கந்தக பூமியான சிவகாசியைக் குட்டி ஜப்பான் என்று அழைப்பார்கள். மைரி, காலண்டர் தீப்பெட்டி தயாரிப்பு பட்டாசுகள், அச்சுத் தொழில் என தொழில்கள் நிறைந்த நகரம். சிவகாசி பட்டாசுக்கு உலகப் புகழ்பெற்றதைப் போலவே காலண்டர், டைரிகள் தயாப்பிலும் உலகப் புகழ்பெற்றது.
விருது நகர் மாவட்டம், சிவகாசியில் சிறிதும் பெரிதுமாக 300 காலண்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த காலண்டரில் 90 சதவிகிதம் சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும்போது, அனைவரின் வீடுகள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தவறாமல் இடம் பிடிப்பதில் முதன்மையாக இருப்பது தினசரி காலண்டர்கள் மற்றும் மாத காலண்டர்கள்தான்.
இந்த ஆண்டு ரூ. 40 முதல் ரூ. 500 வரை விலையுள்ள டைரிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. காலண்டர்களும் பலவித விலைகளில் கிடைக்கின்றன. அதேபோல, இதுவரை இல்லாத அளவுக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் இந்த ஆண்டு மிக அதிகமாகியுள்ளது. இங்கிலாந்து, கனடா, மொரீஷியஸ், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கும் சிவகாசி காலண்டர்கள், டைரிகள் செல்கின்றன.
கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகளாக்க காலண்டர் வியாபாரம் சுமாராக இருந்த நிலையில், 2023ம் ஆண்டிற்கான காலண்டர் ஆர்டர் சிறப்பாக அமைந்துள்ளது என்கிறார்கள் தொழில் நடத்துபவர்கள்.
அதோடு அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் பிரபல அரசியல் கட்சிகள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் தங்களது கட்சியினருக்கு வழங்குவதற்காகவும் காலண்டர்களை ஆர்டர் செய்துள்ளனர். பல்வேறு தரப்பினரும் தங்களது விளம்பர யுக்திக்காக காலண்டர்களைத் தேர்வு செய்ததால், இந்த ஆண்டு காலண்டர் சீசன் அமோகமாக இருந்ததாக்க கூறும் காலண்டர் தயாரிப்பாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கியிருந்த காலண்டர் தொழில் இந்த ஆண்டு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சிவகாசி பகுதியில் தினசரி மற்றும் மாதக் காலண்டர் தயாரிக்கும் பணியில் வழக்கமாக 50-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் ஈடுபடும். ஒவ்வொரு ஆண்டும்
3-வது மாதத்தில் சிவகாசியில் உள்ள அச்சகங்களில் அடுத்த ஆண்டுக்குரிய காலண்டர் தயாரிப்பு தொடங்கும். ஆடி 18 அன்று வெளி மாநில மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் மொத்த வியாபாரிகளுக்கு அடுத்த ஆண்டுக்குரிய புதிய டிசைன் காலண்டர்கள் பார்வைக்கு வழங்கப்படும். இதைப் பெற்றுக்கொள்ளும் மொத்த வியாபாரிகள் புதிய ஆர்டர்களை எடுத்து சிவகாசியில் உள்ள அச்சகங்களுக்கு வழங்குவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் தொடங்கிவிட்டதால் அச்சகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தொழில் முற்றிலுமாக முடங்கியது. அதன் பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதன் பின்னர்தான் சில அச்சகங்கள் முதல்கட்ட பணிகளைத் தொடங்கின.
தற்போது காலண்டர் தயாரிக்கும் பணி 95 சதவிகிதம் முடிந்துள்ளது. இங்கு புதிய டிசைன்களில் தமிழ், ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட
பல்வேறு மொழிகளில் வண்ண காலண்டர்கள் தயாராகி வருகின்றன.
சில்வர், கோல்டு பாயில்ஸ், எம்பாஸ் உள்ளிட்ட பல்வேறு டிசைன்களில், கலைநயத்துடன் கூடியதாக காலண்டர்கள் உள்ளன.
2023க்கான காலண்டர் ஆர்டர் கொடுக்கும்போது 2022ன் மத்தியில் காலண்டரின் விலை 35 சதவிகிதம் மட்டுமே உயர்ந்த நிலையில் இறுதிக் கட்டத்தில் 40 சதவிகிதம் விலை உயர்ந்தது. மாதக் காலண்டர் 50 முதல் 55 சதவிகிதம் விலை உயர்ந்தது. காரணம் மூலப் பொருட்கள் விலை ஏற்றம்.
விலை உயர்வால் இந்த ஆண்டு 15 சதவிகிதம் உற்பத்தி குறைந்துள்ளது. ஆனாலும் விலை உயர்வால் ரூ.400 கோடி வியாபாரம் நடந்துள்ளது. தற்போது 2023க்கான காலண்டர்கள் 2023 ஜனவரி மாதத்தின் பாதி வரை ஆர்டர் பெறப்பட்டு வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்படும்.
தற்போது 95 சதவிகிதம் விற்பனை முடிந்த நிலையில் ஜனவரி இறுதியில் ரூ.450-500 கோடிக்கு வியாபாரம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலையேற்றம் பற்றி காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் ஜெயசங்கர் கூறும்போது, “காலண்டர் உற்பத்திக்கு முக்கிய மூலப் பொருள்களான ஆர்ட் பேப்பர் 45 சதவிகிதமும், மேப் லித்தோ 55 சதவிகிதமும், நாள்காட்டி வில்லை, போஸ்டர் 40 சதவிகிதமும் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வால் கடந்த ஆண்டைவிட 15 சதவிகிதம் உற்பத்தி குறைந்தும் ஏற்கனவே இருந்த வியாபாரம் நடந்துள்ளது” என்றார்.
தொழில்நுட்பம்
இன்றைய டிஜிட்டல் உலகில் பணம் மாற்றுதல், பரிவர்த்தனை, கோப்புகள் அனுப்புதல் என எல்லாவற்றிலும் QR எனப்படும் பார் கோடு செய்யும் முறை ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், நாம் பயன்படுத்தும் தினசரி காலண்டரிலும் QR பார் கோடை கொண்டுவந்து அசத்தி வருகின்றனர் சிவகாசி காலண்டர் தயாரிப்பாளர்கள்.
இந்த பார் கோடு காலண்டரில் என்ன சிறப்பு என்றால் நாள்காட்டியில் பார் கோடு கொடுக்கப்பட்டிருக்கும். அதை நம்முடைய மொபைலில் ஸ்கேன் செய்தால் அதில் அன்றைய நாளை பற்றிய வீடியோ ப்ளே ஆகும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. QR பார் கோடு ஸ்கேன் செய்யும் காலண்டர்களைப் பெற விரும்பினால் 9750932482 என்ற எண்ணில் கற்பகா காலண்டர்ஸை தொடர்பு கொள்ளலாம்.