எல்லைப் போராட்டத் தியாகிகளை நினைவுகூருவோம்

1 0
Spread the love
Read Time:21 Minute, 16 Second

இந்தியா விடுதலை அடைந்த பின் நாடு முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் இழந்த தமிழர் வாழும் பகுதிகளை, தமிழகத்தோடு மீண்டும் இணைக்கப் போராடிய எல்லைக் காவலர்களின் இணையற்ற தியாகத்தைப் போற்றி நன்றி செலுத்தும் நாளை (நவம்பர் 1) எல்லைப் போராட்டத் தியாகிகள் தினமாக தமிழக அரசு கடைப்பிடிக்கிறது.  இந்தப் போராட்டம் நடந்து 66 ஆண்டுகள் ஆகிறது.

ஆனாலும் இந்த எல்லைப் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. கேரள அரசு தற்போது ரிஜிட்டல் ரீசர்வே எடுக்கத் தொடங்கியுள்ளது.

சென்னை இராஜதானி என்று அழைக்கப்பட்ட ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் இணைந்த மாநிலமாக இருந்ததை 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொழிவாரியாக சென்னை மாகாணம் என்று பிரிந்த பின்பு அறிஞர் அண்ணா ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது. தமிழர்க்குச் சொந்தமான பல பகுதிகள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன.

திருவாங்கூர்-கொச்சி மாகாணத்தை மேற்கிலும், மைசூர் மாகாணத்தை வடமேற்கிலும், தெலுங்கானாவை வடக்கிலும் கொண்டிருந்தது தமிழ்நாடு. இது தவிர தமிழகத்துக்கும் இலங்கை நாட்டுக்கும் இடையான கச்சத்தீவு போன்ற தீவுகளையும் கிழக்கில் கொண்டிருந்தது.

தட்சணப்பிரதேசம் என்று தக்கண பீடபூமி மாநிலங்கள் ஒன்றிணைக்க பண்டித நேரு நடவடிக்கைகள் எடுத்தபொழுது முதல் கண்டனக் குரல் அன்றைய முதல் காமராஜரிடம் இருந்து எழுந்தது. மொழிவாரியாக மாநிலங்கள் அமைய வேண்டும் என்று காமராஜர் விரும்பினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் குரல் காமராஜரின் எதிர்ப்புக்கு வலு சேர்த்தது.

பழ.நெடுமாறன்

கடந்த காலங்களில் தமிழர் இழந்த நிலங்கள் ஆந்திரத்திலும், கேரளத்திலும், கர்நாடகாவிலும் உள்ளன. எல்லைப் போராட்டத்தில் நடந்த விவரங்களை பழ.நெடுமாறன் விளக்குகிறார்.
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் என்பதும், பெயர் சூட்டுகின்ற வரலாறு என்பதும் சட்டமன்ற பதிவேடுகளோடு அடங்கிவிடவில்லை. அதற்கப்பாலும் அது பற்றிய சில உண்மைகள் உண்டு.

வடவேங்கடம் முதல் குமரி வரையில் தமிழ் பேசப்பட்டது. அதுதான் தமிழ்நாடு என்று தொல்காப்பியர் காலம் முதல் நிறைய ஆதாரங்கள் உண்டு.

தமிழகத்தின் வரலாறு என்பது, மொழி வழியாக மாநிலம் அமைந்தது என்பது மிகப்பெரிய பின்னணியைக் கொண்டது. அதைப் பேராசிரியர் பெரியார் இந்நூலில் ஆதாரப்பூர்வமாகச் சுட்டிக்கட்டியிருக்கிறார்.

எல்லைப் போராட்டம் நடந்தபோது அன்றைக்கு ம.பொ.சி. மட்டுமே குரல் கொடுத்தார். வடக்கெல்லைப் போராட்டத்தை அவருடைய தமிழரசுக் கழகம் முன்னின்று நடத்தியது. அவருடன், தளபதி விநாயகம், மங்களம்கிழார், ரஷத் போன்றவர்களெல்லாம் வெகுண்டெழுந்து போராடினார்கள். ஏராளமான தமிழரசுக் கழகத் தோழர்கள் சிறைப்பட்டார்கள். இரண்டு பேர் உயிர் இழந்தார்கள். அது ஒரு நெடிய வரலாறு.

