இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் மறைந்தது திரையுலகில் பெரிய வருத்தத்தை தந்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன். நடிகை டி.பி.முத்துலட்சுமி இவரது மைத்துனி. கஜேந்திரனின் சினிமா வளர்ச்சிக்கு உதவினார். இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரிடமும் பின்பு நீண்ட காலம் குடும்ப நாயகன் இயக்குநர் விசுவிடமும் உதவியாளராகப் பணியாற்றினார் டி.பி.கஜேந்திரன். இவரும் விசுவைப் போலவே குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களையே இயக்கினார். பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள இவர் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
சிதம்பர ரகசியம் (1985) திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். 1988 இல், வீடு மனைவி மக்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் குறைந்த செலவில் குடும்ப நகைச்சுவை நாடகத் திரைப்படங்களை இயக்கினார். இது போன்ற குடும்பத் திரைப்படங்களில் பிரபு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தார்.
இதில் பட்ஜெட் பத்மநாபன் (2000), மிடில் கிளாஸ் மாதவன் (2001) பந்தா பரமசிவம் (2003) ஆகியவை படங்கள் குறைந்த பட்ஜெட்டில் வசூலைக் குவித்தது. இவர் இயக்கிய நான்காவது படமான ‘ஆசை வச்சேன் உன் மேலே’ திரைப்படத்திற்குப் பிறகு திரைப்படங்களை இயக்கவில்லை. 2001ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படங்களின் போக்கு காரணமாக இவர் ‘கற்பூர நாயகி’ என்ற பக்திப் படத்தை உருவாக்க முயன்றார். ரோஜா மற்றும் பானுப்ரியா நடிக்கவிருந்த இத்திரைப்படம் கைவிடப்பட்டது.
2015ல் இவர் திரைப்படத் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் (CTA) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், இயக்குநர் டி.பி.கஜேந்திரனும் கல்லூரி நண்பர்களாவர். இவர்கள் இருவரும் விவேகானந்தா கல்லூரியில் ஒன்றாகப் படித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த டி.பி.கஜேந்திரனை அடிக்கடி நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது உடல்நலம் குறித்தும் விசாரித்து வந்தார். இந்த நிலையில் அவரது இழப்பு முதலமைச்சரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,
“எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர், திரு. டி.பி.கஜேந்திரன் அவர்கள் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்ததையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியதுடன், பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி, கலையுலகிற்குத் தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தேன். தற்போது எதிர்பாராதவிதமாக அவர் உடல்நலக் குறைவால் காலமாகி இருப்பது வேதனையளிக்கிறது. திரு. டி.பி கஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயக்குனர் டி.பி.கஜேந்திரன் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.