பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே ஒரு கி.மீ. சுற்றளவிற்கு வெளியே குவாரிகள் இயங்கலாம் என டிசம்பர் 14ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதைப் பார்த்து சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசின் தொழில்துறை இது தொடர்பாக பிறப்பித்திருக்கும்
டிசம்பர் 14-ம் தேதியிட்ட அரசாணையில், “கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி அன்று தமிழக அரசின் தொழில் துறையால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் சுரங்கம் தோண்டுதல், பாறை உடைத்தல் மற்றும் அரைத்தல் ஆகிய பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம், ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருந்த பல குவாரிகள் செயல்பட முடியாமல் இருந்தது அரசின் கவனத்துக்கு வந்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 16ம் தேதி நடைபெற்ற சுரங்கத்துறை மாவட்ட அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில், குவாரி, சுரங்கம் தோண்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க முடிவு செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே காட்டை அழித்து நாட்டைத் திருத்தப்போய் வனவிலங்குகள் இரை தேடி வந்து மக்களுக்கும் விலங்குகளுக்கும் முரண் ஏற்பட்டுவருகிறது. அதனால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
தற்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் ஒரு கி.மீட்டர் அளவில் கல் குவாரிகளை இயக்கலாம் என்று அரசாணைப் பிறப்பித்தது வனவிலங்குகளுக்கு மட்டுமல்ல, மக்களின் சூற்றுச்சூழலுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அரசுக்குத் தெரியாதா என்று பல கட்சியினரிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கனிம வளத்தைப் பொறுத்தவரை மணல் குவாரியோ, கல் குவாரியோ எதுவாக இருந்தாலும் பணம் கொழிப்பதால் அங்கு விதிமீறல்கள் தாராளமாக நடக்கின்றன. அதிலும் கிரானைட் குவாரிகள் என்றால் கோலார் தங்கவயல் சுரங்கத்தில் தங்கத்தை வெட்டி எடுப்பதைப் போல பணம் கொழிக்கும் இடம் என்பதால் கொடூரமான முறையிலும் கனிம வளத்தை அழிக்க முனைகின்றனர். அரசுக்கு இதனால் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகின்றது என்றாலும் இதற்கு சில அரசுத் துறையினரும் உடன்பட்டு துணை போன்கிறனர் என்பது அவலம்.
“ஏற்கனவே வனப்பகுதிகளில் உணவு மற்றும் நீர்ப் பற்றாக்குறை காரணமாக வன விலங்குகள் உணவு தேடி ஊருக்குள் வரும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. அது மட்டுமின்றி அவற்றின் வழித்தடங்கள் அழிக்கப்பட்டு வாழ்விடங்கள் சுருங்கி வருவதால் மனிதர் – வன விலங்குகள் மோதல் போக்குகளும் அதிகரித்து இருதரப்பிலும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. காடுகளின் பரப்பளவை அதிகரிக்கப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதாகக் கூறிக்கொண்டு மறுபுறம், காப்புக்காடுகளை அழிக்கும் தமிழ்நாடு அரசின் இத்தகைய அறிவிப்பு முற்றிலும் முரணானதாகும்” என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தமிழகத்தில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகளும் இருபதுக்கும் மேற்பட்ட சுரங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில் 1,200 எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணல் உற்பத்தி செய்யும் குவாரிகள் செயல்படுகின்றன. மற்ற குவாரிகளில் ஜல்லிக் கற்கள் தயாரிக்கப்படுகின்றன.
அனுமதிக்கப்பட்ட குவாரிகளில் குறிப்பிட்ட அளவு ஆழம் மட்டுமே தோண்டி பாறைகளை எடுத்து, ஜல்லிக் கற்களாக உடைக்க வேண்டும். ஆனால், 300 அடிக்கு மேலும் தோண்டி பாறைகளை எடுக்கின்றனர். இதனால், பெரிய மலைகள் தற்போது குன்றுகளாக மாறிவிட்டன. குன்றுகள் இருந்த பகுதிகளோ 300 அடி ஆழம் கொண்ட அதலபாதாளக் கிணறாக மாறிவிட்டன. ஆனால், அரசுக்கு மிகக் குறைந்த தொகையையே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செலுத்துகின்றன. இதனால் அரசுக்குப் பல கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இப்படி குவாரிகளை எடுப்பவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதியின் ஆதரது பெற்றவர்களாகவே இருப்பதுதான் அவர்களின் பலம் ஓங்கியிருக்கிறது என்கின்றனர் பொதுப் பார்வையினர்.
