இந்தியாவில் திருமணமான பெண்கள் 20 முதல் 24 வாரங்கள் வரை உள்ள தங்களின் கருவை பாதுகாப்பாகவும் சட்டபூர்வமாகவும் கலைக்க உள்ள உரிமையைப் போலவே திருமணமாகாத கருத்தரித்த பெண்களுக்கும் அந்த உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தியாவில் 1971ஆம் ஆண்டில் கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டது. ஆனால் அதன்பின் வந்த ஆண்டுகளில் பெண் குழந்தைகள் என்ற காரணத்தினால் கருக் கலைப்பு பெருகிடவே, பாலின விகிதத்தில் தீவிர சமநிலையற்ற தன்மை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து யார், யார் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்பதில் கடுமையான விதிகள் வகுக்கப்பட்டன.
2021ஆம் ஆண்டு கருக்கலைப்பு சட்டம் திருத்தப்பட்டது. அதில் யார், யார் கருக் கலைப்பு செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்ட பட்டியலில் ‘திருமணமாகாத பெண்கள்’ விடுபட்டிருந்தனர். இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருந்த நிலையில் இந்தத் தீர்ப்பு இன்று வந்துள்ளது.
திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் 20 – 24 காலக் கருவைக் கலைக்கலாமா என்பது குறித்த திருமணம் ஆகாத பெண் ஒருவர் அனுமதி கோரி தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நிறைவடைந்த நிலையில் இந்தத் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
கருவுறுதல் சட்டம் மற்றும் விதிகளின்படி திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் 20-24 காலக் கருக்கலைப்பு பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான கருக் கலைப் புக்கு உரிமை உண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பான முறையில் மட்டுமே கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (29-9-2022) சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா, ஜே.பி.பார்டிவால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருக்கலைப்பு செய்ய அனைத்துப் பெண்களும் தகுதியானவர்கள் என்று தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பின் விவரம் வருமாறு, கடந்த வருடம் இந்திய கருக்கலைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தின்படி பல்வேறு பெண்கள் 20 – 24 வாரங்களில் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள், தீவிர குறை கொண்ட கருவைச் சுமக்கும் பெண்கள், கர்ப்ப காலத்தில் தனது திருமண உற வில் மாற்றம் கண்ட பெண்கள் ஆகியோர் இந்தப் பட்டியலில் அடங்குவர். இந்தச் சட்டம் திருமணமான பெண்கள் அல்லது திருமணமாகாத பெண்கள் என்று பிரித்துப் பார்க்கவில்லை. ஒருமித்த உறவில் உள்ள திருமணமாகாத பெண்களையும் இந்தத் தீர்ப்பு குறிக்கும்
சில சமயங்களில் பெண்கள் வலுக்கட்டாயமாக உடலுறவுக்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பம் தரிக்கிறார்கள். இப்படிப்பட்ட பெண்களை அதில் இருந்து காப்பாற்ற இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.
பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களைப் போலவே திருமணமாகி வலுக்கட்டாயமாகக் கர்ப்பம் தரிக்கப்பட்ட பெண்கள் மற்றும் திருமணமாகாத பெண்கள் கருக்கலைப்பு செய்ய சட்டபூர்வ உரிமை உண்டு.
கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம். பாதுகாப்பாற்ற முறையில் கருக்கலைப்பு செய்து கொள்வது மட்டுமே தடுக்கப்பட வேண்டும்.
தேவையற்ற கர்ப்பத்தை கலைக்கும் உரிமை திருமணமான பெண்களுக்கு மட்டுமே உள்ளது என சுருக்குவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று நீதிபதிகள் இன்று (29-9-2022) வழங்கப்பட்ட தீர்ப்பில் கூறப்பட்டது.
மே மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவேறு தீர்ப்புகளை நீதிபதிகள் அமர்வு கூறியது. எனவே இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.