யானை வாயில் போன கரும்பு திரும்பி வருமா? என்றால் வராது என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் வந்தது.  திருத்தணியும் சேர்ந்து ஆந்திராவிற்குப் போய்விட்டது. மொழி வாரி ஆணையம், சர்தார் கே.எம்.பனிக்கர் தலைமையிலே மத்திய அரசு அமைத்த ஆணையம் சித்தூர் மாவட்டம் முழுவதையுமே ஆந்திராவிற்குக் கொடுத்துவிட்டது. வேறு வழியில்லாமல் எல்லாக் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட காலகட்டத்தில் ம.பொ.சி. மட்டும் அதை ஏற்கவில்லை. 

ம.பொ.சி. – ராஜாஜி

அவர் சொன்னார், மாலவன் குன்றம் போனால் என்ன வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டுமென்று. அதற்காகப் போராடினார். பெரும் போராட்டம் நடைபெற்றது. அதன் விளைவாக படாஸ்கர் கமிஷன் அமைக்கப்பட்டு அது கடைசியாகத் திருத்தணி தாலுகாவை தமிழ்நாட்டிற்குத் திருப்பிக் கொடுத்தது. யானைவாயில் போன கரும்பை மீட்டு வந்தவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. என்றால் அது மிகையாகாது. அவர் போராடியிருக்காவிட்டால் திருத்தணி இன்று நம்மோடு இல்லை.  ஆந்திராவோடுதான் இருந்திருக்கும்.

அதேபோல், தெற்கெல்லையில் நடந்த போராட்டமென்பது மிகவும் சோக வடிவமானது. நேசமணி, நத்தானியல் பி.எல்.மணி, காந்திராமன் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து போராடினார்கள்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த நாஞ்சில் நாட்டுப் பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டுமென்று அவர்கள் போராடினார்களே தவிர, தமிழ் நாட்டுத் தலைவர்கள் யாரும் அதற்காகப் போராடவில்லை. ஏறத்தாழ 12 பேருக்கும்மேலே அன்றைக்குச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முதலமைச்சராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளை பிரஜா சோசலிசக் கட்சியைச் சேர்ந்தவர். அவரும் காங்கிரசும் சேர்ந்து அங்கே ஆட்சியமைத்தார்கள். குமரி மாவட்டத் தமிழர்கள் நாங்கள் தமிழ்நாட்டோடுதான் இருப்போம் என்று போராடியபோது, பட்டம் தாணுப்பிள்ளை போராடியவர்களைச் சுட்டுத்தள்ளச் சொல்லி வெறித்தனமாக உத்தரவிட்டார். ஆனால் அந்தக் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்த டாக்டர் லோகியா கொதித்தெழுந்து அறிக்கை வெளியிட்டார்.

“ஒரு சோசலிஸ்ட்டு ஆட்சியில், ஜனநாயக முறையில் போராடிய மக்களை ஒடுக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி குறித்து நான் வெட்கப்படுகிறேன். அதைவிட மோசம், கொடுமை அங்கே 12 உயிர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது. அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்காக பட்டம் தாணுப்பிள்ளை தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்”. இவ்வாறு டாக்டர் லோகியா அறிக்கை வெளியிட்டார். இதெல்லாம் வரலாறு. 

நேசமணி

நேசமணி போன்றவர்கள் போராடியதன் விளைவாக குமரி மாவட்டத்தின் ஒரு பகுதியாவது நம்மோடு சேர்ந்தது. தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை ஆகியன எல்லாம் பறிபோனாலும் குமரி மாவட்டம் நம்மோடு சேர்ந்தது. இதற்கு குமரி மாவட்ட மக்களின் போராட்டமும், தியாகமும்தான் காரணம். அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நேசமணி, ம.பொ.சி போன்றவர்களுக்கு ஆதரவு கொடுத்திருந்தால் இந்தப் பகுதிகளை எல்லாம் இழந்திருக்கமாட்டோம்.

சென்னை நகரத்தைப் பற்றி நூலாசிரியர் பெரியார் பல குறிப்புகளை தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார். ‘மதராஸ் மனதே’ என்று ஆந்திரர்கள் போராடினார்கள். ஆந்திரர்களின் ஒற்றுமைக்குக் காரணம் என்ன?

அது பற்றி ம.பொ.சி ‘எனது போராட்டம்’ என்னும் தனது நூலில் சுட்டிக் காட்டியிருக்கிறார். “ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் எந்தக் கட்சியாக இருந்தாலும், அதாவது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிரஜா, சோசலிஸ்ட் என எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்கள் ஆந்திர மகாசபை என்ற குடையின் கீழ் ஒன்றாக நிற்கிறார்கள். விசால ஆந்திராவில் எந்தெந்தப் பகுதிகள் இருக்கவேண்டும் என்பதை அவர்கள் கட்சி சார்பில் போராடவில்லை. ஆந்திரர் என்ற ஒரே உணர்வுடன் ஆந்திர மகாசபையை அமைத்துப் போராடினார்கள். ஆனால், தமிழகத்தில் அப்படி ஒரு குடையின் கீழ் இணைந்து போராடவில்லை” என்று ம.பொ.சி தனது நூலில் மிகவும் துயரத்துடன் எழுதியுள்ளார்.

