எழுத்தாளனின் மரணசாசனம் அதிர்ச்சி தரும் 10 கட்டளைகள்

3 0
Spread the love
Read Time:7 Minute, 29 Second

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் பலகுடி கிராமம் வடக்குத் தெருவில் வசித்து வந்த எழுத்தாளர் தெ.சுந்தரமகாலிங்கம் (82) ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் காலத்தை வாசித்தல், துரோகம் வெட்கம் அறியாது ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தினமணி, ஜனசக்தி, தீக்கதிர் உள்ளிட்ட நாளிதழ்களிலும் உயிர் எழுத்து, அம்ருதா, காலச்சுவடு உள்ளிட்ட மாத இழ்களிலும் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். இவர் 2022 ஆகஸ்ட் 31 அன்று இறந்துவிட்டார்.  ஆனால் இறப்பதற்கு முன் தன் இறுதி அடக்கம் எப்படி நடக்க வேண்டும் என்று தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி வைத்திருந்து எழுதியதோடல்லாமல் உற்ற நண்பர்கள் இருவரிடமும் கொடுத்து தன் இறப்பிற்குப் பிறகு தன் மகன்கள், நண்பர்கள் என்னென்ன செய்யவேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பவற்றைப் பட்டியலிட்டு 10 கட்டளைகளாக மரண சாசனம் எழுதி வைத்துள்ளார்.

பெரியாரின் திராவிட இயக்க சுயமரியாதைக் கொள்கையில் பற்றுக்கொண்டிருந்த தெ.சுந்தரமகாலிங்கம் அதைப்போலவே தன் இறுதி எண்ணம் நடைபெற வேண்டும் என்று எழுதியிருந்தார். அவரது விருப்பப்படியே உறவினர்கள் அவரது கண்கள், கண் மருத்துவமனைக்கும் உடலை மதுரை மருத்துவக் கல்லூரி மெய்யியல் கழக ஆய்வுக்குத் தானம் செய்துள்ளனர். இவருடைய மனைவி அமர்ஜோதி கடந்த 2021-ம் ஆண்டு உயிரிழந்தார்

அவர் எழுதிய மரணசாசனம் இங்கே

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டம் வத்திராயிருப்பு கிராமம் 2- வது வார்டு பலகுடி வடக்குத் தெரு 58-வது எண்ணுள்ள வீட்டில் குடியிருந்து வரும் நெ.சுந்தரமகாலிங்கம் (வயது 73) என்னும் பணி நிறைவு பெற்ற ஆசிரியராகிய நாள் ( பெற்றோர் பெயர் திரு. க.அ.கு. தெய்வசிகாமணி – திருமதி குருவுத்தாயம்மாள் ) மனித வாழ்வில் மரணம் நிச்சயம் என்னும் கருத்துடன் என் சுய நினைவுடன் 27-10- 2014 திங்கட்கிழமையன்று மனப்பூர்வமாக எழுதி வைக்கும் மரண சாசனம்.

1) என் உடலைவிட்டு உயிர் பிரிந்த செய்தி அறிந்து சில நொடிகளுக்குள் என் கண்களைத் தானம் செய்வதற்குரிய ஏற்பாடுகளை மக்கள் மருத்துவர் அரிமா கா.பால்சாமி அவர்களும் அரிமா வே. சதாசிவம் அவர்களும் முன்னின்று செய்ய வேண்டும். என் மக்களில் எவரேனும் ஒருவரோ, என் துணைவியாரோ அல்லது அவர்கள் அனைவருமோ சம்மதக் கையெழுத்திடலாம். அவர்களில் எவரேனும் ஒருவர் மறுப்புத் தெரிவித்தால் அம்மறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிவதில்லை

