சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் குழந்தைகளைக் கொண்டுள்ள நாடுகளில் முக்கியமானதாக இருப்பது இந்தியா. ஆகையால் இந்த நாளில் குழந்தைகளின் உரிமை, அவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
1925-ம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பான சர்வதேச மாநாட்டில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதி குறித்து அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1954-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை, சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்றுக்கொண்டு இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற சொல்லில் உள்ள உண்மையைத் தெளிவுபடுத்துவதற்காகத்தான் குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி, கட்டுரை, ஓவியம் என பல போட்டிகள் நடத்தப்படுகிறது.
நேரு குழந்தைகளை நாட்டின் சொத்தாகக் கருதினார். குழந்தைகளுக்குத் தரமான கல்வி வேண்டும் என நினைத்தவர். இதன் காரணமாகவே அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIM) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (NIT) உருவாக்கப்பட்டன.
இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலம். நாம் அவர்களை வளர்க்கும் விதம் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று நேரு கூறினார். 1956-ம் ஆண்டு முதல் நவம்பர் 20-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் படி ‘உலகளாவிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
1964-ம் ஆண்டு பண்டிட் நேருவின் மறைவுக்குப் பிறகு, அவரது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் கொண்டாட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டது. அப்போதிருந்து, நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக விளங்குவது குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான். குழந்தைப் பருவத்தில் நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும். வெறும் புத்தகங்கள் மட்டுமே சிறந்த கல்வி என்ற மனநிலை மாறி தங்கள் குழந்தைகளை, மற்ற குழந்தைகளுடன் பழகவிட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு இடையே சகோதரத்துவம், உதவும் மனப்பான்மை வளரும். அதுவும் ஓர் கல்விதான் என உணர வேண்டும்.
இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வந்தாலும் இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களும் அதிகரித்து வருவதாகக் கூறுகிறது ஆய்வுகள். குழந்தைத் தொழிலாளர்கள் இன்றி, அனைத்துக் குழந்தைகளுக்குமே அடிப்படை கல்வியும், அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கம்.
ஜவஹர்லால் நேரு பிறந்த தினம்
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில், மோதிலால் நேரு – ஸ்வரூபராணி தம்பதியின் மகனாக 1889ல் நவம்பர் 14ல் ஜவஹர்லால் நேரு பிறந்தார்.
செல்வக் குடும்பத்தில் பிறந்த இவர், தன் வீட்டிலேயே கல்வி கற்றார். உயர் கல்விக்காக இங்கிலாந்து சென்று, ஹரோ, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தார். நாடு திரும்பியதும் காங்கிரசில் இணைந்தார்.
காந்தியின் சந்திப்புக்குப் பின், அனைத்து விடுதலைப் போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்று, காந்தியின் நம்பிக்கையைப் பெற்றார்.
காங்கிரசின் தலைவராகிப் பல நாடுகளுக்குச் சென்றார். தந்தை அமைத்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மறுசீரமைத்தார். சிறையில், தன் சுயசரிதை உள்ளிட்ட உலக அனுபவங்களை நூல்களாக எழுதினார்.
சுதந்திரத்துக்குப் பின் நம் நாட்டின் முதல் பிரதமரானார். உள்துறை அமைச்சர் படேலுடன் இணைந்து சமஸ்தானங்களை ஒருங்கிணைத்தார். ஐந்தாண்டு திட்டங்களின் வாயிலாகக் கல்வி, அறிவியல் வளர்ச்சி, உரமிடும் விவசாயம், கனரக தொழிற்சாலைகள், அணைக்கட்டுகளைக் கட்டமைத்தார்.
1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்ததும், டெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிச் சிறப்பு நேருவுக்குக் கொடுக்கப்பட்டது. நாடாளுமன்ற ஜனநாயகம், உலகியல்வாதம், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் பற்றிய அக்கறையில் வலிமையான திட்டங்களை உருவாக்க அவர் உறுதுணையாக இருந்தார். 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15 முதல், 1964-ம் ஆண்டு மே 27-ந் தேதி மரணம் அடையும் வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார் ஜவஹர்லால் நேரு.