தொழிலாளர் முறை ஒழிப்புக்காகப் போராடிவருபவர் கைலாஷ் சத்யார்த்தி (Kailash Sathyarthi)யின் அமைப்பு பச்பன் பச்சாவ் அந்தோலன் (இளமையைக் காப்பாற்று இயக்கம்) 80,000ற்கு மேற்பட்ட சிறுவர்களை பல்வேறு வகை சேவைப் பணிகளில் இருந்து தடுத்து அவர்களது மீள்வாழ்வுக்கும் கல்விக்கு வழிவகுத்துள்ளது.
கைலாசு சத்யார்த்தி 1954-ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச மாநிலத்தில் விதிஷா நகரத்தில் பிறந்தார். இயற்பெயர் கைலாஷ் சர்மா. தந்தை காவலராகப் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். உள்ளூரில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்றார். மின் பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார்.
பள்ளிக்குச் சென்றபோது, காலணி தைக்கும் தொழிலாளியின் மகன் ஏக்கத்துடன் இவரைப் பார்த்துள்ளான். ஏன் அவனை பள்ளிக்கு அனுப்பவில்லை என்று இவர் கேட்டதற்கு, ‘நாங்கள் உழைக்க மட்டுமே பிறந்தவர்கள்’ என்று அந்த தொழிலாளி கூறினார். அது, இவரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
1980-ல் தனது பணியை விட்டு விலகி, நண்பர்களின் உதவியோடு ‘பச்பன் பச்சாவோ ஆந்தோலன்’ என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இளம் வயதில் ஒருமுறை ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு சிலரை அழைத்திருந்தார். சமைத்தது தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதால், அவர்கள் அனைவரும் சாப்பிடாமலேயே சென்றுவிட்டனர். இதில் மனம் நொந்தவர், தன்னை மேல் சாதியாக அடையாளம் காட்டும் ‘சர்மா’ என்ற குடும்பப் பெயரை நீக்கி, சத்தியார்த்தி என்று வைத்துக்கொண்டார்.
சமூகத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்காக உலக அளவில் போராடிவருகிறார். இதனால் பலமுறை தாக்கப்பட்டுள்ளார். இவரது அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.
குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலகளாவிய அணி வகுப்பில் (Global March Against Child Labour) பங்கேற்றார். குழந்தை தொழிலாளர், கல்வி அமைப்பான பன்னாட்டு மையத்தில் (ஐ.சி.சி.எல்.இ.) இணைந்து பணியாற்றினார்.
குழந்தை தொழிலாளர் பிரச்சினையை மனித உரிமைப் பிரச்சினையாக அடையாளம் காட்டினார். இதுதான் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமூக கேடுகளுக்குக் காரணம் என்றார். ‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்தோடு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புப் போராட்டத்தை இணைப்பதில் பெரும் பங்காற்றினார்.
தொழிலாளர்களாகப் பணியாற்றிவந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களை பச்பன் பச்சாவோ ஆந்தோலன் அமைப்பு விடுவித்து அவர்களது மறுவாழ்வு, கல்விக்கு வழிவகுத்துள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து உட்பட பல நாடுகளில் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
சமூக சீர்திருத்தம், சிறுவர் தொழிலாளர் முறை ஒழிப்பு உட்பட பல்வேறு சமூக சேவைகளை ஆற்றிவரும் கைலாஷ் சத்யார்த்தி இன்று 68 வயதை ஆகிறது.
குழந்தைகள் உரிமைக்காகப் போராடியவர் கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தான் பெண் மலாலாவுக்கும் 2014ம் ஆண்டின் ‘அமைதிக்கான நோபல் பரிசு’ பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஒரு சமயம் கைலாஷ் சத்யார்த்தியின் தெற்கு டெல்லியின் அலக்நந்தா பகுதியில் வசித்து வருகிறார். அந்த வீட்டின் கதவை உடைத்து நள்ளிரவில் புகுந்த திருடர்கள் பல்வேறு பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து சத்தியார்த்தியின் மகனும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான புவன் ரிபு காவல்துறையில் புகார் அளித்தார்.
இதனிடையே கைலாஷ் சத்தியார்த்தியின் நோபல் பரிசுப் பதக்கம் திருடு போய்விட்டதாக செய்தி பரவியது. இது குறித்த தகவலில் சத்தியார்த்தி, கைலாஷ் சத்யார்த்தி, தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளதால், நோபல் பரிசுப் பதக்கம் குடியரசுத்தலைவர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அது திருடு போகவில்லை என்றும் தெரியவந்தது.