ஆந்திரர்கள் எந்த அளவிற்கு ஒன்றுபட்டிருந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்றத்தில் அவைத் தலைவராக இருந்த அனந்த சயனம் ஐயங்காரும் விசால ஆந்திராவிற்கு ஆதரவு கொடுத்ததைக் கூறலாம். இவர்களின் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்ட பதவிகள். ஆனால், ராதாகிருஷ்ணனும், அனந்த சயனமும் மத்திய அரசியலில் அங்கம் வகித்த ஆந்திரர்களுடன் ஒன்று சேர்ந்து ‘விசால  ஆந்திரத்தில் சித்தூரும், சென்னையும் சேர்க்கப்படவேண்டும்’ என்று பிரதமர் நேருவுக்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுத்தனர்.

இந்தக் காலகட்டத்தில் ம.பொ.சி. சென்னை நகரசபையில் ஆல்டர் மேனாக இருக்கிறார். சென்னை மேயராக இருந்தவர் செல்வராயன். அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ம.பொ.சி.யும், செல்வராயனும் சேர்ந்து, உறுப்பினர்களின் ஆதரவையெல்லாம் ஒன்று திரட்டி, சென்னை நகரம் தமிழர்களுக்கே சொந்தமென்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவந்தார்கள். மிகப் பெரும்பான்மையான ஆதரவுடன் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்கள். அந்தத் தீர்மானம்தான் அன்றைக்கு நேரு மனதை மாற்றியது. 

டாக்டர் ராதாகிருஷ்ணன்

அதற்குமுன் நேரு என்ன செய்தார்… ஆந்திரர்கள் மதராஸ் மனதே என்கிறார்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன், அனந்த சயனம் ஐயங்கார் போன்றவர்களும் வற்புறுத்துகிறார்கள். ஆகவே நேரு ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டத்திற்கு ஆளாகி, அவர் என்ன சொன்னார் என்றால்… இரண்டு மாநிலங்களுக்கும் சேர்ந்து சென்னை பொதுத் தலைநகரமாக இருக்கும் என்று சொன்னார். பஞ்சாப்பிற்கும், ஹரியானாவிற்கும் பொதுத் தலைநகரமாக சட்டீஸ்கர் இருப்பதைப் போல். சட்டீஸ்கர் யாருக்குச் சொந்தமென்று அன்றைக்கு முடிவு செய்யாத காரணத்தால் இன்றைக்கும் சண்டை நடக்கிறது. இதைப்போல நேரு ஒரு முடிவு சொன்னார். அப்போது ம.பொ.சி. வெகுண்டெழுந்து  செல்வராயன் துணையுடன் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். 

அதுமட்டுமல்ல, அன்றைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு, காமராசர் தலைமையில் கூடி சென்னை நகரம் தமிழர்களுக்கே சொந்தமானது என்று தீர்மானம் போட்டு டெல்லிக்கு அனுப்பியது. அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜி நேருவுக்குக் கடிதம் எழுதினார். 

சென்னை நகரம், தமிழர்களுக்குச் சொந்தமானது. ஆந்திரர்கள் தனி மாநிலம் வேண்டுமென்று கேட்ட பிறகு அவர்கள் பிரிந்துபோய் தனித் தலைநகரத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டுமே அல்லாமல், சென்னை நகரத்தை உரிமைக்கொண்டாட அவர்களுக்கு உரிமை கிடையாது. சென்னை நகரம் தமிழர்களுக்குச் சொந்தமானது. ஆனால் சென்னை இரண்டு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகரமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் முடிவு சொல்வீர்களேயானால், இந்தக் கடிதத்தையே எனது ராஜினாமாவாக எடுத்துக்கொள்ளலாம் என்று எழுதியிருந்தார். அப்படி எழுதுவதற்கான துணிவு அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ராஜாஜிக்கு இருந்தது. அதன் பின்னணியில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. இருந்தார் என்பது மறுக்கமுடியாத வரலாறு.

