சுதந்திரப் போராட்ட வீர் ரஅர்த்தநாரீச வர்மாவால் நடத்தப்பட்ட ‘வீரபாரதி’ பிரிட்டிஷ் இந்திய நாடாளுமன்றத்தால் தடை செய்யப்பட்ட ஒரே தமிழ் பத்திரிகை.
இந்திய தேச விடுதலைக்குத் தொண்டாற்றிய சுதேசமித்திரன், தி ஹிந்து போன்ற பத்திரிகைகளை அறிந்த பலருக்குக்கூட ‘வீர பாரதி’ இதழ் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தேச விடுதலைக்குத் தொண்டாற்றிய பத்திரிகைகள் பற்றிய வரலாற்று நூல்களில் ‘வீரபாரதி’ பற்றிய குறிப்புகள் இடம் பெறாததே இதற்குக் காரணம்.
‘வீரபாரதி’ என்பது 1930-களில் காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்ட ஒரு பத்திரிகை. அக்கட்சி, ‘வீரபாரதி’ என்ற பெயரில் அன்றைய இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு மொழிகளில் பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தி வந்தது.
இப்பத்திரிகை தமிழ் மொழியில் வாரம் மும்முறை இதழாக 1931 மார்ச்
26ஆம் தேதி சென்னையில் வெளியானது.
சேலம் கவிச்சிங்கம் ராஜரிஷி சு. அர்த்தநாரீச வர்மா இந்த இதழின் ஆசிரியர். P. மாணிக்கம் பிள்ளை இதன் வெளியீட்டாளர்.
29-4-1931 முதல் 29-9-1931 வரை ஆறு மாதங்களில் மொத்தம் 68 இதழ்கள் வெளியாயின. இதழின் ஆசிரியரான ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா பன்மொழிப் புலவர்.
தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பாண்டித்யம் மிக்கவர். க்ஷத்ரியன், க்ஷத்ரிய சிகாமணி, தமிழ் மன்னன் போன்ற பத்திரிகைகளை நடத்தியவர். பல நூல்களை இயற்றியவர். வரலாற்றிலும் வேத புராணங்களிலும் ஞானம் பெற்றவர். தேசபக்தர்.
சேலத்தில் 30 ஆயிரம் பேரைக் கூட்டி மாநாடு போட்டு மூதறிஞர் ராஜாஜி அவர்களை அம்மாநாட்டிற்கு வரவழைத்து, நாட்டிலேயே முதன்முறையாக சேலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியவர்.
இத்தகைய தீவிர செயற்பாட்டாளரும் அறிஞருமான ராஜரிஷி வர்மா ஆசிரியராகப் பொறுப்பேற்று இருந்ததால், ‘வீரபாரதி’ வீரியமிக்க இதழாக வெளிவந்தது. ஆங்கில ஆட்சிக்கு எதிராக ‘வீரபாரதி’ இதழ் அனல் கக்கியது.
சுதந்திரப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேட்கையை வாசகர்களிடம் உண்டாக்கியது.
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலகட்டத்தில் இந்த இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. அப்போது வட இந்தியாவில் பகத்சிங்கை முன்மாதிரியாகக் கொண்டு இளைஞர்கள் பலர், ஆங்கில அதிகாரிகளைக் கொலை செய்து வந்தனர். இத்தகைய இளைஞர்களைப் பாராட்டி ‘வீரபாரதி’யில் எழுதினார் அர்த்தநாரீச வர்மா.
பஞ்சாப் கவர்னராக இருந்த ஆங்கிலேயரைத் துப்பாக்கியால் சுட்ட வழக்கில் தூக்கிலிடப்பட்ட ஹரி கிருஷ்ணன் என்பவரைப் புகழ்ந்தார்.
சிறைச்சாலை இன்ஸ்பெக்டர் ஜெனரல் கர்னல் சிம்சன் என்பவரைக் கொலை செய்ததற்காக அலிப்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்ட தினேஷ் குப்தா என்பவரைப் போற்றினார்.
தினேஷ் குப்தாவிற்குத் தூக்கு தண்டனை விதித்த அலிப்பூர் ஜில்லா நீதிபதி கார்லிக் துரையைச் சுட்டுக் கொன்ற விமல தாஸ்குப்தாவை ‘வீரபாரதி’யில் பாராட்டினார் அர்த்தநாரீசர்.
ஆங்கில அரசாங்கத்தால் ஏற்படக்கூடிய எத்தகைய விளைவுகள் பற்றியும் கவலைப்படாமல் தமது தேசத்தொண்டைத் தொடர்ந்து செய்துவந்தார் ராஜரிஷி வர்மா.
ஆங்கிலேயருக்கு எதிராக ‘வீரபாரதி’யில் வந்த அனைத்துச் செய்திகளும் உளவுத்துறையால் குறிப்பெடுக்கப்பட்டன.
இவ்வாறு நாடு முழுவதும் கொலைகாரர்களை ஆதரிக்கும் பத்திரிகைகள் என பல பத்திரிகைகள் பட்டியலிடப்பட்டன.
இவற்றில் வெளியிடப்பட்ட செய்திகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சிறு நூலாக அச்சிடப்பட்டது.
1931ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிட்டிஷ் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்நூல் விநியோகிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதங்களும் நடைபெற்றன.
இறுதியில் அச்சு சட்டத்தில் (Press act – emergency) அவசரநிலை கொண்டுவரப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னை மாகாணத்தில் ‘வீரபாரதி’ தடைசெய்யப்பட்டது.
ஆங்கில அரசுக்கு எதிராக எழுதியதால் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி தடை செய்யப்பட்ட தமிழ் பத்திரிகை ‘வீரபாரதி’ மட்டுமே.
அந்த ‘வீரபாரதி’ இதழ்களின் முழு தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார் வரலாற்றாய்வாளர் திரு. ஆறு.அண்ணல். தொடர்புக்கு 9381039035