எழுத்தாளர் கரன் கார்க்கி எழுதிய ”சட்டைக்காரி” எனும் நாவலை நீலம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் நினைவு நூலகம் ஒருங்கிணைப்பு செய்திருந்த நாவல் அறிமுகக் கூட்டம், வடசென்னை சி.பி.எம். அலுவலகத்தில் நடைபெற்றது.
த.மு.எ.க.ச. மாவட்டச் செயலாளர் எழுத்தாளர் மணிநாத் தலைமை தாங்கினார், விமர்சகர் பி.சேகர் வரவேற்றுப் பேசினார். ‘சட்டைக்காரி’ நாவலை அறிமுகம் செய்து, முனைவர் தமிழ்மணவாளன் பேசினார்.
“வடசென்னை மக்கள் வாழ்வியலைக் குறித்து சொல்லும் இந்த நாவல், கலையம்சம் கொண்டது. வடசென்னை மக்களின் வாழ்வியல் சூழல், பழக்கவழக்கங்கள், பண்பாடு குறித்து, திரைப்படங்களில் காட்டப்படும் பிம்பத்தை உடைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த நாவல், வடசென்னை மக்களின் மறுபக்கத்தை, அழகிய வாழ்வியலைச் சொல்லியிருக்கிறது” என்று கவிஞர் தமிழ்மணவாளன் முன்னுரை வழங்கிப் பேசும்போது குறிப்பிட்டார்.
“ சட்டைக்காரி எனும் இந்நாவல் 70 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பெரம்பூரில் வசித்த ஆங்கிலோ இந்தியர்களின் வாழ்க்கையை, வரலாற்றுப் பின்னணியை நேர்த்தியாகச் சித்திரித்துள்ளது” என்றும் பேசிய கவிஞர் தமிழ்மணவாளன், வாழ்வியலையும், காதலையும், பண்பாட்டையும் எழுத்தாளர் கரன் கார்க்கி மிக அற்புதமாக கையாண்டிருக்கிறார் என்றும் பாராட்டினார்.
அதே நேரம் பொதுவாக பெண்ணை வர்ணிக்கும் எழுத்தாளர்கள் மத்தியில் ஆண் ஒருவனை வர்ணித்ததைச் சுட்டிக்காட்டி புளகாங்கிதமடைந்த கவிஞர் தமிழ்மணவாளன் அந்த வர்ணனையை வாசித்தும் காண்பித்தார்.
“லிண்டா அவனை உற்றுப் பார்த்தாள்,
வடிவான நாசித்துளைகள்
தெரியும் படியான
ஆவேசமான,பளபளப்பான மூக்குக்கீழே,
செதுக்கப்பட்ட கருப்பு மீசையுள்ள,
இறுக்கமற்ற களையான முகம்,
அரைக்கை சட்டையை,
நரம்போடிய வலுவான
முழங்கைகளுக்கும் மேலே
மடித்துவிட்டிருந்தான்.
மூர்மார்க்கெட்டில் வாங்கியிருந்த
டெரிக்காட்டன் பேண்ட்
கச்சிதமாக இருந்தது.
அதையும் ஒரே அளவாக
தார்ரோட்டில் அழுக்குப் படாதிருக்க,
கணுக்காலுக்கு மேலே மடித்து,
டயரில் தைத்த,
முன்பக்கம் மடிந்து தேய்ந்த
மோசமற்ற செருப்பு,
சுருண்ட தலைமுடி,
அது அது கச்சிதமாக
முன்பக்கம் சுருண்டிருந்தது,
மீசையை கோடுபோல
செதுக்கியிருந்தான்.
காட்டுத் தேனின் நிறத்தவனின்
இறுகிய அம்பு மாதிரியான உடல்,
காற்றைக் கிழித்துக்கொண்டு
ஓட வசதியாக இருந்தது.
மேலே இரண்டு பட்டன் போடாததால்
மயிரற்ற அவன் உடம்பு
பளீரென்று தெரிந்தது.”
இப்படியான வர்ணனையை எழுதும் இந்த எழுத்தாளர் மிகுந்த ரசனைக்குரியவர்” எனப் பேசினார்.
நிகழ்ச்சியின் இறுதியாக எழுத்தாளர் கரன் கார்க்கி ஏற்புரை வழங்கினார். இந்த நிகழ்சியில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.