நானும் பாட்டியும் எங்கள் ஊர் தேவகிரி தியேட்டரில் ஒன்றாகப் பார்த்த படம் தேவர் மகன். இதற்குப் பிறகு ஏனோ பாட்டி தியேட்டரில் படம் பார்க்க வரவே மாட்டேன் என்று விட்டாள். ஆனால் அதற்குப் பிறகு எவ்வளவு தரம் தேவர் மகனை பார்த்திருப்பேன் என்றே தெரியாது. நடிப்பு அரசனும் நடிப்பு இளவரசனும் பின்னிப்பெடலெடுத்த படம். சிவாஜி மிக இயல்பாக நடித்த படங்கள் என்னைப் பொறுத்தவரை இரண்டே இரண்டுதான். ஒன்று ‘முதல் மரியாதை’, இரண்டு ‘தேவர் மகன்’.
எந்த வித்தியாசமும் இல்லாமல் படம் முழுக்க எல்லோரும் ஒரு வாழ்க் கையை வாழ்ந்து இருப்பார்கள். பெரிய தேவராக வரும் சிவாஜி என்ன நடிப்பு அது. ஹோட்டல் தொழில் ஆரம்பிக்கிறேன் என்று சொல்லும் நாகரிக மகனிடம் கோபித்து அவன் கால் வழுக்கும்போது ”பார்த்துப்பா’’ என்று காண்பிக்கும் பாசம்… அவர் ஊருக்குப் போகவில்லை என்று அறிந்ததும் டிக்கெட்டை கான்சல் செய்யச் சொல்லும் அவசரம்… பஞ்சாயத்து சீனில் காண்பிக்கும் கோபத்துடன் (அந்த மாவாட்டற மாதிரி கை காண்பிப்பாரே) இறக்கும்போது பாட்டைக் கேட்டுக்கொண்டே உடல் துள்ளிக் குதிக்குமே… தி கிரேட் செவாலியே…
நாசர் மூக்கனாக, ரேவதி பஞ்சவர்ணமாக, கௌதமி பானுமதியாகவே வாழ்ந்திருப்பார்கள். ரேவதியை மெச்ச… முதலிரவு சீனில் பூ தொடுவதை கமல் தொடுவதாக நினைத்து உடல் சிலிர்ப்பதைச் சொன்னால் கௌதமி கமல் ரேவதி திருமணம் நடந்ததை அறிந்து “வோய் சக்தி வோய்..?” என்று கதறுவாரே.. ரயிலில் கடைசியாக ‘முத்தமிட்டுக்கோ மேன்” என்பாரே.. அருமையான நடிப்பு இருவருக்கும்.. அண்ணாவாக வரும் தலைவாசல் விஜய்… யாருமே சோடை போயிருக்க மாட்டார்கள்..
கமல் படம் நெடுக முத்திரை பதித்தாலும் தன் மடியில் படுத்துக் கதறிக் கொண்டிருக்கும் கௌதமியிடம் ஒன்றும் பேசாமல் முகமெல்லாம் வேதனையுடன் தலைகுனிந்து சொட்டுச் சொட்டாகக் கண்ணீர் கௌதமி முதுகில் விழ ச்சே.. என்ன சீன்ங்க அது..
கமல் ரசிகர்கள் எப்படி அவரைக் கொண்டாடுவார்களோ அதை அப்படியே நகலெடுத்தாற்போல் அற்புதமாக நடித்திருந்த வடிவேலு.. “இப்படின்னா இப்படியா.. இல்ல தம்பி.. இப்படி..” என்று விரல் காட்டும் மறக்க முடியாத சின்னக் கதாபாத்திரம் என்றாலும் முத்திரை பதித்த சங்கிலி முருகன்.. சிரித்துக்கொண்டே காலை வாரும் மதன்பாபு, நான் அந்தக் கால மகா கலைஞன் என்ற காகா ராதாகிருஷ்ணன்.. இப்படி படம் நெடுக..
அந்த இறந்து போகும் குழந்தையின் தாய்.. இன்றளவும் என்னால் அந்தக் கண்களை மறக்க முடியவில்லை.. அண்ணியாக வரும் ரேணுகா.. அழகு குட்டீஸ் ஸ்ருதி .. ஒளிப்பதிவு அவ்வளவு அருமையாக இருக்கும்.. அதுவும் ‘போற்றிப் பாடடி பொண்ணே..’ சான்ஸே இல்லை.. (ஶ்ரீராம்).. வன்முறை வேண்டாம் என்றவன் வன்முறையைக் கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவது.. அந்தத் தேர் சீன்ங்க.. மறக்க முடியாத காந்திமதி.. அந்த சீன் ஆரம்பிக்கும் போதே இழைந்து இணைந்து வரும் இளையராஜா.. பேக்ரவுண்ட் மியூசிக்.. காகா ராதாகிருஷ்ணன்.. தலைவாசல் விஜய், ரேணுகா.. அந்தக் குழந்தைகள் என்று ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து ரசித்துப் பார்த்த படம்.
‘