அன்புள்ள நண்பர் வடிவேலுவுக்கு,
பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் உங்களைத் திரையில் பார்க்கும் ஆர்வமுள்ள உங்கள் ரசிகர்களில் நானும் ஒருவன்.
தமிழ் சினிமா பல நகைச்சுவை கலைஞர்களைப் பெற்றிருக்கிறது. என்.எஸ்.கிருஷ்ணன், சந்திரபாபு, தங்கவேலு, நாகேஷ், எம்.ஆர்.ராதா என இந்தப் பட்டியல் நீளமானது.
90களில் அறிமுகமான நீங்கள் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர். காரணம் அவர்கள் காமெடி நடிகர்களாக இருந்தார்கள். நீங்கள் மட்டுமே இந்த மண்ணின் பிரதியாக இருந்தீர்கள். உங்களைப் போன்ற ஒருவர், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு தெருவிலும் இருந்தனர். அவர்களை நீங்கள் பிரதி எடுத்தீர்கள்.
ஒவ்வொரு தமிழனும் உங்களைத் தங்கள் ஊர்க்காரனாக, தெருக்காரனாக, பக்கத்து வீட்டுக்காரனாக, வீட்டில் ஒருவனாகப் பார்த்தார்கள். இந்த யதார்த்தம்தான் உங்களின் பெருவெற்றிக்குக் காரணமாக இருந்தது.
உங்களைத் தாழ்த்திக்கொண்டு, அடி, உதை வாங்கி அதையும் பெருமையாகப் பேசும் உங்களின் புதிய டிரண்ட் தமிழ் சினிமாவுக்குப் புதுசு. கடைசி வரை உங்களின் இந்த ஃபார்முலா, வெற்றி ஃபார்முலாவாகவே இருந்தது.
தமிழ் சினிமா பெற்ற காமெடி நடிகர்களில் பெரும்பாலானவர்கள் திரையில் எப்படியோ அப்படியே நிஜத்திலும் வாழ்ந்தார்கள்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், சந்திரபாபுவும் கையில் இருப்பதை அள்ளிக் கொடுத்த வள்ளலாக இருந்தார்கள், நாகேஷ், தங்கவேலு போன்றவர்கள் நிஜ வாழ்க்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் சிக்கல்களைச் சந்தித்தபோதும் தங்கள் நகைச்சுவை தன்மையை விடாதவர்களாக இருந்தார்கள். நடிகவேள் எம்.ஆர்.ராதா திரைப்படத்தைப் போலவே நிஜ வாழ்க்கையிலும் துணிச்சலான கருத்துக்களைச் சொன்னவர். உங்களின் சமகாலத்து நடிகர் விவேக் வாழ்நாளில் ஒரு கோடி மரங்களை நட்டு, இந்த நாட்டை பசுமையாக்க கனவு கண்டார். அதற்காகத் தன் சொந்தப் பணத்தைச் செலவு செய்து வந்தார்.
இவர்கள் அனைவரையும்விட நீங்கள் அதிகம் சம்பாதித்தவர், அதிக ரசிகர்களைக் கொண்டவர், அதிக காலம் சினிமாவில் மார்க்கெட் குறையாமல் நீடித்தவர். ஆனால் உங்கள் வாழ்க்கை இவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. உங்களின் திரைமுகம் வேறு, நிஜமுகம் வேறு.
கோடிக்கணக்கில் சம்பாதித்த நீங்கள் ஒரு ரூபாய் அடுத்தவர்களுக்குச் செலவு செய்திருக்கிறீர்களா? உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த எத்தனையோ சிறிய நடிகர்கள் வறுமையில் வாடியபோது உதவி இருக்கிறீர்களா?
கடைசியாக உங்களோடு இருந்த போண்டா மணி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்தபோது ஊரே அவருக்கு உதவி செய்ததே… நீங்கள் என்ன செய்தீர்கள்? ஒரு போன் பண்ணி நலம் விசாரித்தீர்களா? உங்களுக்கு காமெடி வசனம் எழுதிய பலர் இன்றைக்கு வறுமையில் வாடுகிறார்களே அவர்களைப் பற்றி நீங்கள் அறிவீர்களா? அவர்களின் பெயராவது உங்களுக்கு நினைவிருக்குமா?
உங்களின் தலையீட்டால், அதிகப்பிரசங்கித்தனத்தால், தான்தான் எல்லாம் என்கிற திமிரால் எத்தனைப் படங்கள் நின்று போயிருக்கிறது, எத்தனை தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்திருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.
உங்களின் வெற்றிக்கு மூலகாரணமே உங்களின் அப்பாவித்தனம்தான். தமிழ்நாட்டின் அத்தனை மக்களும் உங்களுக்கு ரசிகராக இருக்கும்போது, நீங்கள் ஒரு கட்சிக்கு கால்ஷீட் கொடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்று நீங்கள் யார் என்பதை முதன்முறையாக இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டினீர்கள். அங்கு தொடங்கியது உங்கள் வீழ்ச்சி.
எப்போது நீங்கள் நிஜ வாழ்க்கையில் ‘காரியவாதி’ என்கிற பட்டத்தை சுமந்தீர்களோ அப்போதே உங்களிடமிருந்த காமெடி உணர்வு விலகிவிட்டது. இனி நீங்கள் எத்தனை படங்களில் நடித்தாலும், அது நீங்கள் செய்த பழைய காமெடியின் மறுபதிப்பாகத்தான் இருக்கும்.
இனி உங்கள் நகைச்சுவையில் உயிர் இருக்காது. உயிர் இல்லாத நகைச்சுவை மக்களிடம் சிரிப்பை வரவழைக்காது.
ஏற்னெவே நீங்கள் நடித்த காமெடி காட்சிகள் இன்னும் 100 வருடம்கூட வாழும், ஆனால் இனி நீங்கள் செய்யப்போகும் காமெடிகள் என்னாகும்? காலம் பதில் சொல்லும்.
நாய் சேகர் வெற்றிபெற ஒரு ரசிகனாக வாழ்த்துகிறேன்.
Meeran Mohamed முகநூல் பக்கத்திலிருந்து