சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாகப் பதக்கம் வெல்லும் வீர், வீராங்களைகளுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா மற்றும் அர்ஜுனா விருதும் சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும் வாழ்நாள் சாதனையாளருக்கு தயான்சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த வீரர்களுக்கு அரசு விருதுகள் வழங்கிக் கௌரவித்து வருகிறது. இந்த நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளுக்குத் தேர்வானவர்களின் பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.
சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்கள் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா உள்பட மூன்று பேருக்கு அர்ஜுனா விருதும், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா விருதுக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தமிழகத்தில் இருந்து டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் என்பவர் ‘கேல் ரத்னா’ விருதைப் பெற்றுள்ளார். இவர் நடப்பாண்டு இந்தியாவுக்கு 3 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று தந்துள்ளார். அதுமட்டுமல்ல, கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இரண்டு வெண்கலம் பெற்றார்.
இதேபோல் 25 பேர் அர்ஜுனா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு வழங்கப்பட்டது. இவர் சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலம் வென்றார். மேலும் அண்மையில் நடந்த ஆசிய செஸ் தொடரில் தங்கப் பதக்கம் பெற்றார்.
தமிழகத்தின் கடலூரை பூர்வீகமாக கொண்ட துப்பாக்கிச் சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. இளவேனில் 2018 ஆம் ஆண்டில் சிட்டினியில் நடைபெற்ற இளையோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் போட்டியிட்டு தங்கப் பதக்கம் பெற்றார். 2019ஆம் ஆண்டு உலகப் பல்கலைக்கழகப் போட்டிகளில் விளையாடி வெள்ளிப் பதக்கம் பெற்றார். பின்னர் 2019ஆம் ஆண்டு இளையோருக்கான உலகக் கோப்பை போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார். 2019ஆம் ஆண்டு இரியோ டி செனீரோவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் 10 மீட்டர் காற்றுத் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கம் பெற்றார்.
இளவேனில் மியூனிக்கில் நடந்த 2019 உலகக்கோப்பைப் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கிச்சுடும் போட்டியில் பங்கேற்று நான்காவதாக வந்தார்
மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகாவுக்கும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி பள்ளி மாணவியான ஜெர்லின் அனிகாவுக்கு வயது 17தான். இவர் பிரேசிலில் நடைபெற்ற பாரா-ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களைக் குவித்தார் .
ஜனாதிபதி திரவுபதி முர்மு அனைவருக்கும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
விளையாட்டு விருதுக்கான விதிமுறைகள்
மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவாக ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்த இந்த விருது நரேந்திர மோடி அரசால் 2021 ஆம் ஆண்டு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தி மொழியில் கேல் ரத்னா என்பது விளையாட்டில் இரத்தினக்கல் போன்றவர் எனப் பொருள். இவ்விருது ஓர் பதக்கம், அங்கீகாரச் சுருள் மற்றும் பணமுடிப்பைக் கொண்டது. 2004-05ஆம் ஆண்டில் கடைசியாக வழங்கப்பட்டபோது, இது இந்திய ரூபாய் 500,000/- மதிப்பு கொண்டதாக இருந்தது. பின்னர் ₹750,000க்கு கூட்டப்பட்டது.
1991-92 ஆண்டில் நிறுவப்பட்ட இவ்விருது தேசிய அளவில் விளையாட்டுத் துறையில் உயர்ந்த அங்கீகாரம் பெற்ற விருது இல்லாமையை நீக்கியது. இதனை அடுத்துள்ள அர்ஜுனா விருது துறை சார்ந்த விருதாக இருக்கிறது. மாற்றாக இவ்விருது அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் பொதுவான சீரிய விருதாக மிகச் சிறந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
விருது பெறத் தகுதிகள்
ஒலிம்பிக் விளையாட்டுகள், ஆசிய விளையாட்டுகள் அல்லது உலக சாம்பியன்ஷிப் அல்லது உலக கோப்பை போட்டிகளில் இடம் பெற்றுள்ள விளையாட்டொன்றில் ஒரு நபரோ, குழுவோ பங்கெடுத்திருக்க வேண்டும். விளையாட்டையே பணி வாழ்வாகக் கொண்ட பில்லியர்ட்ஸ், சுனூக்கர் மற்றும் சதுரங்க வீரர்களும் தேர்வுக்கு உரியவர்கள். இவ்விருதை ஒருவர் தம் வாழ்நாளில் ஒருமுறையே பெற இயலும். தேர்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அரசு, இந்திய விளையாட்டு ஆணையம் அல்லது தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகள் ஒன்றால் பரிந்துரைக்கப்பட்டிருக்க வேண்டும். தேர்வுக்குழு தனது பரிந்துரையை அரசுக்கு அனுப்பியபின், அரசின் பல மட்டங்களில் ஆய்வு செய்யப்பட்ட பின், குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்படுகிறது.