அதேபோல், ஐக்கிய கேரளம் வேண்டுமென்று கேரளர்கள் போராடிக்கொண்டிருந்த போது, கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஏ.கே.கோபாலன் தேவி குளம், பீர்மேடு எங்களுக்குத்தான் சொந்தமென்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அப்போது தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த ஜீவானந்தம் கொதித்தெழுந்தார்.

ஜீவானந்தம்

உண்மையான கம்யூனிஸ்டு இப்படிப் பேசமாட்டான். ஏ.கே.கோபாலனின் இந்த அறிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். தேவிகுளம், பீர்மேடு சர்ச்சைக்குரிய பகுதி. எங்களுக்கும் அதிலே உரிமையிருக்கிறது. ஆகவே, ஏ.கே.கோபாலன் கருத்தை தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ளாது என்று சொல்லும் துணிவு ஜீவானந்தத்திற்கு இருந்தது. அதன் காரணமாக அவர் கட்சிக்குள்ளே பிரச்சனைகள் எல்லாம் வந்தன. ஜீவானந்தம் அதையெல்லாம் சந்தித்தார். இப்படி தமிழ்நாட்டு எல்லைப் பகுதிக்காக இவர்கள் எல்லோரும் போராடினார்கள்.” என்று பழ.நெடுமாறன் பேசினார்.

கடந்த ஆண்டு முதல்  தி.மு.க. தலைமையில் அமைந்த ஆட்சியில் எல்லைப் போராட்டத் தியாகிகள் 110 பேருக்கு தலா ரூ.1 லட்சம் பொற்கிழி வழங்கப்பட்டது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் 14 பேருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி, இப்பணியைத் தொடங்கி வைத்தார்.

நாடு விடுதலை பெற்ற பின், 1956-ம் ஆண்டு நவ.1-ம் தேதி நாடுமுழுவதும் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. அவ்வாறு பிரிந்தபோது, தமிழர்கள் அதிகம் வாழும்பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க நடந்த போராட்டங்களில் பலர் ஈடுபட்டு உயிர்நீத்தும், சிறை சென்றும் தியாகம் செய்துள்ளனர்.

போராட்டங்களில் ஈடுபட்டு, தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ம் நாளை எல்லைப் போராட்ட தியாகிகள் நாளாக தமிழக அரசு அனுசரிக்கிறது.

தமிழர் வாழ்ந்த பகுதிகளை தமிழகத்தோடு இணைக்கப் போராடிய தியாகச் செம்மல்களின் புகழை நினைவில் கொள்வோம்.

எல்லைப் பிரச்னையில் தொடரும் தொல்லைப் பிரச்னை

கேரள மாநில அரசு கடந்த நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து அந்த மாநிலம் முழுவதும் டிஜிட்டல் ரீ சர்வேவை தொடங்கியது. கேரள மாநில அரசு நடத்தும் இந்த டிஜிட்டல் ரீ சர்வேயால், தமிழகம் கிட்டத்தட்ட சுமார் 1000 சதுர கிலோமீட்டர் வரையிலான பரப்பை கேரளாவிடம் இழக்கும் அபாயம் உள்ளதாக, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தமிழக அரசுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

கேரளா அரசு 14 மாவட்டங்களிலுள்ள 200 கிராமங்களில் டிஜிட்டல் ரீ சர்வே செய்யும் இடங்களை அறிவித்திருந்தது. இந்த சர்வே பணியில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 1500 சர்வேயர்கள், 3200 உதவியாளர்கள், 4 வருடங்களில் தொடர்ச்சியாக பணி செய்து முடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

இதனால் தமிழகத்தை ஒட்டியிருக்கும் கேரளத்தின் 7 மாவட்டங்களிலுள்ள, 15 தாலுக்காக்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தேனி மாவட்ட விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

காரைக்குடி நா.கிருஷ்ணமூர்த்தி

மதுரை எல்லைக் காவலர் மற்றும் மொழிப்போர் தியாகிகள் சங்கத் தலைவர் காரைக்குடி நா.கிருஷ்ணமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் “நவம்பர் 1ஆம் தேதி எல்லைப் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்களான மார்ஷல் நேசமணி, சாம் நத்தானியல், பி.எஸ்.மணியம், சிலம்புச்செல்வர் ம.பொ.சி. கவிஞர் கா.மு.ஷெரீப், சின்ன அண்ணாமலை போன்ற தலைவர்களை மனதில் நிறுத்துவோம். அதேபோல் போராட்டத்தில் பங்கேற்று போலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குத் தங்களது இன்னுயிர்களை ஈந்த தியாகிகளையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கு வீர வணக்கத்தைச் செலுத்துவோம்” என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!