2) என் உடலை மதுரை மருத்துவக் கல்லூரி மெய்யியல் கழக ஆய்வுக்காகத் தானம் வழங்க நான் முன் வந்தபோது என் மூத்த மகன் தெ.சு. திலீபன் என்பவர் திருவில்விபுத்தூர் வட்டாட்சியர் அவர்களிடம் மறுப்புத் தெரிவிக்க, அவ்வம்மையாரும் அறியாமையின் காரணமாக நான் கோரிய வாரிசுச் சான்றிதழைத் தர மறுத்துவிட்டார். ஒரு வேளை என் இறப்புக்கு முன் மதுரை மருத்துவக் கல்லூரி மெய்யியல் கழக ஆய்வுக்கு உயிரற்ற என் உடலைத் தானம் செய்யும் அனுமதியை நான் பெற்றுவிட்டால் நாள் மரணம் அடைந்ததும் என் உடலை மதுரை மருத்துவக் கல்லூரி மெய்யியல் கழக ஆய்வுக்கு ஒப்படைக்கும் பணியை மக்கள் மருத்துவர் கா.பால்சாமி, என் இரண்டாவது மகன் தெ.சு.கோபிநாத், என் மூன்றாவது மகன் தெ.சு.கவுதமன், வழக்கறிஞர் மு. பால்ராஜ், ‘மீட்சி இதழ் ஆசிரியர் திரு.குறிஞ்சிக் கபிலன் ஆகியோர் முன்னின்று நடத்த வேண்டும்.

3) உயிரற்ற என் உடலை மதுரை மருத்துவக் கல்லூரி மெய்யியல் கழக ஆய்வுக்கு ஒப்படைப்பதில் ஏதேனும் சட்டச் சிக்கல் ஏற்படின் என் உடலை வத்திராயிருப்பிலுள்ள சுடுகாட்டில் எரிப்பபதற்குரிய ஏற்பாடுகளை நான் மேலே குறிப்பிட்டுள்ள அன்பர்கள் இணைந்து செய்ய வேண்டும்.

4) என் உடலைவிட்டு உயிர் நீங்கியதும் உடலின் மீது எத்தகைய சாதி, மத அடையாளக் குறிகளையும் இடக்கூடாது, நிறை மரக்கால், தேங்காய் உடைப்பது, சூடம் கொளுத்துவது, விளக்கு வைப்பது போன்ற எந்தவிதமான சடங்குகளையும் செய்யக்கூடாது. சவம் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்க சாம்பிராணி, பத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

5)  வீட்டிலிருந்து சவத்தைக் கொண்டுசெல்லும் முன் என் குடும்ப ஆண்களும் பெண்களும் வீட்டின் முன்புள்ள குழாயில் குளிக்கலாம். அவர்களுக்கு எவ்வித மதச்சடங்கும் செய்யக்கூமாது. நீர்மாலை எடுக்கக்கூடாது.

6) என் பிள்ளைகள், போன்மார்கள் யாருக்கும் மொட்டை போடக்கூடாது.

7) சடலத்தைக் கொண்டுசெல்லும்போது மேள, தாளம், ஆட்டம் பாட்டம்கூடாது. வாய்ப்பிருந்தால் சவ வண்டியில் ஒலிபெருக்கி அமைத்து தந்தை பெரியாரின் உரையை ஒலிபரப்பிக்கொண்டு செல்லலாம்.

8) சடலத்தை எரிப்பதற்கு முன் மதச் சடங்குகள் எவையும் அறவே கூடாது.

9) எரித்த மறுநாள் சுடுகாட்டுக்குச் சென்று எந்தச் சடங்கும் செய்யக்கூடாது.

10)  இம் மரண சாசனத்தின் அசல் பிரதியொன்று மக்கள் மருத்துவர் கா. பால்சாமி அவர்களிடமும் மற்றோர் அசல் பிரதி ‘மீட்சி ‘ இதழாசிரியர் திரு. குறிஞ்சிக் கபிலன் அவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

என் வாழ்நாள் முடியத் துணை நின்ற அனைத்து  இயக்கத் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

அன்புடன்,

தெ.சுந்தரமகாலிங்கம்

27.01.2014

வந்திராயிருப்பு

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!