ஆனால் பல்லவர், சேரர் பற்றி சில ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
பண்டாரத்தார் ஊர் ஊராகச் சென்று தாம் ஆற்றிய சொற்பொழிவுகளில் அவ்வூர் வரலாற்றையும் பல அரிய கல்வெட்டுத் தகவலையும் கூறியுள்ளார். நூலாக அதை வெளியிடவில்லை.
கல்கி அவர்கள் தாம் எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள பிற்காலச் சோழர் சரித்திரம் படைத்த பண்டாரத்தாருக்கு ஒரு விழா எடுக்க முடிவு செய்தார். ஆனால் அதற்குள் கல்கி காலமாகிவிட்டார்.
தம் வாழ்நாள் முழுவதும் இறுதி மூச்சி வரை தமிழுக்கும் வரலாற்றுக்கும் சதாசிவப் பண்டாரத்தார் பணியாற்றினார்.
நீலகண்ட சாஸ்திரிகள் ஆங்கிலத்தில் எழுதிய, சோழர் வரலாறு சொல்லும் ‘சோழாஸ்’ எனும் நூலில், ராஜராஜ சோழனின் அண்ணன் ஆதித்த கரிகலான் கொலை செய்யப்பட்ட விதத்தை தனது ஆராய்ச்சி பாணியில் சொல்லியிருப்பார். சதாசிவ பண்டாரத்தார் தனது நூலில், ஆதித்த கரிகாலன் எதற்காக, யாரால் கொல்லப்பட்டான் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார். இதற்கு, காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள உடையார்குடியில் இருக்கும் அனந்தீஸ்வரர் கோயிலில் ராஜராஜ சோழனால் வைக்கப்பட்ட கல்வெட்டை ஆதாரமாகக் காட்டியிருப்பார். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் தகுந்த ஆதாரத்துடன் அவர் விளக்கியிருப்பதால் அவரது கருத்துக்களை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
சதாசிவப் பண்டாரத்தார் காலத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த சுமார் எட்டாயிரம் கல்வெட்டுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. ஆனால், இப்போது தமிழில் மட்டுமே சுமார் 24 ஆயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைக் கொண்டு, சோழர் வரலாற்றை நாம் புதுப்பித்து எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால், துரதிருஷ்டம் என்னவென்றால், தமிழகத்திலுள்ள ஒரு சில பல்கலைக் கழகங்களில் முதுகலை படிப்பில் சோழர் வரலாறு பாடத்தையே நீக்கிவிட்டார்கள்.
திருப்புறம்பியத்தில் அவர் பிறந்து வாழ்ந்த இல்லம் தற்போது தனியார் வசம் உள்ளது. அதை அவர்கள் தற்போது இடிக்கப் போவதாகக் கூறுகின்றனர். தமிழக அரசு அதை மீட்டு நினைவு இல்லம் அமைத்திட வேண்டும். மேலும் அவ்வூரில் அவருக்கு மணிமண்டபம் அமைத்து அவரது பெயரில் தபால் தலை வெளியிட வேண்டும் என்று தமிழக மக்கள், வரலாற்று அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், வரலாற்று ஆர்வலர்கள், திருப்புறம்பயம் ஊர் மக்கள், அவரது குடும்பத்தினர் சார்பாக தமிழக அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்.
தி.வை.சதாசிவ பண்டாரத்தார் எழுதிய நூல்கள்
முதல் குலோத்துங்க சோழன்
பிற்காலச் சோழர் சரித்திரம் (பாகம் 1, 2, 3)
பாண்டியர் வரலாறு
செம்பியன் மாதேவி தல வரலாறு
காவிரிப் பூம்பட்டினம் வரலாறு
திருப்புறம்பயம் தலவரலாறு
இலக்கியமும் கல்வெட்டுகளும்
கல்வெட்டு கூறும் உண்மைகள்
தமிழ் இலக்கிய வரலாறு (பாகம் 1, 2)
தொல்காப்பியப் பாயிரம்
திருக்கழுக்குன்றக் கல்வெட்டுகள்
மற்றும் பல ஆய்வு கட்டுரைகள்.