பார்வைக் குறைபாட்டை பொருட்படுத்தாமல் பல்வேறு சிறப்பான ஓவியங்கள் வரைந்தவரும் நூல்கள் பல எழுதியவருமான மனோகர் தேவதாஸ் மறைந்துவிட்டார்.
மனோகர் தேவதாஸ் மதுரையின் பெருமை மட்டுமல்ல, தனது கோட்டோவியம் மூலமாக உலகம் முழுவதும் மதுரையைக் கொண்டு சென்று பெருமைப்படுத்தியவர்.
மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளிதான் மனோகர் தேவதாஸ் படித்த பள்ளியாகும். படிக்கும்போதே ‘பெர்ஸ்பெக்டிவ் ஆர்ட்’டில் இவருக்கு ஈடுபாடு உண்டு. கடினமான கலையான கோட்டுச் சித்திரங்களை வரைவதென்பது இவருக்கு எளிதாக கைவந்தது. அதுவே இவருக்கு ஒரு தனிச் சிறப்பையும் தந்தது.
அமெரிக்கா சென்று படித்தவராயினும் மதுரை வாழ்க்கைதான் அவருக்கு மகத்தானதாக இருந்தது.
பாரம்பரியக் கட்டடங்களையும் கோவில் கோபுரங்களையும் வரைவதில் புகழ் பெற்றிருந்த மனோகர் தேவதாஸ் காதல் மணைவி மஹிமாவுடன் ஒன்பதாவது திருமண நாளைக் கொண்டாடியபோது எதிர்பாராத சில துயரச் சம்பவங்கள் நிகழ்ந்தது.
விபத்தில் மணைவி மஹிமா பாதிக்கப்பட்டு கழுத்துக்குக் கீழ் செயல்படாதவராகிப் போனார். சக்கர நாற்காலியே வாழ்க்கை என்றாகிப்போனது. மனோகர் தேவதாஸுக்கு ‘ரெட்டினைட்டிஸ் பிக்மன்டோஸா’ என்ற கண்நோய் தீவிரமடைந்து பார்வைக் குறைபாட்டைக் கொடுத்தது.
ஆனால் மனோகர் தனது பிரச்னையைப் பெரிதுபடுத்திக் கொள்ளாமல் மனைவி மஹிமாவை முன்பைவிட அதிகமாக நேசித்தார். அவரை ஒரு குழந்தையைப் போல கவனித்துக் கொண்டார். சிறிது நேரம்கூடப் பிரியாமல் மனைவியின் அனைத்துத் தேவைகளையும் கவனித்துக்கொண்டு அவருக்குச் சேவை செய்வதை பாக்கியமாக்க கருதினார்.
மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவும் அவரது புலமையை வெளிப்படுத்தும் விதத்திலும் தான் வரையும் ஓவியங்களுக்கு அவரைக் கொண்டு குறிப்புகளை எழுதச் செய்து அதை வாழ்த்து அட்டையாகப் போட்டு அதன் மூலம் வந்த வருமானம் முழுவதையும் ஏழை நோயாளிகள் கண் சிகிச்சைக்காகத் தானமாக வழங்கினார்.
இவரது கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைந்து வந்தது. பார்வை முழுமையாகப் போவதற்குள் நிறைய படங்களை வரைந்துவிட வேண்டும் என்ற துடிப்புடன் பல இடங்களுக்கும் பயணம் செய்து காலத்தால் அழியாத காவியங்களாகப் பல ஓவியங்களை வரைந்தார்.
பார்வைக் குறைபாடு இருந்தாலும் ஓவியத்தில் குறைபாடு வந்துவிடக்கூடாது என்பதற்காக வரையப்போகும் பாரம்பரிய கட்டடத்தை ஸ்கெட்ச் செய்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல் அவுட் லைன் போட்டுக் கொள்வார். மேலும் சம்பந்தப்பட்ட இடத்தை போட்டோவும் எடுத்துக் கொள்வார். பின் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஒரு ஓவியமாக மாற்றுவார்.
தனது ஓவியங்களை மையமாக வைத்து பல புத்தகங்களும் எழுதியுள்ளார்.
மதுரை வீதிகள், திருவிழாக்கள், புகழ் வாய்ந்த கட்டடங்கள், வைகை ஆறு, இயற்கை எழில் கொஞ்சும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் என மதுரை மண்ணின் அடையாளங்களை மிக அழகாகத் தீட்டியதால் மனோகர் தேவதாஸ் மதுரையின் ஓர் அடையாளமாகவே மாறிப்போனார். அவரது உன்னதக் கலைச் சேவைக்காக பத்மஸ்ரீ உள்ளிட்ட பல கவுரவ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மனைவியின் மறைவிற்குப் பிறகு சென்னையில் வாழ்ந்த மகள் வீட்டிலும் மதுரை வீட்டிலுமாக மாறி மாறி வாழ்ந்துவந்த மனோகர் தேவதாஸ் தனது 86ஆவது வயதில் நேற்று (7-12-2022) மறைந்தார்.
83 வயதில் பார்வை முழுவதையும் இழந்த நிலையில் இப்போதாவது ஓய்வு எடுப்பீர்களா? என்று நண்பர்கள் வேடிக்கையாகக் கேட்க “ஓய்வா? அது என் சந்தோஷத்திற்கும் மனநிம்மதிக்கும் எதிரி ஆயிற்றே” என்றவர் இரண்டு புத்தகங்களை எழுதி அதை வெளியிடுவதில் மும்முரமாக இருந்தார்.
தனது வேதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றிக்கொண்ட மனோகர் தேவதாஸ் என்ற மகத்தான கலைஞன் தான் வரைந்த மகத்தான ஓவியங்கள் மூலமாக என்றும் நம்முடன் வாழ்வார்.
-எல். முருகராஜ் முகநூல் பக்கத்திலிருந்து…