தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்து தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்தவர், நாகப்பட்டினம் அடுத்த காடம்பாடியில் 1876ஆம் ஆண்டு பிறந்த மறைமலையடிகள்.
இறைவன் பெயரான வேதாசலம் என்பதையே தாய் சின்னம்மையார். தந்தை சொக்கநாதப் பிள்ளை அவருக்குச் சூட்டி மகிழ்ந்தனர்
அடிகளார் இளமையிலேயே கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவராக விளங்கினார். நாகப்பட்டினம் உயர்நிலைப் பள்ளியில் சிறந்த மாணவராக விளங்கினார். அறுவை சிகிச்சை நிபுணராக இருந்த தந்தையின் மறைவால், கல்வி தடைபட்டது. பன்னிரண்டாம் அகவையில் தந்தையை இழந்த அடிகளார், ஒன்பதாம் வகுப்பு வரைதான் கற்றார். தாயின் வழிகாட்டுதலால் பல நூல்களைக் கற்றார்.
மேலும் தமிழ் நூல்களைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் அடிகளாருக்கு இயற்கையாக எழுந்தது. நாகப்பட்டினத்தில் வெ.நாராயணசாமிப்பிள்ளை என்பார் புத்தகக்கடை வைத்திருந்தார். தமிழ்ப் பெரும்பேராசிரியராக விளங்கிய திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களிடம் இவர் முறையாகத் தமிழ் கற்றார். நாராயணசாமிப் பிள்ளை புத்தக விற்பனையோடு தமிழ் கற்பிக்கும் பணியையும் செய்து வந்தார். இவரிடம் தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்களையும், தருக்க நூல்களையும் முறையாகக் கற்றுச் சிறந்த அறிவு பெற்றார் அடிகளார்.
வார இதழ்களில் ‘முருகவேள்’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதினார். 16 வயதில் இந்து மத அபிமான சங்கத்தைத் தோற்றுவித்தார்.
தமிழ்ப் பற்றால், ‘வேதாச்சலம்’ என்ற தனது பெயரை ‘மறைமலை’ என்று மாற்றிக்கொண்டார். சென்னை பல்லாவரத்தில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் தொடங்கி, அதன் பெயரை பொதுநிலைக் கழகம் என மாற்றினார்..
1898 முதல் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்று மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பித்தார். அடிகளாரின் விளக்கவுரைகள் செறிவானவை. அவற்றின் இடையிடையே நகைச்சுவையும் உலகியல் மேற்கோள்களும் நிறைய இடம்பெறுவதுண்டு.
நூல் எழுதுதல், நூலாராய்தல், எழுதிய நூல்களை அச்சிட்டு வெளியிடுதல் போன்ற பலதுறைகளில் அடிகளார் தமிழுக்குச் செய்துள்ள தொண்டுகள் அளப்பரியன. அடிகளார் அரிய ஆங்கில நூல்களை ஆராய்ந்துள்ளார்.
1903ஆம் ஆண்டு மாணவர்களின் வேண்டுகோளின்படி, பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு ஆகிய இருநூல்களுக்கும் ஆராய்ச்சியுரை எழுதி வெளியிட்டார்.
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும், மாணிக்க வாசகர் வரலாறும் காலமும், முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர், சோமசுந்தர நாயகர் வரலாறு முதலியன அடிகளாரின் கால வரலாற்றை உணர்த்தும் அடிகளாரின் ஆய்வு நூல்களாகும். பொருந்தும் உணவும் பொருந்தா உணவும், வளோண் நாகரிகம், மக்கள் நூறாண்டு வாழ்வது எப்படி? என்பன வாழ்வியல் ஆய்வு நூல்களாக விளங்குகின்றன. வாழ்வியல் ஆராய்ச்சி நூல்களில் சமயத் தொடர்புடைய நூல்கள் சைவ சித்தாந்த ஞானபோதம், சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவமாகா, பழந்தமிழர் கொள்கையே சைவ சமயம், தமிழர் மதம் முதலியனவாகும். வாழ்வியல் ஆய்வு நூல்களிலே மரணத்தின் பின் மனிதர் நிலை, யோகநித்திரை அல்லது அறிதுயில், தொலைவிலுணர்தல் என்னும் மறைபொருளுணர்ச்சி. மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி முதலிய நான்கு நூல்களும் மறைபொருளியலை உணர்த்தும் நூல்கள் ஆகும்.
இலக்கியம், மருத்துவம், சங்க இலக்கிய ஆய்வு, புதினம், பாடல், நாடகம், தத்துவம், வரலாறு என பல பிரிவுகளில் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்..
இவரது பேச்சு பேச்சாளர்களை உருவாக்கியது; எழுத்து படைப்பாளிகளை ஈன்றது. ‘அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்’ என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க. புகழாரம் சூட்டியுள்ளார். 4 ஆயிரம் நூல்களுடன் தன் வீட்டிலேயே ஒரு நூலகம் அமைத்தார்.
தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகக் கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார். தமிழ், ஆங்கிலம், வடமொழியில் புலமை பெற்றவர். சைவ சித்தாந்த நெறிமுறைகளை வெளிநாட்டவரும் புரிந்துகொள்ள ‘மிஸ்டிக் மைனா’, ‘தி ஓரியன்டல் விஸ்டம்’ ஆகிய ஆங்கில இதழ்களை நடத்தினார். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தோன்றக் காரணமாக இருந்தவர்.
1911-இல் தமிழாசிரியர் பணியிலிருந்து விலகிய அடிகளார் சைவ சித்தாந்தப் பணியிலும் நூல்களை எழுதுவதிலும் தம்மை முழுதும் ஈடுபடுத்திக் கொண்டார்.
தனித்தமிழிலேயே பேச, எழுத வேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொண்ட பிறகு, தான் ஏற்கெனவே எழுதி வெளியிட்ட நூல்களில் இருந்த பிறமொழிச் சொற்களுக்கு பதிலாக தமிழ்ச் சொற்களை மாற்றி புதிய பதிப்புகளை வெளியிட்டார். உரையாடலில், மேடைப்பேச்சில், எழுத்தில் தூய தமிழ் நடையைக் கடைப்பிடித்தார்.
கோயில்கள், பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோருக்கு சம உரிமை வழங்க வேண்டும் என குரல் கொடுத்தார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கையுடைய அடிகளார் இறை வழிபாடு, திருமணம் முதலிய சடங்குகளும் தமிழ்மொழியிலேயே நடைபெற வேண்டும் என்று விரும்பினார். தமிழுக்கும் தமிழினத்திற்கும் வந்த தீங்குகளை நீக்கவே அடிகளார் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார்.
அடிகளார் பெரும்பொருள் செலவிட்டு அரிதில் தேடிய நாலாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை, தம் இறுதி விருப்பஆவணத்தின்படி தமிழ் மக்களின் பொது உடைமையாக்கி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரிடம் ஒப்புவித்துச் சென்றார். அக்கழகத்தார் தாம் ஈட்டிய பொருளைக் கொண்டு பலநூற்றுக்கணக்கான அரிய நூல்களையும் சேர்த்து, அடிகளார் பெயரால் மறைமலை அடிகள் நூல் நிலையம் என ஒரு நூல் நிலையத்தைச் சென்னையில் சிறந்த முறையில் தமிழ் மக்கள் பயன்துய்க்குமாறு நடத்தி வருகின்றனர்.
அடிகளார் 15-09-1950ஆம் ஆண்டு 74 வயதில் மறைந்தார். அவரின் தனித்தமிழ் இன்னும் வாழ்கிறது.