


அக்கா என்ற சொல்லுக்கு உணர்வளித்தது எனில் வண்ணதாசன்தான். அவர் சொல்லிடும் பக்கத்து வீட்டு, ஒரே தெருவில் உள்ள அக்காக்கள் எப்பொழுதுமே நம் இளம்பிராயத்தோடு தொக்கி நிற்கிறார்கள். நம் யெளவனத்தின் பரபரப்பில் ஒரு தூணாக அவர்களின் மரித்துப்போன ஆசைகளை நம்மில் செலுத்தும் விசையாகவே அந்தப் பக்கத்து வீட்டு அக்காக்கள் நம்முடன் வாழ்ந்திருக்கிறார்கள். பால்யத்தில் வாழும் நிலப்பரப்பு, டீக்கடைகள், கோவில்கள், நண்பனின் வீடுகள் என இடம் சார்ந்த குறியீடுகள் வாழ்வில் என்றும் தொக்கி நிற்பவை.

இன்றைய கதவைத் திறவா 800 சதுர அடி அபார்ட்மெண்ட் வாழ்க்கை அந்த நேசத்தின் அருமையை உணர்ந்ததே இல்லை. பிறந்ததிலிருந்து ஒரே ஊர், ஊர் முழுவதும் உறவினர்கள் எனப் பெருமை பேசும் மனிதர்களை முன்பெல்லாம் நான் ஏக்கமாகப் பார்ப்பதுண்டு. ஏனெனில் நாங்களெல்லாம் என் மாமியாரின் பாஷையில் தலையில் பெட்டியைத் தூக்கி அலைந்தவர்கள், நாடோடிகள். மரத்தடியில் சோறு பொங்கும் கூட்டம். சொந்த வீடற்றும் சொந்த ஊரின் அடையாளமற்றும் வாழ்பவர்களுக்குப் பிறந்த ஊரின் மடியில், ஒழுகும் கூரையின்கீழ் நிற்கும் ஏழையாயினும் வீடற்றவனை நோக்கி எள்ளப்படும் வார்த்தைகள்தான் அது.
நாங்கள் எங்கள் சொந்த ஊரை விட்டு என் அம்மாவின் பணிநிமித்தம் தொலைவில் இருந்தோம். வேறு வேறு கிராமங்கள், சிறு நகரங்கள்… படிப்பதற்காக உறவினர் வீடுகள் என என் பால்யத்தின் இடங்கள் வேறுபட்டே இருந்தன. திருவிழா, பண்டிகைக்குக்கூட அம்மாவின் உடன்பிறந்தவர்களுடன் கொண் டாடிப் போனதில் சுத்தமாய் ஊர்வாசம் விட்டுப்போனது. இன்றும் கூட யாரேனும் சொந்த ஊர் பற்றிக் கேட்டால் சொல்ல எனக்கு நிறைய ஊரிருக்கும். ஊரைச் சொல்வதில் நிறைய குழப்பமுமிருக்கும்.

பிறந்த ஊரைச் சொல்வதா? பள்ளிப் படிப்பா? அப்பாவின் சொந்த ஊரா? கணவரின் சொந்த ஊரா? தற்போது இருக்கும் ஊரா? எனக் குழம்பி முடிக்கையில் கேள்வி கேட்டவர் சற்று சந்தேகத்துடன் ஒரு உளவாளியை பார்ப்பது போன்ற பிரமையைத் தந்துவிடுவார்.

இரண்டு நாட்களுக்கு முன் முகில் எழுதிய ‘யூதர்கள் அபுனைவ்’வைப் படிக்க நேர்ந்தது. சில தகவல்களை ஹிட்லர் பற்றிய கதைகளிலும் பா. ராகவன் எழுத்து களிலும் படித்திருக்கிறேன். போகன் சங்கர் எழுதிய ஒரு கட்டுரையில் யூதப் பெண் ஒருத்தி கேரள அடையாளங்களுடன் தன் தேசத்தை நோக்கிப் பயணித் ததை எழுதியிருப்பார். பார்த்தேயிராத ஒரு தேசத்தை கால அளவிலிருந்து உணவு, சூழ்நிலை அத்தனையும் மாறுபட்ட ஒரு சூழலை நம் சொந்த இடம் என்ற உணர்வினால் மட்டுமே அடைய முடியுமா என்ற கேள்வி இன்னும் மனதிலே தொக்கி நிற்கிறது. முகிலின் தரவுகள் கூடிய வார்த்தைகளில் ஒரு இனத்தின் நிலம் தேடுதலுக்கான வேட்கை எத்தனை தீவிரமானது எனப் புரிந்துகொள்ள முடிந்தது.
மதம், மொழி, சாதி போன்றவற்றைவிட மிகவும் ஆழமானது சூழலுக்கான நேசம் என்பதை நம்புகிறேன். வெளிநாட்டில் சந்திக்கையில் ஓரினமாகவே இருந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி எங்கூர்க்காரன் எனும் சேர்க்கை நெருக்கமானதாகவே உணர்ந்திருக்கிறேன். விதிவிலக்குகளை விட்டு விடலாம்.
அகதிகளாய் வாழும் வாழப்போகும் மனிதர்களை நினைத்தால் பயமாய் இருக் கிறது. வேரெடுத்து பிடுங்கி எறிந்தாற்போல எப்படி ஒரு நடுக்கமுடன் அவர்கள் வாழக்கூடும்? சென்னையில் அல்லது வெளிநாட்டில் தற்போது சொந்த ஊருக்குத் திரும்பமுடியாத அல்லது மனைவி, மக்களை மட்டும் அனுப்பிவிட்டு தனியே சிறைப்பட்டிருக்கும் நண்பர்களின் மனநிலை எவ்வளவு ஆழ்ந்த தனிமையையும் பாதுகாப்பற்ற தன்மையும் பெற்றிருந்திருக்குமென புரிந்துகொள்ள முடிகிறது.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது உண்மைதான். ஆனால் வேரென எங் கேனும் பிடிப்பு வைத்திருப்பது நல்லது எனத் தோன்றுகிறது. இதைப் பற்றி இன்னமும் எழுத நிறைய இருக்கிறது. மேலும் பேசுவோம்.
(தொடரும்)

பிறந்த ஊரையும் விட்டுவிட்டு நகர வாழ்க்கை எனும் அடுக்குமாடி சிறை வாழ்க்கை குறித்தான பதிவு பாராட்டுக்கள் சகோதரி.