மலேசியா ஊடகவியலாளர் பொன்.கோகிலம் நிறுவியுள்ள இயல் பதிப்பகத்தின் சார்பில் ஐந்து எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா மதுரையில் கட்டப்பட்டுள்ள உலகத் தமிழ் சங்கத்தில் செல்வி.ப்ரியதர்ஷினியின் பரத நாட்டியத்துடன் தொடங்கியது.
விழாவிற்கு வந்திருந்தவர்களை இயல் பதிப்பகத்தின் இயக்குநர் பொன் கோகிலம் வரவேற்றுப் பேசினார்.
பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
மலேசிய எழுத்தாளர்கள் உமாதேவி வீராசாமி, பத்மநாதன் பரசுராமன், ஏ.கே.ரமேஷ், சுமத்ரா அபிமன்னன், யோகாம்பிகை ஆகியோர் எழுதிய நூல்களை வி.என்.சி.டி. வள்ளியப்பன் வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.
பத்மநாதன் பரசுராமன் எழுதிய ‘42 குறுங்கதைகள்’ என்கிற நூல் குறித்து முனைவர் இளங்குமரன் பேசினார். மேலும் சிறுகதைக்கும் குறுங்கதைக்கும் உள்ள வேறுபாடு குறித்தும் எழுதும்போது என்ன மாதிரியான யுக்திகளை கையாள வேண்டும் என்பது குறித்தும் பேசினார்.
ஏ.கே.ரமேஷ் எழுதிய தீக்ஷா, சுமத்ரா அபிமன்னன் எழுதிய ‘அப்பாவின் அம்மா’, யோகாம்பிகை எழுதிய ‘கரு’ ஆகிய சிறுகதைகள் குறித்து எழுத்தாளர் அமிர்தம் சூர்யா பேசினார்.
நூலின் அவசியம் குறித்து கடவுளுக்கும் தெரிந்திருந்ததால்தான், பாரதக் கதைகளும், மோசேயின் பத்துக்கட்டளைகள் பைபிளாகவும் ஆகியிருக்கிறது என தனது உரையைத் தொடங்கிய அவர் சிறுகதைகள் எழுதும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் வெளியிடப்பட்ட மூன்று சிறுகதைகள் கையாளப்பட்ட விதங்களையும் எடுத்துக்கூறி எழுத்தாளர்களைப் பாராட்டிப் பேசினார்.
உலகத் தமிழ் சங்கத்தின் இயக்குநர் அன்புச்செழியன் தலைமை உரையாற்றும்போது உலகத் தமிழ்ச் சங்கம் செய்து வரும் பணிகள் குறித்துப் பேசினார். மேலும் உலக நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்படும் இதழ்கள், எழுத்தாளர்களின் நூல்கள் பெறப்பட்டு அதனை ஆவணப்படுத்தும் நடவடிக்கையை உலகத் தமிழ்ச் சங்கம் மேற்கொண்டுள்ளாதாகவும் தெரிவித்தார். அதே நேரம் தமிழகத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகை ஆங்கிலத்தில் இருப்பது வேதனையளிப்பதாகவும் அதனைப் படிப்படியாகத் தமிழில் மாற்றம் செய்ய முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துப் பேசினார்.
முன்னதாக நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
உலகத் தமிழ் சங்கத்தின் ஆய்வு வளமையர் ஜான்சிராணி நன்றியுரை ஆற்றினார்.