“வளங்களை பறிகொடுத்து அரசின் வருவாயைப் பெருக்க எந்தத் தேவையும் இல்லை, காப்புக்காடுகளைச் சுற்றி கல்குவாரிகள், சுரங்கங்களை அமைக்க அனுமதி வழங்கிப் பிறப்பிக்கப்பட்ட ஆணையை அரசு ரத்து செய்ய வேண்டும்” என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குரல் கொடுத்துள்ளார்.
“காப்புக்காடுகளாக இருந்தாலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்தாலும் அதைச் சுற்றியுள்ள ஒரு குறிப்பிட்ட தொலைவு, வெளிப்புற சக்திகளின் எதிர்மறையான அழுத்தங்களில் இருந்து வனத்தை காப்பதற்கான இடை மண்டலமாக (Buffer Zones) அறிவிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. அமைப்பு வலியுறுத்துகிறது. இதே நோக்கத்தை உச்ச நீதிமன்றமும் பல தீர்ப்புகளில் உறுதி செய்திருக்கிறது. ஐ.நா. அமைப்பும், உச்சநீதி மன்றமும் எந்த நோக்கத்திற்காக இதை வலியுறுத்துகின்றனவோ, அதே நோக்கத்திற்காகத் தான் தமிழக அரசும் காப்புக்காடுகளைச் சுற்றி குவாரிகளையும், சுரங்கங்களையும் அமைக்கத் தடை விதித்தது.
அது உன்னதமாக நடவடிக்கை. ஆனால், அந்த உன்னத நடவடிக்கையை எடுத்த தமிழக அரசே அதை சிதைக்கத் துடிப்பது மிகவும் பிற்போக்கான செயல் ஆகும்” என்றார் அன்புமணி.
கரூர் மாவட்டத்தில் சமூக ஆர்வலர் ஜெகநாதன் தி.மு.க.வின் காளிப்பாளையம் பகுதி கிளை செயலாளராகவும் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் சமூக ஆர்வலராகவும் சமூக சேவை செய்து வந்துள்ளார். இவரை ஏற்கெனவே இரண்டு முறை தாக்குதல் நடத்தியுள்ளார் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கல்குவாரி நடத்தும் செல்வகுமார். ஜெகநாதனை மூன்றாவது முறையாகப் பழிதீர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் கூலிப்படையை ஏவி வாகனம் ஏற்றிக் கொலை செய்துள்ளார் அ.தி.மு.க.வைச் சேர்ந்த செல்வகுமார்.
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது தலைமையில் உண்மை கண்டறியும் குழு ஆய்வு செய்ததில் கரூரில் பெரும்பாலான கல் குவாரிகள் அரசு அனுமதி பெறவில்லை. அரசு அனுமதி பெற்றிருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 50 அடி ஆழத்திற்குமேல் வெடிவைத்து பாறைகளை வெட்டி எடுத்து கல்குவாரி செயல்பட்டு வருகிறது. என்று தெரியவந்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு அனுமதி இன்றி கல்குவாரி நடத்தியதாக வழக்குத் தொடுத்த ஜெகநாதனை கொலை செய்த செல்வகுமார் கைது செய்யப் பட்டுள்ளார். கல்குவாரி தொழிலில் கொலை வரை போய்விட்டதற்கு இது ஒரு சான்று அல்ல, பல சான்றுகள் நடந்துள்ளன.
நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் மருத்துவர் கவிதா செண்பகம் என்பவர், தமிழ்நாடு மலைப்பகுதி கட்டடங்கள் சட்ட விதிகளை மீறி, ரிசார்ட் கட்டி வருவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் 2021ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, “தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது” என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.
இந்தப் பூமியின் நிலைத்தன்மைக்கு ஆதாயமாய் அமைவன காடுகள். இந்தப் பூமியின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட முப்பது சதவிகிதமான பகுதி காடுகளினால் சூழப்பட்டுள்ளது. அதை அழிக்கத் துணைபோகலாமா?